01.துப்பாக்கிக் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 06)
நாட்டினுள் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் துப்பாக்கியினை பயன்படுத்தல், விவசாய உற்பத்திகள் மற்றும் மற்றைய சொத்துக்களை பாதுகாப்பதற்கான துப்பாக்கிகளை பகிர்ந்தளிக்கும் போது மற்றும் பொது இடங்களில் துப்பாக்கி பயன்படுத்துவதை தடுத்தல் போன்ற காலத்துக்கு தேவையான விடயங்களை உள்ளடக்கி 1916ம் ஆண்டு 33ம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவின் சிபார்சின் அடிப்படையில் குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. கண்டி மாவட்டத்திற்காக ஒன்றிணைந்த திண்ம கழிவுகளை முகாமைத்துவ வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தல் (விடய இல. 07)
கண்டி மாவட்டத்தில் ஒன்றுசேரும் திண்ம கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை திறந்த விலைமனுக்கோரலின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்ற தனியார் முதலீட்டாளர் ஒருவர் மற்றும் கண்டி மாநகர சபை ஆகியவை இணைந்து ஸ்தாபிக்கின்ற இணை நிர்வனத்தின் மூலம் செயற்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. அமெரிக்க தூதரக அலுவலகத்தின் கீழ் காணப்படுகின்ற இரணவில பூமியை மீண்டும் பெற்றுக் கொள்ளல் (விடய இல. 09)
புத்தளம் மாவட்டத்தில், இரணவில பிரதேசத்தில் அமைந்துள்ள 166.038 ஹெக்டேயர் இடப்பகுதியை, Voice of America வானொலி ஒலிபரப்பு நிலையத்தை இலங்கையில் நிர்மாணிப்பதற்காக வேண்டி 1991ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க குடியரசின் தூதரக அலுவலகத்திற்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. அக்குத்தகை ஒப்பந்தத்தின் காலம் முடிவடைவதற்கு முன்னர் குறித்த ஒலிபரப்பு நிலையத்தை மூடிவிட்டு குறித்த இடம் மற்றும் சொத்துக்களை இலங்கை அரசாங்கத்திடம் வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக ஐக்கிய அமெரிக்க குடியரசின் தூதரக அலுவலகம் இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்து குறித்த இடத்தை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. முச்சக்கரவண்டிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பயணிகள் போக்குவரத்து மற்றும் பாடசாலை வேன் சேவையினை தரமிக்கதாக விருத்தி செய்தல் (விடய இல. 12)
முச்சக்கரவண்டிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பயணிகள் போக்குவரத்து மற்றும் பாடசாலை வேன் சேவையினை தரமிக்கதாக விருத்தி செய்வதற்காக கட்டுப்பாட்டு அதிகாரசபையொன்றை ஸ்தாபிப்பதற்கு 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டது. குறித்த முன்மொழிவினை செயற்படுத்தும் வகையில் அது தொடர்பில் ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவென அமைச்சின் செயலாளர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. தேசிய மனித வளங்கள் மற்றும் தொழில்வாய்ப்புக்கள் கொள்கையை அமுல்படுத்தல் (விடய இல. 14)
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உயர் பொருளாதார விருத்தி வேகத்தை அடைந்துக் கொள்வதற்காக தனியார் பிரிவினரின் கூடிய பங்களிப்பினை பெற்றுக் கொண்டு உயரிய தொழில் வாய்ப்பினை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு, குறித்த அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகளை கவனத்திற் கொண்டு திருத்தியமைக்கப்பட்ட தேசிய மனித வளங்கள் மற்றும் தொழில்வாய்ப்புக்கள் கொள்கையை செயற்படுத்துவது தொடர்பில் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் கௌரவ டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. வறட்சி காலநிலையின் போது நீர் வழங்கல் வசதிகளை முகாமைத்துவம் செய்தல் (விடய இல.15)
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையினால் கிராமிய பிரதேசங்களில் சிறிய நீர் வழங்கல் பிரிவு மிக மோசமான முறையில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலைக்கு முகங்கொடுக்கும் வகையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மூலம் நீர் பவுசர் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற நீர் வழங்கல் நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கும், 400 குழாய் கிணறுகளை அமைப்பதற்கும், வறட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் காணப்படும் பொது ஆழமான 1000 கிணறுகளை புனரமைப்பதற்கும், கையினால் இயக்க கூடிய 200 கிணறுகளை பின்தங்கிய கிராமங்களில் நிர்மாணிப்பதற்கும், நீரினை கிரமமாக பயன்படுத்துவது தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்துவதற்கும், நீர் வழங்கல் அவசரமாக குறையும் சந்தர்ப்பங்களில் தேவையான துரித நடவடிக்கைகளை எடுப்பதற்காக உரிய அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஓருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. உடல் உறுப்புகளை உறுப்பு மற்றும் இழைய மாற்று சிகிச்சைக்காக தானமாக வழங்குவதற்கு சாரதிகளிடமிருந்து சம்மதத்தை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 17)
சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பப் படிவம் மற்றும் புதுப்பித்தல் படிவம் என்பவற்றில் உடல் உறுப்பு மற்றும் இழையங்களின் தானத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் கூற்று ஒன்றினை உள்ளடக்கும் விதமாக மறுசீரமைப்பதற்கும், வீதி விபத்துமூலம் மூளைச்சாவு மற்றும் குருதிச்சுற்றோட்ட ரீதியாக இறக்க நேரிடும் சாரதிகளிடமிருந்து அவர்களின் உடல் உறுப்பு மற்றும் இழையங்களை தானம் செய்வதற்குரிய சம்மதத்தினை தற்போதுள்ள சாரதி அனுமதி பத்திரத்தில் காட்சிப்படுத்தக் கூடியவாறு திருத்தி மறுசீரமைப்பதற்கும் சுகாதார போஷhக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. அரச வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் மற்றும் ஏனைய மருத்துவ அலுவலகர்களுக்கான விடுதிகள்/ வீட்டு வசதிகள் நிர்மாணித்து கொடுத்தல் (விடய இல. 18)
தனியார் அரச கூட்டுப்பங்காண்மை (PPP) ஊடாக சகல அரசாங்க வைத்தியசாலைகளிலும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள், உள்ளகப் பயிற்சி பெறும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஏனைய மருத்துவ அலுவலர்களுக்கான விடுதிகள்ஃ வீட்டு வசதிகள் நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் சுகாதார போஷhக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09.சிறு ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவுவதன் ஊடாக பெண்களின் பொருளாதாரத்தினை வலுவூட்டல் (விடய இல. 21)
சிறு ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவுவதன் ஊடாக பெண்களின் பொருளாதாரத்தினை வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் சிறு ஆடைத்தொழிற்சாலை ஒன்றிற்கான நேரடிப் பயனாளிகளின் எண்ணிக்கையை 15 இலிருந்து 20 ஆக அதிகரிப்பதற்கும், ஒவ்வொரு நிலையத்திற்கும் மேலதிகமாக 05 தையல் இயந்திரங்களை பொருத்துவதற்கும், பயனாளிகளின் பயிற்சிக்காக வழங்கப்படும் தையல் இயந்திரங்களை குறித்த கூட்டுறவு சங்கங்களுக்கு உரித்தாக்குவதற்குமாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரிஷhட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. இலங்கை கடற்பரப்பினுள் இயந்திர படகுகளினால் கட்டி இழுக்கப்பட்ட பக்குரு வலைகளைப் பயன்படுத்தி நிறைவேற்றப்படுகின்ற மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடைவிதித்தல் (விடய இல. 21)
இலங்கை கடற்பரப்பினுள் இயந்திர படகுகளினால் கட்டி இழுக்கப்பட்ட பக்குரு வலைகளைப் பயன்படுத்தி நிறைவேற்றப்படுகின்ற மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடைவிதிப்பதற்கு தேவையான விதப்புரைகளை ஏற்படுத்தும் வகையில், 1996ம் ஆண்டின் 02ம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக முன்வைப்பதற்கு மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. யான் ஓயா அபிவிருத்திக் கருத்திட்டத்துக்கென காணிகளை ஆட்படுத்துவதன் காரணமாக சொத்துக்களை இழந்து பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு சலுகை வழங்குதல் (விடய இல. 26)
அநுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை இணைத்த வண்ணம் நிர்மாணிக்கப்படுகின்ற யான் ஓயா அபிவிருத்தி கருத்திட்டத்தின் 85மூ மான வேலைகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்நீர்த்தேக்கத்துக்கு நீரினை நிரப்புவதற்கு முன்னர் அப்பிரதேசத்தில் வசித்து வரும் 242 குடும்பங்களை உடனடியாக அவ்விடத்திலிருந்து அகற்ற வேண்டும். அதனடிப்படையில் குறித்த மக்களுக்கு பொருத்தமான வாழ்க்கை முறையொன்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவையை உணர்ந்து, தற்பொழுது காணப்படும் விதப்புரைகளுக்கு அப்பால், அவர்கள் தற்காலத்தில் அனுபவிக்கும் வசதி வாய்ப்புக்களுக்கு ஒத்த வகையில் அமைந்த அடிப்படை வசதிகளுடன் கூடிய வீட்டு வசதிகளை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதி வசதிகளை செய்து கொடுத்தல், அரச காணிகளை சட்டத்துக்கு முரணாகக் கைப்பற்றி அவற்றை விருத்தி செய்து உரிமை கொண்டாடுகின்ற நபர்களை இணங்கண்டு அவர்களுக்கு உரிய வகையில் நஷ;ட ஈடு வழங்குவதற்கும், குறித்த கருத்திட்டத்தினால் விவசாயத்தில் ஈடுபட முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகின்ற விவசாய நிலங்களுக்கான நஷ;ட ஈடாக நிதியுதவிகளையும் வழங்கி குறித்த கருத்திட்டத்தை உரிய காலப்பகுதியில் முடிப்பது தொடர்பில் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ காமினி விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. 1971ம் ஆண்டு 52ம் இலக்க வணிக கப்பல் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள சிறு வணிக கப்பல்களை பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் (விடய இல. 29)
சிறு வணிக கப்பல்களை பதிவு செய்தல் மற்றும் பயன்படுத்தல் ஆகியவற்றை முறையாக முன்னெடுக்கும் நோக்கில், 1971ம் ஆண்டு 52ம் இலக்க வணிக கப்பல் சட்டத்தின் கீழ் சிறு வணிக கப்பல்களை பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளை விதிப்பது தொடர்பில் துறைமுக மற்றம் கப்பல் துறை அமைச்சர் கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. மாலுமிகளுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ்களை வழங்குவது தொடர்பில், இலங்கையினால் யுக்ரைன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 30 மற்றும் 31)
மாலுமிகள் வெளிநாட்டு கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள கப்பல்களில் பணிபுரிய வேண்டும் எனின், அவர்கள் Certificate of Competency க்கு மேலதிகமாக Certificate of Recongnition யும் பெற்றிருத்தல் வேண்டும். இதற்காக வேண்டிய குறித்த நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடல் வேண்டும் இலங்கை இதுவரை 30 நாடுகளுடன் குறித்த விடயம் தொடர்பில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. அதனடிப்படையில் மாலுமிகளுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ்களை வழங்குவது தொடர்பில், இலங்கையினால் யுக்ரைன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் துறைமுக மற்றம் கப்பல் துறை அமைச்சர் கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவகத்திற்காக நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கான ஒப்பந்தப் பணிகளைப் ஒப்படைத்தல் (விடய இல. 37)
கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவகத்திற்காக நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கான ஒப்பந்தப் பணிகளைப் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான பெறுகைக் குழுவின் சிபார்சின் அடிப்படையில் ஒப்படைப்பதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. மருத்துவ விநியோகப் பொருட்களின் மொத்த களஞ்சியத்திற்காக மருத்துவ விநியோகப்பிரிவிற்கு வெலிசர வைத்தியசாலை வளாகத்திற்கு முன்னால் களஞ்சிய கட்டிடமொன்றை நிறுவுதல் (விடய இல. 40)
மருத்துவ விநியோகப் பொருட்களின் மொத்த களஞ்சியத்திற்காக மருத்துவ விநியோகப்பிரிவிற்கு வெலிசர வைத்தியசாலை வளாகத்திற்கு முன்னால் களஞ்சிய கட்டிடமொன்றை நிறுவுதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான பெறுகைக் குழுவின் சிபார்சின் அடிப்படையில் ஒப்படைப்பதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. சென் செபஸ்தியன் வட பூட்டு வாயில் மற்றும் நீர் இறைக்கும் நிலையத்தின் வடிவமைப்பு மற்றும் நிர்மாணம் (விடய இல. 41)
சென் செபஸ்தியன் வட பூட்டு வாயில் மற்றும் நீர் இறைக்கும் நிலையத்தின் வடிவமைப்பு மற்றும் நிர்மாணப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான பெறுகைக் குழுவின் சிபார்சின் அடிப்படையில் ஒப்படைப்பதற்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத்திட்டம் (2017 – 2021) (விடய இல. 45)
தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத்திட்டம் (2017 – 2021) இனை தயாரிப்பதற்கு மற்றும் அதன் போது கவனத்திற் கொள்ள வேண்டிய அனைத்து அம்சங்களையும் கவனத்திற் கொள்வதற்காக வேண்டி அமைச்சர்கள் சிலரின் இணை தலைமைத்துவத்தின் கீழ் அமைச்சரவை குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை கடந்த வருடம் அனுமதி வழங்கியிருந்தது. அதனடிப்படையில் குறித்த குழுவின் பூரண கருத்துக்களை பெற்று தயாரிக்கப்பட்ட ஐந்து வருட 'தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத்திட்டம் (2017 – 2021)' மானது வேலைப்பார்க்கும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹர்ஷ த சில்வா அவர்களினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. குறித்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. சுயாதீன கணக்காய்வு ஒழுங்குபடுத்துனர்களின் சர்வதேச பேரவையின் (IFAIR) வருடாந்த செயலமர்வினை இலங்கையில் நடாத்துதல் (விடய இல. 48)
2018ம் ஆண்டுக்கான சுயாதீன கணக்காய்வு ஒழுங்குபடுத்துனர்களின் சர்வதேச பேரவையின் (IFAIR) வருடாந்த செயலமர்வினை 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பில் நடாத்துவதற்கு பூரண பங்களிப்பை வழங்குவதற்கு நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.