01.பிபில சீனி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 07)
இலங்கை மகாவலி அதிகாரசபையானது ரபகென் ஓயா விசேட பொருளாதார வலயத்தில் வசித்து வரும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, அவர்களுக்கு உயர் வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் விவசாய நிலங்களை பெற்றுக் கொடுத்து சீனி அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அரச – தனியார் இணை வேலைத்திட்டமான இச்செயற்திட்டத்தின் முன்மொழிவுகளுக்கமைவாக குறித்த வேலைத்திட்டமானது 152.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு முதலீட்டினை கொண்டுள்ளது. அதன் கீழ் வருடாந்தம் 80,000 டொன் சீனி உற்பத்தி செய்வதற்கும், 1,000 நேரடி வேலைவாய்ப்புக்களையும், மறைமுகமான 75,000 வேலைவாய்ப்புக்களையும் உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விலங்குனவுகள் மற்றும் செயற்கை பசளை ஆகிய இடை உற்பத்திகளை மேற்கொள்வதற்கும், 20 மெகாவொட் வரையான மின்னுற்பத்தியினை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. பிபில மற்றும் மெதகம ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கி இவ்வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்டிருந்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. 'சுவசக்தி' தேசிய வேலைத்திட்டம் (விடய இல. 10)
ஒரு மில்லியன் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்காக 'சுவசக்தி' தேசிய வேலைத்திட்டம் எனும் பெயரில் வேலைத்திட்டமொன்றை தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சின் மூலம் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து செயற்படுத்தப்படுகின்றது. சிறு மற்றும் மத்திய வியாபார துறைகளில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கில் புதிய வியாபாரிகள் 25,000 இனை உருவாக்குவதை விருத்திசெய்வதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் வணிக வங்கி ஆகியவற்றின் மூலம் கடன் வசதிகளை செய்து கொடுப்பது இவ்வேலைத்திட்டத்தின் எதிர்பார்ப்பாகும். இதன் மூலம் சிறந்த வியாபார திட்டங்களின் திறனை கருத்திற் கொண்டு 250,000 ரூபாவிற்கு உட்பட்டதாக நிதி வசதிகளை செய்து கொடுப்பதுடன், அத்தொகையினுள் வியாபாரிகளுக்காக 50,000 ரூபா நிதியுதவியுடன், 200,000 ரூபா பெறுமதியான கடன் தொகையும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இக்கடன் மற்றும் நிதியுதவி ஆகிய யோசனைகளை இலங்கை மத்திய வங்கியின் ஊடாக செயற்படுத்துவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. சட்டவிரோதமான முறையில் இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள, சந்தையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள சலுகை காலத்தினை நீடித்தல் (விடய இல. 14)
வரி செலுத்தாமல் சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 450CC ரக மோட்டார் சைக்கிள்களை என்ஜின் கொள்ளளவின் அடிப்படையில் பதிவுசெய்வதற்கு 2017-01-31 வரை அவகாசம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இக்காலப்பகுதிக்குள் குறித்த தொகையினை செலுத்தி 1,558 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்துள்ளன. மேலும் 2,500 மோட்டார் சைக்கிள்களை பரீசிலிப்பதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அம்மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை முறையாக செய்து முடிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் விதத்தில் மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டடிருந்த காலப்பகுதியினை 2017-01-31இல் இருந்து 2017-03-31 வரை மேலும் இரண்டு மாதங்களில் நீடிப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. தேசிய விமான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் தேசிய விமான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுப்பதற்கான குழுவொன்றை நியமித்தல் (விடய இல. 15)
சர்வதேச தரங்கள் மற்றும் சிபார்சுகளை தேசிய ரீதியில் செயற்படுத்துவதற்கு சர்வதேச சிவில் விமான சேவை ஒப்புதல்களின் பங்காளி எனும் ரீதியில் இலங்கை அரசாங்கமும் இணைந்துள்ளது. அதனடிப்படையில் குறித்த தரங்கள் மற்றும் சிபார்சுகளை இலங்கையினுள் செயற்படுத்துவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளரின் தலைமையில், மற்றைய உரிய அமைச்சுக்கள் மற்றும் நிர்வனங்களின் தலைவர்களின் பங்குபற்றலுடன், 'தேசிய விமான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுப்பதற்கான குழுவினை' (National Air Transport Facilitation Committee – NATEC) நியமிப்பதற்கும், 'தேசிய விமான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கும் வேலைத்திட்டத்தை' (National Air Transport Facilitation Programme – NATFP) தயாரித்து செயற்படுத்தும் பொறுப்பினை அக்குழுவிற்கு ஒப்படைப்பதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. அரசாங்கத்தின் மூலம் சர்வதேச முறிகளினை வழங்கல் நிகழ்ச்சித்திட்டம் - 2017 (விடய இல. 21)
2017ம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டத்தின் அடிப்படையில், 2017ம் நிதியாண்டில் அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்தொகையில் திருப்பிச் செலுத்தப்படாத தொகையானது 1,579.11 பில்லியன் ரூபாய்களாகும். 2017இற்கான பொதுப்படுகடன் தீர்ப்புக் கொடுப்பனவுகள் ஏறத்தாழ 1,480 பில்லியன் ரூபாய்களாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மேலதிகமாக 1,500 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டிக் கொள்வதற்காக சர்வதேச நாட்டிற்கான முறிகளை வழங்குவது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. தேசிய லோத்தர் சபைக்காக புதிய சட்டமொன்றை தயாரித்தல் (விடய இல.22)
1963ம் ஆண்டு 11ம் இலக்க நிதிச்சட்டத்தின் உருவாக்கப்பட்ட தேசிய லொத்தர் சபையினை தற்காலத்துக்கு பொருத்தமான முறையில் திருத்தம் செய்வதற்கு COPE சபை யோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளது. அதனடிப்படையில், தற்போதைய சந்தை வளர்ச்சியினை கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களை உள்ளடக்கி தேசிய லொத்தர் சபைக்காக புதிய சட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. அரச நிறுவனங்களின் சேவையாளர்களின் சுருக்கம் - 2017 (விடய இல. 24)
தற்போது 15 பிரஜைகளுக்கு ஒரு அரசாங்க உத்தியோகத்தர் எனும் ரீதியில் இலங்கையின் அரச சேவை வியாபித்து இருந்தாலும், வருடாந்தம் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுகின்ற நிதிகளின் மூலம் குறித்த இலக்கை அடைந்து கொள்ளும் வேகம் குறைந்திருப்பதனால் பொதுமக்களிடத்தில் அரசசேவை தொடர்பில் எதிர்மறையான போக்கே காணப்படுகின்றது. அதேபோன்று கிராமிய மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில், விசேடமாக கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் சேவைபுரியும் அரச உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காணப்படுவதுடன், நகர பிரதேசங்களில் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் அமைந்துள்ள அரச நிறுவனங்களில் பணிபுரிகின்ற அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையானது, தேவைப்படுகின்ற பெறுமானத்தையும் தாண்டிய நிலையில் காணப்படுகின்றது. அதேபோன்று கீழ் மட்டத்துக்கு உரித்தான பணியாளர்களின் தொகையானது, சிரேஷ;ட மற்றும் உயர் மட்ட சேவையாளர்களுடன் ஒப்பிடும் போது அதிகமாகும்.
அதனடிப்படையில் திறைசேரியின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, ஊதியம் மற்றும் சேவையாளர்களின் எண்ணிக்கை ஆணைக்குழு மற்றும் நிதிக்சேவை ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன் நிதியமைச்சினால் அரச சேவையாளர்களின் சுருக்கத்தினை மேற்கொள்வதுடன், அதனடிப்படையில் அரச சேவையில் மற்றும் மாகாண சபைகளின் பணியாளர்களின் தேவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
08. பலவீனமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட கலைஞர்களுக்கு சலுகை வழங்குவதற்காக கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற நிதியுதவியினை அதிகரித்தல் (விடய இல. 25)
பலவீனமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட கலைஞர்களுக்கு சலுகை வழங்குவதற்காக கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற நிதியுதவியினை 5,000 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் குறித்த சிலுகையினை வழங்குவதற்காக குறைந்த வருமானம் பெறும் கலைஞர்களை தெரிவு செய்வதற்காக செயன்முறையொன்றை உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பி. நாவின்ன அவர்களினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. குறித்த செயன்முறை தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற் கொள்ளப்பட்டது.
09. தேசிய சந்தையில் தேங்காய் விலையினை கட்டுப்படுத்தல் (விடய இல. 27)
தற்போதைய சூழ்நிலையில் தேங்காயின் விலை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அதனால் தேசிய தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக தேங்காய்களின் கேள்வியினை குறைப்பதன் மூலம் தேசிய சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பினை குறைத்து தேங்காய் பயிர்செய்கையாளர்களுக்கும், தேங்காய் பயிர்செய்கையுடன் இணைந்த உற்பத்தியாளர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் தேசிய தேங்காய் விலையினை நிலையான மட்டத்தில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் குறுகிய கால உபாய வழிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில், நான்கு மாதங்களுக்கு தேவையான கனிய எண்ணெய் 40,000 மெட்ரிக் தொன்னினை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு ஏதுவான் முறையில் கீழ்வரும் வகையில் விசேட பண்டங்களின் வரியினை திருத்தம் செய்வதற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• தேங்காய் எண்ணெய் ஒரு கிலோகிராமுக்கான விசேட பண்டங்களின் வரியினை 150 ரூபாவிலிருந்து 130 ரூபா வரை குறைத்தல்
• சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் ஒரு கிலோகிராமுக்கான விசேட பண்டங்களின் வரியினை 130 ரூபாவிலிருந்து 110 ரூபா வரை குறைத்தல்;
• சுத்திகரிக்கப்பட்ட பாம் தேங்காய் எண்ணெய் ஒரு கிலோகிராமுக்கான விசேட பண்டங்களின் வரியினை 150 ரூபாவிலிருந்து 130 ரூபா வரை குறைத்தல்;
10.வினைத்திறனை அதிகரிக்கும் மற்றும் நீர்ப்பாசனத் தொகுதிகளின் செயற் திறனை மேலுயர்த்தும் கருத்திட்டம் (விடய இல. 28)
வினைத்திறனை அதிகரிக்கும் மற்றும் நீர்ப்பாசனத் தொகுதிகளின் செயற் திறனை மேலுயர்த்தும் கருத்திட்டத்தின் கீழ் கடந்த 25-35 வரையான வருட காலப்பகுதியில் மறுசீரமைக்கப்படாத பிரதான மற்றும் மத்திய தர நீர்ப்பாசன திட்டங்கள் 80 இனை முழுமையாக மறுசீரமைப்பதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளது. பயனுள்ள குறித்த இவ்வேலைத்திட்டத்தை 18,500 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் 2017 – 2021 கால வரையறைக்குள் செயற்படுத்துவது தொடர்பில் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11.சிறைச்சாலைகளின் இடநெரிசல் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்புக்களுக்காக நீதிமன்ற மற்றும் சட்டமுறையான காரணங்களை இனங்காணல் (விடய இல. 29)
சிறைச்சாலைகளின் இடநெரிசல் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்புக்களுக்காக நீதிமன்ற மற்றும் சட்டமுறையான காரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட செயலணியின் முதலாம் அறிக்கையில் பின்வரும் சிபார்சுகள் முன்வைக்கப்பட்டன.
• சிறைத்தண்டனைக்கு பதிலாக சமூகம் சார்ந்த தண்டனை முறைகளை பயனுள்ள விதத்தில் பயன்படுத்தல்
• தண்டப்பணங்களை செலுத்துவதற்கு முடியாது போகும் பிரஜைகளுக்கு சிறைத்தண்டனை வழங்குவதற்கு பதிலாக கட்டம் கட்டமாக குறித்த தண்டப்பணத்தை செலுத்தும் வகையில் குறித்த சட்டத்தில் உள்ள விதிவிதானங்களை முழுமையாக செயற்படுத்தல்.
• நீதவான் நீதமன்றங்களுக்கு அதிகாரமற்ற வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கும் வரை நீதவான் நீதிமன்றத்திலேயே வைத்திருப்பதற்கும் குறித்த செயற்பாட்டின் போது வழக்குகள் காணாமல் போவதை தடுப்பதற்காக வேண்டி தகவல் முறைமையொன்றை செயற்படுத்தல்.
• குற்றப்பத்திரிகையின்றி சிறைப்பிடிக்கப்பட்டுள்ளவர்களை முறிகளின் அடிப்படையில் விடுவித்தல் மற்றும் சட்டத்தின் விதிகளின் படி நீதவான் நீதிபதிகள் மாதத்துக்கு ஒருமுறை சிறைச்சாலைகளை பார்வையிடுதல்.
• பிணையில் விடுவிப்பதற்கு முடியுமான குற்றங்கள் தொடர்பில் பொலிஸ் பிணை பெற்றுக் கொடுக்கும் முறையினை பின்பற்றல்.
• மரண தண்டனையினை சாவும் வரையான சிறைத்தண்டனையாக குறைப்பதற்காக காணப்படும் வாய்ப்புக்களை பரிசீலித்தல்
• புதிய சிறைச்சாலைகளை நிர்மாணித்தல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல்
• சிறைச்சாலை ஊழியர்களுக்கு பாதுகாப்பான மற்றும் உரிய சூழலை செய்து கொடுத்தல்
குறித்த அறிக்கையினை பாராளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பில் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12.அரசியல் பழிவாங்கல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தவர்களுக்கு சலுகைகள் வழங்கல் (விடய இல. 30)
2015.04.17ம் திகதியிடப்பட்ட 09/2015 இலக்கமுடைய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையின் ஏற்பாடுகளிற்கு ஏற்ப அரசியல் பழிவாங்களினால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற மொத்த மேன்முறையீடுகள் 31,666 மேன்முறையீடுகளில் 23,093 மேன்முறையீடுகள் தொடர்பான சிபார்சுகளிற்கு 03 கட்டங்களின் கீழ் அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டது. மிகுதியான 8,573 மேன்முறையீடுகளில் 06 அமைச்சுகளுக்கு உரித்தான 3,440 மேன்முறையீடுகள் தொடர்பான சிபார்சுகளை உரிய நிர்வாக அதிகாரிகளின் ஊடாக செயற்படுத்துவது தொடர்பில் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ரஞ்சித் மத்துமபண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. இலங்கையின் முத்திரைகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளில் முத்திரைகளைச் சேகரிப்பவர்களுக்கு விற்பனை செய்தல் (விடய இல. 34)
இலங்கையின் முத்திரைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதால் இலங்கைக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அதனடிப்படையில், தபால் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்திற்கு வெளிநாடுகளில் முத்திரைகளை விற்பனை செய்வதற்காக வெளிநாட்டு முகவர்களை நியமனம் செய்வதற்கும், அவர்களுடன் ஓப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ எம்.எச்.ஏ. ஹலீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. சுகததாஸ தேசிய விளையாட்டுத்தொகுதி அதிகார சபையின் 1999ம் ஆண்டு 17ம் இலக்க சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 36)
விளையாட்டுத் தொகுதிகளின் பராமரிப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை வழங்குதல் ஆகியவற்றுக்காக போதுமான வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் வகையில் விளையாட்டு நிகழ்வுகள் அற்ற காலங்களில் குறித்த விளையாட்டுத் தொகுதிகளை கலை நிகழ்ச்சிகள், மாநாடுகள், பரீட்சைகள் மற்றும் அவ்வாறான வருமானம் கிடைக்கும் வழிகளில் பயன்படுத்துவதற்கு வழிசமைத்துக் கொடுக்கும் வகையில் தற்காலத்துக்கு உகந்த முறையில் சுகததாஸ தேசிய விளையாட்டுத்தொகுதி அதிகார சபையின் 1999ம் ஆண்டு 17ம் இலக்க சட்டத்தினை திருத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக முன்வைப்பது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. பொலிஸ் வைத்தியசாலையினை மேம்படுத்தல் (விடய இல. 37)
நவீன வசதிகளுடன் கூடிய புதிய பொலிஸ் வைத்தியசாலையாக நாராஹேன்பிட்ட, கொழும்பு – 05 இல் அமைந்துள்ள பொலிஸ் வைத்தியசாலையை புனரமைப்பதற்காக பொலிஸ் வைத்தியசாலைக்கு முன்புறமாக அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான ரூட் 02 பர்ச்சஸ் 23.5 பரப்பளவினைக் கொண்ட காணியை இலங்கை பொலிசுக்கு கையகப்படுத்திக் கொள்வது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16.முப்படையினருக்குத் தேவையான உணவுப் பொருட்களை (உலர் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள்) கொள்வனவு செய்தல் (விடய இல. 38)
2017ம் ஆண்டில் முப்படையினருக்குத் தேவையான உணவுப் பொருட்களை (உலர் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள்) கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் 17,555 மில்லியன் ரூபா முழு நிதியில் 28 வழங்குனர்களுக்கு வழங்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. அரசாங்க பிணையகங்கள் வர்த்தக நிலையங்களுக்காக தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு தொகுதியினை கொள்வனவு செய்தல் (விடய இல. 39)
அரசாங்க பிணையகங்கள் வர்த்தக நிலையங்களுக்காக தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு தொகுதியினை கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. குறித்த தொகுதியின் தன்மையினை கருத்திற் கொண்டு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில், அதற்காக அரசாங்கத்தின் கொள்முதல் வழிகாட்டல்களுக்கு அமைய 'இரு கட்ட விலைமனுக்கோரல்' முறையின் கீழ் விலைமனுக்களை கோருவதது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் ஈடுபடுத்துவதற்காக விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட மோப்பம் பிடிக்கும் நாய்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 40)
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் ஈடுபடுத்துவதற்காக விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்களை கொள்வனவு செய்து, பயிற்றுவித்து, விமானநிலையத்தின் விமானங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. இலங்கை போக்குவரத்து சபைக்காக (இ.போ.ச) நவீன பயணிகள் போக்குவரத்து பேரூந்துகள் 1,000 இனை கொள்வனவு செய்தல் (விடய இல. 41)
நாட்டின் பொதுப் போக்குவரத்து வழங்குனராகத் தலைமை வகிக்கும் இலங்கைப் போக்குவரத்துச் சபை, நாடுபூராகவுமுள்ள பயணிகளுக்கு விளைதிறனாகவும் நம்பகரமானதுமான பேரூந்துச் சேவையினை வழங்கும் கடப்பாட்டிலுள்ளது. அதனடிப்படையில் இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு 40 – 46 (2«2) கைப்பிடியுடனான உயர் சாய்மனை இருக்கை ஆசனங்களுடனான 900 புதிய பயணிகள் பேரூந்துகள் மற்றும் 100 குளிரூட்டப்பட்ட அடித்தளம் பதிவான பேரூந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. காபன் பசளை உற்பத்தி, குளிரூட்டல் வசதிகளின் தாபிப்பு மற்றும் மின்சக்தி உற்பத்தி ஆகியன தொடர்பான கருத்திட்டம் ஒன்றை உருவாக்குதல் (விடய இல. 42)
காபன் பசளை உற்பத்தி, குளிரூட்டல் வசதிகளின் தாபிப்பு மற்றும் மின்சக்தி உற்பத்தி ஆகியன தொடர்பான கருத்திட்டம் ஒன்றை இந்நாட்டு கம்பனிகள் சிலவற்றுடன் இணைந்து செயற்படுத்த ஜேர்மன் நாட்டு நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. இம்முதலீட்டின் கீழ் கண்டி மாநகர சபையின் கழிவு முகாமைத்துவ தொகுதிக்கருகில் கழிவுகள் மூலம் காபன் பசளை உற்பத்தி செய்யும் பிரிவொன்றை அமைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் கீழ் 6 – 10 மெகாவொட் மின்னுற்பத்தியினை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், களஞ்சியசாலைகள் சிலவற்றை நிர்மாணிப்பதன் மூலம் வெளியேற்றப்படுகின்ற மரக்கறி மற்றும் பழவகைகளின் தொகையை குறைத்துக் கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் சிபார்சின் பெயரில் குறித்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.