01.வறுமையினை ஒழிப்பதற்காக வேண்டி 'கிராமிய சக்தி' வேலைத்திட்டத்தை செயற்படுத்தல் (விடய இல. 05)
அரசாங்கங்களின் பல்வேறு நடவடிக்கைகளினால் 1990ம் ஆண்டு 26.1% ஆக இருந்த வறுமை மட்டமானது 2011ம் ஆண்டளவில் 6.7மூ ஆக குறைந்தது. 2017ம் ஆண்டினை 'இலங்கையினை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும்' ஆண்டாக பிரகடனப்படுத்தி பிரதேச மட்டத்தில் மேலும் வறுமை ஒழிப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமிய சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் 2017ம் ஆண்டில் பிரதேச செயலக மட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் 700 கிராம சேவகர் பிரிவுகளை இனங்கண்டு, அக்கிராம சேவக பிரிவுகளில் வசிக்கும் 80 சதவீதத்தினர் கலந்துகொள்ளும் மகா சபை மற்றும் மேற்பார்வை குழுவினை உள்ளடக்கிய நிர்வனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட உள்ளது. அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு கிராமத்தில் வறுமையினை ஒழிப்பதற்காக அபிவிருத்தி நிதியுதவி செய்து கொடுக்கப்படவுள்ளது. 2017ம் ஆண்டின் இறுதியில் அனைத்து கிராம அபிவிருத்திக்கும் ஒரு மில்லியன் ரூபா வீதம் வழங்குவதற்கு ஏதுவான முறையில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
மேலும், உற்பத்தி கிராமங்களாக விருத்தி செய்வதற்கு உகந்த 300 கிராம சேவையாளர் பிரிவுகளை தெரிவு செய்து, ஏற்றுமதி செய்வதற்கு உக்நத உற்பத்திகள் அல்லது தேசிய தேவையினை பூர்த்தி செய்வதன் மூலம் இறக்குமதியினை குறைக்கும் உற்பத்திகளை விருத்தி செய்வதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை பெற்றுக் கொடுத்து புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அதனடிப்படையில் இவ் கிராமிய சக்தி வேலைத்திட்டத்தை அரச, தனியார் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் செயற்படுத்துவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான கல், மணல், மண் போன்வற்ற திரௌவியங்களை வழங்குவதற்கான முறையான செயன்முறையொன்றை அறிமுகப்படுத்தல் (விடய இல. 09)
இலங்கையின் அபிவிருத்தியினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதமாக மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்வதற்கும், சூழல் மாசுபடாமல் தடுப்பதற்கும், பல்வேறு மோசடிகளை இல்லாதொழிபப்பதற்கும், பலனுள்ள வழங்குனர்களை உறுதிசெய்வதற்கும் ஏதுவான முறையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை மகாவலி அதிகாரசபை மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றால் பரிபாலிக்கப்படுகின்ற பூமியிலுள்ள திரௌவியங்களை முறையான முறையில் பெற்று வழங்கும் செயன்முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. மருந்தாக்கல் தொழிற்றுறை அபிவிருத்தி (விடய இல. 10)
இந்நாட்டு மருந்தாக்கல் தொழிற்றுறையை நவீனமயப்படுத்தல் மற்றும் பரவச் செய்யும் ஆகியவற்றுக்காகவும் சந்தைக்கு பொருத்தமான போட்டித் தன்மையினை ஏற்படுத்திக் கொள்வதற்கான வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில், மருந்து உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற மூலப்பொருட்கள், இயந்திர சாதனங்கள் மற்றும் குறித்த தொழிற்சாலைகள் ஆகியவற்றை நிர்மாணிக்கும் போது தேவைப்படுகின்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வரிச்சலுகையினை பெற்றுக் கொடுப்பதற்கும், மருந்து உற்பத்தி துறைக்கு தேவையான முதலீட்டினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் உயிரியல் வலயம் (Biomedical Zone) அமைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04.பிணையகங்கள் பரிவர்த்தனை வரைவுச் சட்டம் (விடய இல. 13)
இலங்கையின் பொருளாதாரத்தில் மூலதனத்தை திரட்டுவதற்கான ஓர் மாற்றீடு வழியாக மூலதனச் சந்தையினை மிகவும் கவர்ச்சிகரமாக உருவாக்குவதில் ஓர் முக்கியமான தூணாக கருதப்படும் இப்பிணையகங்கள் பரிவர்த்தனை வரைவுச் சட்டத்தின் ஊடாக கட்டுப்பாடுகளும் இருப்புகளும் கொண்ட ஓர் ஆரோக்கியமான முறையுடன் கூடிய கடுமையான ஆளுகைக் கட்டமைப்பின் அமுலாக்கலூடாக ஆணைக்குழுவின் சுயாதீனத்தினை பலப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறான பல்வேறு நோக்கங்களை அடைந்துக் கொள்ளும் வகையில் 'பிணையகங்கள் பரிவர்த்தனை சட்டம்' எனும் பெயரில் புதிய சட்டம் ஒன்றை வரைவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. நெதர்லாந்தின் சலுகை நிதி வசதிகள் (விடய இல. 14)
நெதர்லாந்து அரசாங்கத்தின் மூலம், அந்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிர்வனம் ஒன்றின் ஊடாக இலங்கை கிராமிய பாலங்கள் அபிவிருத்தி உட்பட இன்னும் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு சலுகை அடிப்படையில் நிதியுதவி அளிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிர்வனத்தின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள வேiலைத்திட்ட முன்மொழிவுகளை மதிப்பிட்டு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. அரசுக்கு சொந்தமான கூட்டாதனம் மற்றும் கூட்டாதனமல்லாத சொத்துக்களில் நீண்ட காலமாக வசித்து வருகின்ற வாசிகளுக்கு அதன் உரித்தை வழங்கல் (விடய இல.15)
அரசுக்கு சொந்தமான கூட்டாதனம் மற்றும் கூட்டாதனமல்லாத சொத்துக்களில் 15 வருடத்துக்கு மேலதிகமாக வசித்து வருகின்ற வாசிகளுக்கு அதன் உரித்தை வழங்குவதற்கு தகுந்த இயந்திரமொன்றை தயாரிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. தனியார் - அரச ஒத்துழைப்பு (PPP) மாதிரியின் ஊடாக அரசத்துறையில் அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காக முதலிடல் (விடய இல. 16)
பல நாடுகளில் வெற்றியளிக்கப்பட்ட தனியார் - அரச ஒத்துழைப்பு (PPP) மாதிரியின் ஊடாக அரசத்துறையில் அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த மாதிரியின் ஊடாக வெளிநாட்டு முதலீடுகளை கவரும் கொள்வதற்காக இயந்திரமொன்றை தயாரிப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்தாலோசனை குழு மற்றும் வேலைத்திட்ட குழு என்பவற்றை நியமிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை (விடய இல. 17)
இலங்கை மற்றும் ரஷ;யா ஆகிய நாடுகளுக்கு இடையில் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ரஷ்ய சுற்றுப்பயணத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலை மற்றும் சிங்கப்பூரின் தேசிய மிருகக்காட்சிசாலை ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 18)
இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலைகளை உயரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சர்வதேச தரம் வாய்ந்தவையாக மாற்றியமைக்கும் நோக்கில், குறித்த தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான அறிவு, தேவையான தகவல் பரிமாற்றம், மிருகங்கள் தொடர்பில் புதிய தகவல்களை பரிமாறிக் கொள்ளல் ஆகிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூரின் தேசிய மிருகக்காட்சிசாலையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் நிலையான அபிவிருத்தி மற்றும் வன சீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10.தேசிய விஞ்ஞான மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 23)
தேசிய விஞ்ஞான மத்திய நிலையம் (National Science Centre – NSC) ஒன்றை அமைப்பதற்கு தேவையான அடிப்படை வேலைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி அளித்துள்ளதுடன், குறித்த பணியானது சர்வதேச தரத்தில் அமைய வேண்டி இருப்பதனால் இவ்வேலைத்திட்டத்தை திட்டமிடல் மற்றும் வடிவ நிர்மாண திட்டமிடல், தேசிய விஞ்ஞான மத்திய நிலையத்தை நிர்மாணித்தல், நிர்மாணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் ஆகிய பணிகளுக்காக ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள கலந்துரையாடல் குழுவொன்றினை நியமிப்பதற்கும், உகந்த நிர்வனமொன்றின் ஊடாக தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை பெற்றுக் பெற்றுக் கொள்வதற்கும் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11.இலங்கையின் 20 அரசாங்க வைத்தியசாலைகளுக்காக இலத்திரனியல் படக்காப்பகம், தொடர்பாடல் முறையினை ஸ்தாபித்தல் (விடய இல. 25)
வைத்தியசாலைகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் வைத்தியசாலைகளுக்காக இலத்திரனியல் படக்காப்பகம், நவீன தொடர்பாடல் முறை என்பவற்றை தெரிவு செய்யப்பட்ட 20 அரச வைத்தியசாலைகளில் ஸ்தாபிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12.வைத்தியசாலைகளில் மற்றும் பிரதேச வைத்திய வழங்குநர் பிரிவுகளில் வசதிகளை பலப்படுத்தல் (விடய இல. 26)
712 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் 134 வைத்தியசாலைகளில் மற்றும் 26 பிரதேச வைத்திய வழங்குநர் பிரிவுகளில் மருந்துப்பொருட்கள் களஞ்சியசாலை வசதிகளை விருத்தி செய்வதற்கும், 954 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் பிரதேச வைத்தியசாலை மட்டம் வரை வைத்திய வழங்குநர் முகாமைத்துவ தகவல் தொகுதியினை வியாபிக்கும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. தொற்றா நோய்கள் பரவுவதற்கு எதிராக போராடுவதற்காக என்.சீ.டீ. எலாயன்ஸ் லங்கா நிர்வனத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் (விடய இல. 27)
தொற்றா நோய்கள் பரவுவதற்கு எதிராக போராடுவதற்காக வேண்டி தேசிய சுகாதார சங்கங்கள் பல இணைந்து என்.சீ.டீ. எலாயன்ஸ் லங்கா எனும் அமைப்பை உருவாக்கின. குறித்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட உள்ள 05 வருட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வேண்டி இலங்கை அரசாங்கத்தினால் வருடாந்தம் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சுக்கு ஒதுக்கும் தொகையில் வருடாந்தம் 05 மில்லியன் ரூபா வீதம் 2017ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 05 வருடங்களுக்கு குறித்த அமைப்பிற்கு வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. புதிய தேசிய வருமான சட்டம் (விடய இல. 29)
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள கொள்கை பத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய வருமான புதிய சட்ட மூலம் ஒன்றை வரைவதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. பொருளாதார சேவை கட்டணம் (திருத்த) சட்ட மூலம் (விடய இல. 31)
வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை உள்ளடக்கிய வகையில் 2006ம் ஆண்டு 13ம் இலக்க பொருளாதார சேவை கட்டண சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக சட்டமாதிபரினால் சிபாரிசளிக்கப்பட்ட திருத்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16.புதிய இலங்கை குடிவரவு குடியகழ்வு சட்டத்தினை வரைதல் (விடய இல. 37)
காலத்தின் தேவையினை உணர்ந்து பலமான குடிவரவு, குடியகழ்வு சட்டத்திட்டங்களை உருவாக்கும் நோக்கில் புதிய இலங்கை குடிவரவு குடியகழ்வு சட்டத்தினை வரைவதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் உள்விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பி. நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. வைத்தியசாலைகளில் இரசாயன கழிவுகளை முகாமைத்துவ வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த இடமொன்றை குத்தகைக்கு விடல் (விடய இல. 39)
வைத்தியசாலைகளில் இரசாயன கழிவுகளை முகாமைத்துவ வேலைத்திட்டமொன்றை முல்லேரியா வைத்தியசாலையுடன் இணைந்ததாக செயற்படுத்த முதுராஜவெல பிரதேசத்தில் அமைந்துள்ள 02 ஏக்கர், 01 ரூட், 23.99 பேர்ச்சஸ் பூமிப்பகுதியை 30 வருட கால பகுதிக்கு சிசிலி ஹனாரோ என்கெயா (தனியார்) நிர்வனத்துக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. இலகுவான புகையிரத மார்க்கம் (LRT) நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக வேலைத்திட்ட முகாமைத்துவ பிரிவொன்றை (PMU) ஸ்தாபித்தல் (விடய இல. 40)
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான முகவர் நிர்வனத்தின் (JICA) அனுசரனையில் கொழும்பில் முன்னெடுப்பதற்கு உத்தேசிக்ப்பட்டுள்ள 02 இலகுவான புகையிரத மார்க்கங்களுக்கான செயற்பாட்டு ஆய்வொன்றினை மேற்கொள்ளல், குறித்த வீதிகளை நிர்மாணித்தல் மற்றும் அதனை செயற்படுத்தல் ஆகிய வேலைத்திட்ட முகாமைத்துவ பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக நிறைவுத் தேயிலை பொதிகள் வெளியிடுதல் (விடய இல. 43)
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடத்தில் இலங்கை தேயிலையை பிரபல்யப்படுத்தும் நோக்கில் இலங்கை தேயிலைச் சபையின் தேயிலை ஊக்குவிப்பு மற்றும் விற்பனை நிதியத்தின் 100 மில்லியன் ரூபா பயன்படுத்தி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக நிறைவுத் தேயிலை பொதிகள் வெளியிடும் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவின் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. மின்சார நுகர்வோர் தமது வீட்டுத் கூரைகளில் நிறுவும் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய சூரிய சக்தி பலகைகளைப் பெற்றுக் கொள்வதற்கான கடன் தொடர்பில் வட்டி சார்ந்த சலுகையை வழங்குதல் (விடய இல. 44)
இந்நாட்டு மின் பாவனையாளர்களில் 40மூ ஆனவர்கள் மாதாந்த மின் கட்டணம் 300 ரூபாவுக்கும் குறைவாக இருப்பதனால், வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாதாந்த மின்சாரப் கட்டணம் ரூ. 2,000 தொகைக்கு அதிகமான வீடுகளுக்கு மட்டுமன்றி மாதாந்த மின் கட்டணம் ரூ. 2,000 தொகைக்கு குறைந்த மின்சார நுகர்வோருக்கும் நுகர்வோர் தமது வீட்டுத் கூரைகளில் நிறுவும் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய சூரிய சக்தி பலகைகளைப் பெற்றுக் கொள்வதற்கான கடன் சலுகையை வழங்குவதற்கும், அதற்காக அரச அல்லது தனியார் வங்கிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் கடன் தொகைக்காக வட்டி சார்ந்த சலுகையினை பெற்றுக் கொடுப்பதற்கும், கடன் தொகையினை ரூ.150,000 இலிருந்து ரூ.350,000 வரை அதிகரிப்பதற்கும் மின்வலு, மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. இலங்கை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு உரித்தான பேலியகொடை காணியினை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 52)
இலங்கை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு உரித்தான பேலியகொடை காணியானது அண்மைக்காலங்களில் எந்தவொரு நிதி உருவாக்கும் பொறிமுறைக்கும் உட்பட்டிருக்கவில்லை. எனினும் வணிக பெறுமதிவாய்ந்த குறித்த இடத்தை தங்குமிட வசதிகளுடன் கூடிய ஒரு அபிவிருத்தி பிரதேசமாக மாற்றுவதற்கு இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குறித்த பகுதியில் மேற்கொள்வதற்கு உகந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இனங்காண்பதற்கும், காணியை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை கண்காணிப்புச் செய்வதற்கும் மற்றும் கவனத்தில் கொள்வதற்காக அமைச்சரவையிடம் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை கலந்துரையாடல் குழுவை நியமனம் செய்வதற்கும், கலந்துரையாடல் இணக்கப்பாட்டுக் குழுவுக்கு உதவும் பொருட்டு கருத்திட்டக் குழுவை நியமிப்பதற்கும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற தொடர்மாடி வீடுகளுக்கு தபால் வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக தொடர்மாடி வீடுகளை நிர்மாணிக்கும் போது கீழ் மாடியில் தபால் பெட்டிகளை நிர்மாணிப்பதனை கட்டாயப்படுத்தல் (விடய இல. 56)
தொடர்மாடி வீடுகளில் காணப்படும் தபால் சேவை குறைப்பாட்டை நிவர்த்திக்கும் நோக்கில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற தொடர்மாடி வீடுகளுக்கு தபால் வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக தொடர்மாடி வீடுகளை நிர்மாணிக்கும் போது கீழ் மாடியில் தபால் பெட்டிகளை நிர்மாணிப்பதனை கட்டாயப்படுத்துவதற்கும், அவற்றை நிர்மாணித்து அவற்றை வீட்டின் இலக்கத்தின் கீழ் இலக்கமிட்டு வைத்திருப்பதற்கும், தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்களில் இவ்வாறான தபால் பெட்டிகளைக் கொண்ட பிரதேசமொன்று இன்மைக் காரணமாக அவ்வாறான தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்களில் தபால் பெட்டிகளைக் கொண்ட பிரதேசமொன்றை கீழ் மாடியில் தாபிப்பதற்கும், குறித்த பெட்டிகளின் திறப்புகளை குறித்த வீட்டு உரிமையாளர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு குறித்த அமைச்சுக்கு அறிவுறுத்துவதற்கும் குறித்த நிர்மாணத்தை மேற்கொள்ளும் போது குறித்த நிர்மாணத்துக்காகவும் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ எம்.எச்.எம். ஹலீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. 1901ம் ஆண்டு 25ம் இலக்க நாய்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல் (விடய இல. 57)
கட்டாக்காலி நாய்களின் பிரச்சினை நாளுக்கு நாள் வலுப்பெற்று செல்வதால், குறித்த பிரச்சினைக்கு தீர்வாக பொது இடங்களில் நாய்களை விட்டுச் செல்லும் குற்றத்திற்கு எதிராக குற்றவாளியாகும் ஒருவருக்கு ரூ. 25,000 இற்கும் மேற்படாத அல்லது 02 வருடங்களுக்கு குறையாத சிறைத் தண்டனை அல்லது இவ்விரு தண்டனைகளையும் விதிப்பதற்கு ஏதுவான முறையில் 1901ம் ஆண்டு 25ம் இலக்க நாய்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தை திருத்தஞ் செய்வதற்காக சட்ட வரைபை மேற்கொள்வதற்காக சட்ட வரைஞரிடம் ஆலோசனை வழங்குவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. கிராமிய பாலங்களின் நிர்மாணத்திட்டம் - கட்டம் 11 – மேலதிக 63 பாலங்களை நிர்மாணித்தல் (விடய இல. 58)
நாணயமாற்று விகிதாசார அதிகரிப்பு காரணமாக கிராமிய பாலங்களின் நிர்மாணத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒப்பந்த தொகையில் ஒரு தொகைப்பணம் எஞ்சுகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு குறித்த மிகுதி தொகையினையும் பயன்படுத்தி மேலதிகமாக 63 பாலங்களை நிர்மாணிப்பதற்கும், இவ் வேலைத்திட்டத்தின் கால வரையறையை 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 08ம் திகதியிலிருந்து மேலும் 03 மாதங்களுக்கு நீடிக்கவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. 1973ம் ஆண்டு 25ம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் கீழ் விளையாட்டு அமைச்சரினால் வகுக்கப்பட்ட கட்டளைத் தொடரை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (விடய இல. 60)
1973ம் ஆண்டு 25ம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 41வது பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் வகுக்கப்பட்ட 2016-10-27ம் திகதிய 1990/23ம் இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மற்றும், 2017-02-13ம் திகதிய 2006/13ம் இலக்கம் கொண்ட (மறுசீரமைப்பு) கட்டனையில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26. 1929ம் ஆண்டு 17ம் இலக்க நச்சு வகை, அபிங் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் கட்டளைச்சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 61)
போதையற்ற நாடு என்ற நல்லாட்சி அரசின் கொள்கைக்கு இணங்க பெருகி வரும் போதை பாவனையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், அபிங், மோபின், கொகேன், ஹெரோயின் மற்றும் கெனபீஸ் போன்ற அபாயகரமான ஒளடதங்களின் கொள்ளை வியாபாரத்தில் ஈடுபடல், தம்வசம் வைத்திருத்தல், இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்தல் தொடர்பாக வழங்கப்படும் தண்டனைகளை திருத்தம் செய்தல், புதிய அபாயகரமான ஒளடத வகைகளை 1929ம் ஆண்டு 17ம் இலக்க நச்சு வகை, அபிங் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் கட்டளைச்சட்டத்தில் இணைத்து அட்டவணையை திருத்தம் செய்தல், கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருக்கும் காலவெல்லையை திருத்தம் செய்தல் போன்ற பறிந்துரைகளை கவனத்திற் கொண்டு 1929ம் ஆண்டு 17ம் இலக்க நச்சு வகை, அபிங் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் 1984ம் ஆண்டு 13ம் இலக்க நச்சு அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டம் என்பன திருத்தம் செய்வது தொடர்பில் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
27. 2003ம் ஆண்டின் 27ம் இலக்க தகவல், தொடர்பு மற்றும் தொழில்நுட்பவியல் சட்டத்தை திருத்தம் செய்தல் (விடய இல. 62)
அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்ட தகவல், தொடர் மற்றும் தொழில்நுட்பவியல் தொடர்பான உபாயமுறை மற்றும் நிகழ்ச்சிகளை பலனுள்ள விதத்தில் செயற்படுத்துவதற்காக உகந்த நிர்வாக கட்டமைப்புக்கள், நிர்வாக மற்றும் செயற்பாட்டு முறைமைகளை ஸ்தாபிப்பதற்காக 2003ம் ஆண்டின் 27ம் இலக்க ஐஊவு சட்டத்தின் கீழ் அதிகாரங்களை செயற்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் குறித்த சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுக்க சட்டவரைஞரை கோருவதற்கு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரின் பெர்னாந்து அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
28. ஸ்ரீலங்கா ரெலிகொம் பிஎல்சி இன் துணை நிறுவனமான ஹியுமன் கப்பிட்டல் சொலூசன் (தனியார்) கம்பனியின் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்காக முன்வைக்கப்பட்ட தீர்வு (விடய இல. 63)
ஸ்ரீலங்கா ரெலிகொம் பிஎல்சி இன் துணை நிறுவனமான ஹியுமன் கப்பிட்டல் சொலூசன் (தனியார்) கம்பனியின் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரின் பெர்னாந்து அவர்களினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட காரணங்களை கவனத்திற் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் 2017ம் ஆண்டிலிருந்து 2020 ஆண்டு வரை 04 கட்டங்களாக ஹியுமன் கப்பிட்டல் சொலூசன் (தனியார்) கம்பனியின் அநுபவம் மற்றும் தொழில்தகைமைக் கொண்ட ஊழியர்களை ஸ்ரீலங்கா ரெலிகொம் பிஎல்சி உடன் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா ரெலிகொம் நிர்வனத்தின் பணிப்பாளர் சபைக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்தது.
29. மினிப்பே இடக் கரைக் கால்வாய் புனர் நிர்மாணிப்புக் கருத்திட்டத்தின் கட்டம் 03 இன் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தங்களைக் கையளித்தல் (விடய இல. 67)
மினிப்பே இடக் கரைக் கால்வாய் புனர் நிர்மாணிப்புக் கருத்திட்டத்தின் கட்டம் 03 இன் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் குறை விலைமனுக் கொண்ட பெறுமதி சேர் வரியின்றி 625.73 மில்லியன் ரூபா பணத் தொகைக்கு நவலோக கன்ஸ்ரக்ஸன் (தனியார்) நிறுவனத்துக்கு வழங்குவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
30. மெதிரிகிரிய நீர் வழங்கல் கருத்திட்டம், கட்டம் - 111 – பிசோபுர மற்றும் குமுதுபுற நீர் கோபுரங்களின் பிரதான குழாய்ப்பொறி நிலையங்கள் தொடர்பாக குழாய் பொருத்தல் மற்றும் வால்வுகள் பொருத்துதல் (விடய இல. 71)
மெதிரிகிரிய நீர் வழங்கல் கருத்திட்டம், கட்டம் - 111 – பிசோபுர மற்றும் குமுதுபுற நீர் கோபுரங்களின் பிரதான குழாய்ப்பொறி நிலையங்கள் தொடர்பாக குழாய் பொருத்தல் மற்றும் வால்வுகள் பொருத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் 678.06 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு குறைந்த விலை மனுவின் அடிப்படையில் M/s Sanken Construction (Pvt.) Ltd. – Vonlan Constructions (Pvt.) Ltd. JV க்கு வழங்குவதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
31. ஒருகொடவத்தை, அம்பதலை வீதி அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்ததாக நீர் வழங்கல் குழாய் வழிகளையும் நீடித்தல் (விடய இல. 73)
ஒருகொடவத்தை, அம்பதலை வீதி அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்ததாக நீர் வழங்கல் குழாய் வழிகளையும் நீடிக்கும் கருத்திட்டத்தை முன்னெடுக்க நிதிவசதியளிப்பதற்கு Mascinen – Umwelttechink – Transport Anlagen (M-U-T) நிறுவனம் மாத்திரமே தமது விலைமனுவினை முன்வைத்திருந்தது. அதனடிப்படையில், அந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கொள்முதல் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கில் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை குழுவின் சிபார்சின் பெயரில், இவ்வேலைத்திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை 46.21 மில்லியன் யூரோக்களுக்கு Mascinen – Umwelttechink – Transport Anlagen (M-U-T) நிறுவனத்துக்கு வழங்குவதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
32. கண்டி போதனா வைத்தியசாலையில் தலிசிமியா நோயாளர்களுக்கான எலும்பு மச்சை பொருத்தும் பிரிவொன்றை அமைத்தல் (விடய இல. 74)
கண்டி போதனா வைத்தியசாலையில் தலிசிமியா நோயாளர்களுக்கான எலும்பு மச்சை பொருத்தும் பிரிவொன்றை அமைப்பதற்கான புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தலானது, வடிவமைத்து கட்டி ஒப்படைத்தல் எனும் அடிப்படையின் (Design and Built) கீழ் 856.9 மில்லியன் ரூபா வரியுடன் கூடிய தொகைக்கு மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம் மற்றும் பொறியியல் சேவை தனியார் கம்பனி எனும் நிறுவனங்களிற்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
33. ஆயர்வேத மருத்துவமனை நிர்மாணிப்பு மற்றும் அதன் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 75)
யக்கல ஆயர்வேத மருத்துவ மனைக்காக 10 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிர்மாணித்தல், திருகோணமலை கோணேசபுரியில் சித்த போதனா மருத்துவ மனையொன்றை நிர்மாணித்தல், மஞ்சத்தொடுவாய் மாவட்ட மருத்துவமனைக்காக காவறை கட்டத் தொகுதியொன்றை நிர்மாணித்தல், கைதடி ஆயர்வேத மருத்துவமனைக்காக இரண்டு மாடி கட்டடம் ஒன்றை நிர்மாணித்தல் ஆகியவற்றுக்காக 2014ம் ஆண்டு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. அதேபோன்று கம்பஹா மாவட்டத்தின் வேகே பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வெதகம கிராமத்தில் பாரம்பரிய ஆயர்வேத மருத்துவமனையை அமைக்க 2016-07-13ம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. பல்வேறு காரணங ;களினால் குறித்த நிர்மாணப்பணிகள் தற்போது மந்த கதியில் சென்று கொண்டு இருக்கின்றன. எனவே குறித்த வேலைத்திட்டங்களை துரித கதியில் ஆரம்பித்து, குறைந்த செலவில் மிகவும் பலனுள்ள விதத்தில் நிர்மாணித்து முடிப்பதற்காக, இவ்வேலைத்திட்டகளுக்கு உரித்தான ஆலோசனை சேவைகளை மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும், அடுத்த கட்ட நிர்மாணப்பணிகளை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு கையளிப்பதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
34. கட்டான பொலிஸ் கல்விக் கல்லூரியில் நிர்வாக கட்டிடம் மற்றும் வதிவிட கட்டிடம் நிர்மாணித்தல் (விடய இல. 79)
450 அலுவலர்களுக்கு ஒரே முறையில் பயிற்சி வழங்குவதற்கு தேவையான தங்குமிட வசதிகள், நிர்வாக நடவடிக்கைகள், போதனா மண்டபங்கள், நூலக வசதிகள், நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவற்றைக் கொண்டு கட்டான பொலிஸ் கல்விக் கல்லூரியினை பூர்த்தி செய்ய வேண்டும். அதனடிப்படையில் அதன் முதற்கட்டமாக 2017-2019 மத்தியகால முதலீட்டு சட்டகத்தின் அடிப்படையில் 674.26 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நிர்வாக கட்டிடம் மற்றும் வதிவிட கட்டிடம் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
35. தன்னார்வ வெளிப்படுத்தல் சட்ட மூலத்தினை வரைதல் (விடய இல. 81)
இலங்கையில் உழைக்கும் வருமானத்தின் அடிப்படையில் வருமான வரியைச் செலுத்துவது தொடர்பாக கடந்த காலங்களில் விடுபட்ட தவறுதல்களை முறைப்படுத்தும் வாய்ப்பினை வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுமுத்தலும், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வருமான வரியைச் செலுத்துவதனை ஆரம்பிப்பதற்காக அவர்களை ஊக்குவிப்பதையும் நோக்காகக் கொண்டு தன்னார்வ வெளிப்படுத்தல் சட்ட மூலத்தினை வரைவதற்கு திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் தன்னார்வ வெளிப்படுத்தல் சட்ட மூலத்தினை வரைவதற்கு சட்ட வரைஞருக்கு பணிப்புரை விடுப்பது தொடர்பில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
36. அந்நியச் செலாவணி சட்ட மூலம் (விடய இல. 82)
சட்ட வரைஞரினால் தயாரிக்கப்பட்ட அந்நிய செலாவணி சட்ட மூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் கௌரவ பிரதமர் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
37. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் சலுகை ஒப்பந்தம் (விடய இல. 83)
சட்டமாதிபரினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டம் - 1, கட்டம் - 11, மற்றும் முன்மொழியப்பட்டுள்ள கட்டம் - 111 ஆகியவற்றுக்கான சலுகை ஒப்பந்தத்தில் சீன அரசாங்கத்திற்கு உட்பட்ட சய்னா மர்ஷன்ட் போட் ஹோல்டின்ங் நிர்வனத்துடன் கைச்சாத்திடுவதற்காகவும், இச்சலுகை ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தப்படுவதனை மேற்பார்வையிடுவதற்காக விசேட பணிகள் அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகம அவர்களின் தலைமையில் மற்றும் குறித்த பிற அமைச்சர்களின் பங்குபற்றலுடன் அமைச்சரவை உப குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
38. பொலனறுவை ஒன்றிணைந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 86)
பொலனறுவை ஒன்றிணைந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றை, நெதர்லாந்து அரசின் கடன் உதவியுடன் ஹிங்குராங்கொடையில் அமைப்பது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழில் பயிற்சி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
39. உயர் கல்வி விரிவாக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றைத் துரிதப்படுத்தல் (Accelerating Higher Education Expansion and Development – AHEAD) (விடய இல. 87)
தற்காலத்துக்கு பொருத்தமான வகையில் பல்வேறு நன்மைகளை அடைந்து கொள்ளும் நோக்கில் உயர் கல்வி விரிவாக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றைத் துரிதப்படுத்தல் (Accelerating Higher Education Expansion and Development – AHEAD) எனும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2017-2022 காலப்பகுதியில் முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டத்துக்கு உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனமானது 33 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு சமமான விசேட கடனெடுப்பு உரிமைக் கடன் தொகையொன்றையும், மீள் நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து 67 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கடன் தொகையையும் வழங்க தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவது தொடர்பில் கௌரவ பிரதமர் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.