01.மாலி இராஜ்யத்தில் சமாதானத்தை ஏற்படுத்தும் செயற்பாடுக்களுக்காக ஈடுபடுத்தப்படுகின்ற இலங்கை இராணுவ குழுவுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 09)
மாலி இராஜ்யத்தில் சமாதானத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்காக இலங்கை இராணுவத்தை ஈடுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் தனது அங்கீகாரத்தை வெளியிட்டு இருந்தது. அதனடிப்படையில் மாலி இராஜ்யத்தில் சமாதானத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்காக ஈடுபடுத்தப்படுகின்ற இலங்கை இராணுவ குழுவுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி ரஷ்யாவின் வங்கியொன்றுடன் (SEERBANK)) கடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. யால தேசிய சரணாலயத்துடன் இணைந்ததாக சொகுசு சுற்றுலா முகாம் ஒன்றினை நிர்மாணித்தல் (விடய இல. 11)
குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வேண்டி யால தேசிய சரணாலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பலடுபான பிரதேசத்தில் காணப்படுகின்ற, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான 07 ஏக்கர் பூமி பகுதியை, வரையறுக்கப்பட்ட வயில்ட் கோஸ்ட் லொஜ் (தனியார்) நிறுவனத்திடம் 2012ம் ஆண்டு ஒதுக்கி கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் குறித்த வேலைத்திட்டத்தை துரித கதியில் செய்து முடிக்கும் நோக்கில் மேலதிகமாக, மேலும் 150 பேர்ச்சஸ் காணியினை 50 வருட குத்தகை வரி அடிப்படையில் குறித்த நிறுவனத்திற்கு வழங்குவதற்கும், குறித்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் அங்கீகாரமும், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் சிபார்சினையும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், குறித்த நிர்மாண பணிகளை மேற்கொள்ளும் போது குறித்த அரச நிர்வனங்களின் சிபார்சுகளின் அடிப்படையில் செயற்படுவதற்கு அக்கம்பனியை அறிவுறுத்துவதற்கும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. மாத்தளை புகையிரத நிலைய களஞ்சியசாலை, பொதுச்சந்தை தொகுதியொன்றை அமைப்பதற்காக வேண்டி மாத்தளை மாநகர சபைக்கு குத்தகை வரியின் அடிப்படையில் பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 12)
புகையிரத திணைக்களத்திற்கு உரித்தான மாத்தளை புகையிரத பொருட் களஞ்சியசாலை, பொதுச்சந்தை தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்காக மாத்தளை மாநகர சபைக்கு 05 வருட காலத்துக்கு குத்தகை வரியின் அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. சூழலுக்கு இயைபான நிலையான நிதியத்தின் கடன் யோசனை செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தல் (E – Friends II Resolving Fund) (விடய இல. 16)
சர்வதேச ஒத்துழைப்புக்கான யப்பான் நன்கொடையின் கீழ், 2004ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரை செயற்படுத்தப்பட்ட 'சூழலுக்கு இயைபான கருத்திட்டம் - ii கடன் யோசனை செயற்றிட்டத்தின்' கீழ் நிலையான நிதியத்தில் வைப்பிலிடப்பட்ட மிகுதி நிதி மற்றும் திறைச்சேரியின் மூலம் 2017ம் ஆண்டிற்காக இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 1,300 மில்லியன் நிதியினை பயன்படுத்தி சூழலுக்கு இயைபான நிலையான நிதியத்தின் கடன் யோசனை செயற்றிட்டத்தினை (E – Friends II Resolving Fund) செயற்படுத்துவதற்காகவும், விரயத்தை குறைத்தல், சக்தி வளத்தினை மீதப்படுத்தல் மற்றும் சூழல் மாசுபடுவதை தடுத்தல் ஆகியவற்றுக்காக தொழிலாளர்களுக்கு உதவி செய்தல் ஆகிய இக்கடன் யோசனை முறையின் நோக்கங்களை அடைந்துள் கொள்வதற்காக சரியான பலனாளிகளுக்கு இதன் கீழ் கடன் வழங்குவதை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் பலனாளிகளை இனங்காணும் முறையான செயன்முறையொன்றை தயாரிப்பது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. வட மாகாணத்தில் நிலையான மீனவ அபிவிருத்தி வேலைத்திட்டத்தை செயற்படுத்தல் (விடய இல. 20)
யுத்தத்தின் விளைவால் நீண்ட காலமாக அபிவிருத்தி நடவடிக்கைகள் குறைவாக காணப்பட்ட வட பகுதியின் மீனவ அடிப்படை வசதிகளை விருத்தி செய்வது அதிவிசேட மற்றும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய தேவையாக உள்ளது. அதற்காக நிதியுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் முன்மொழியப்பட்டுள்ள 'வட மாகாண நிலையான மீனவ அபிவிருத்தி வேலைத்திட்டத்தை' செயற்படுத்துவது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் தரமான விதைகளை இறக்குமதி செய்தல் (விடய இல. 21)
உணவு உற்பத்தி தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் (2016 – 2018) கீழ் இலங்கையில் உற்பத்தி செய்யக் கூடிய, அதே போன்று மேலும் உள்நாட்டுத் தேவையில் 65ம% - 70ம% என்ற அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்ற இந்தப் பெரிய வெங்காயத்தின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. இலங்கையில் பெரிய வெங்காய உற்பத்திற்கு வருடாந்தம் 40,000 கிலோ கிராம் அளவான பெரிய வெங்காய விதைகள் தேவைப்படும். எனினும் உள்நாட்டில் குறித்த தொகையில் அரைவாசிக்கும் குறைவான அளவே உற்பத்தி செய்யப்படுகின்றன. மிகுதி தொகை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற போதும் அதன் தரம் தொடர்பில் பிரச்சினை காணப்படுகின்றன. அதனால், உயர் தரத்திலான 6,200 கி.கி. விதைகளை இந்தியாவின் ஒரு ஆராய்ச்சி நிறுவனமான தேசிய வீட்டுத் தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மன்றத்திடம் இருந்து இறக்குமதி செய்து குறித்த உற்பத்தியில் கூடிய பயனை அடைந்துக் கொள்வது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. புதிய கிராமங்களை ஏற்படுத்தும் எண்ணக்கருவின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள ஹுட்வில் வீடமைப்பு கருத்திட்டத்தின் பயனாளிகளுக்கு காணி உரித்தையும், உகந்த வீடுகளையும் பெற்றக் கொடுத்தல் (விடய இல. 27)
தோட்டத் தொழிலாளர்களுக்கு உயர் வாழ்க்கை தரத்தை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் புதிய கிராமங்களை ஏற்படுத்தும் எண்ணக்கருவின் கீழ் நுவரெலியா மாவட்டத்தின் ஹுட்வில் வீடமைப்பு கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த கருத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் 71 பேருக்கு காணி உறுதிகளை வழங்குவது தொடர்பில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் கட்டம் - 02 இனை செயற்படுத்தல் (விடய இல. 34)
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலுள்ள வீதிகளில் ஏறத்தாழ 4,000 கி.மீ. நீளமான வீதிகளை புனரமைத்தல், மேம்படுத்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றிற்காக நிதியுதவியளிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் கட்டம் - 02 இனை செயற்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. தேசிய வீதி வலையமைப்பின் மண்சரிவு அனர்த்த பாதுகாப்பு கருத்திட்டத்தின் சிவில் வேலைகளுக்கான இரண்டு ஒப்பந்தப் பொதிகளை வழங்குதல் (விடய இல. 35)
யப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற நிதியின் மூலம் செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய வீதி வலையமைப்பின் மண்சரிவு அனர்த்த பாதுகாப்பு கருத்திட்டத்தின் சிவில் வேலைகளுக்கான இரண்டு ஒப்பந்தப் பொதிகளின் கீழ் வீதி அனர்த்த முகாமைத்துவ தொடர்பில் மத்திய, ஊவா மற்றும் சபரகமுவ ஆகிய மாகாணங்களில் 16 இடங்களில் அமைப்பதற்கு எதிர்பார்க்கபடுகின்ற மண்சரிவு அனர்த்த பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் வழங்குவதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10. மனிங் சந்தையினை புறக்கோட்டையிலிருந்து பெலியகொடையில் மீள அமைவிடப்படுத்தல் - முளைக்குற்றியிடல் அத்திவாரத்திற்கான நிர்மாணம் (Contrition of pita Foundation) (விடய இல. 37)
மனிங் சந்தையினை புறக்கோட்டையிலிருந்து பெலியகொடையில் மீள அமைவிடப்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. அதனடிப்படையில் குறித்த திட்டத்தின் முளைக்குற்றியிடல் அத்திவாரத்திற்கான நிர்மாணத்திற்கான (Contrition of pita Foundation) ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் வழங்குவதற்கு பாரிய நகரம் மற்றம் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
11. சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை தடுப்பதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபை வசம் இருக்கம் நெல் கையிருப்பை விற்பனை செய்தல் (விடய இல. 40)
நெல் சந்தைப்படுத்தல் சபை வசம் இருந்த நெல் கையிருப்பில் 90,958 மெட்ரிக் தொன் நெல், அரிசியாக்கப்பட்டு சந்தைப்படுத்துவதற்காக மாவட்ட மட்டத்தில் ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. லங்கா ச.தொ.ச நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நெல் தொகையானது அரிசியாக்கப்பட்டு ச.தொ.ச வினூடாக ஒரு கி.கி 76 ரூபா வீதம் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், தனியார் நெல் ஆலை உரிமையாளர்களின் மூலம் குறித்த நெல் அரிசியாக்கப்பட்டு சந்தைக்கு விற்பனை செய்யப்படவில்லை எனவும் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. நெல் சந்தைப்படுத்தல் சபை வசம் இருக்கம் நெல் கையிருப்பை லங்கா ச.தொ.ச நிறுவனம், தனியார் நெல் ஆலை உரிமையாளர்களின் ஊடாக அரிசியாக்கப்பட்டு முறையான செயற்றிட்டமொன்றை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தற்போது நெல் வழங்கப்பட்டு அதனை சந்தைக்கு விநியோகிக்காமல் இருக்கும் நெல் ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக விசேட செயற்பாட்டு அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்றை அமைப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் வேண்டுகோளின் படி 10,000 மெட்ரிக் தொன் அரிசியானது இந்துனேசியா அரசாங்கத்தின் மூலம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதுடன், அவ்வரிசி தொகையானது அடுத்த ஒரு சில நாட்களில் இலங்கையை அண்மிக்க உள்ளதாக அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலும் சந்தையில் அரிசி விலை உயர்ந்து காணப்படின் இந்துனேசியா, வியட்நாம் உட்பட மிகவும் அருகிலுள்ள நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு துரிதமாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது.
12. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும், எதியோப்பிய சமஷ;டி ஜனநாயக குடியரசிற்கும் இடையில் இராஜ தந்திர ஆலோசகைள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை (விடய இல. 41)
ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை அம்சங்களுக்கு இணங்கியதாக இருநாடுகளுக்கு இடையில் சம்பிரதாயபூர்வமான நட்பினை மற்றும் ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் நோக்கில், இலங்கை வெளிநாட்டு அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களின் எதியோப்பிய சுற்றுப்பயணத்தின் போது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் எதியோப்பிய சமஷ்டி ஜனநாயக குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் இராஜ தந்திர ஆலோசகைள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் வேலை பார்க்கும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
13. இலங்கையில் நடைபெற ஏற்பாடாகியுள்ள டிஜிட்டல் மாநாடு (விடய இல. 42)
சகலரும் உட்படும் டிஜிட்டல் தேசமாக இலங்கையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கை டிஜிட்டல் பூகோள நிலையமாக எடுத்துக் காட்டும் வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தினால் டிஜிட்டல் மாநாடொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 23 மற்றும் 24ஆந் திகதிகளில் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றது. இந்நிகழ்வில் பேஸ்புக், கூகுல், சோசல் கெப்பிடல், இன்பொயிஸ் போன்ற பூகோள பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த மாநாட்டினை இலங்கையில் நடாத்துவதற்கு தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
14. கிங் நில்வளவை திருப்பம் வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பான அறிக்கை (விடய இல. 44)
குறித்த வேலைத்திட்டத்துக்காக வேண்டி 2015-01-01ம் திகதியிலிருந்து 2015-01-07 வரையான காலப்பகுதியில் திறைசேரியில் இருந்து 3,549 மில்லியன் ரூபாய்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், நிதியாண்டின் ஆரம்பத்தில் இவ்வாறான தொகையானது செலுத்தப்படுவதானது அசாதாரண சூழ்நிலையாகும் என வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்ந்து அமைச்சரவைக்கு சிபாரிசுகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் மூலம் மேற்பார்வை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இத்தரவுகளை பரிசீலனை ஒன்றை மேற்கொள்வதற்காக வேண்டி நிதிக்குற்றவியல் புலனாய்வு பிரியிடம் (FCID) ஒப்படைக்குமாறு அவ்வமைச்சரவை உப குழுவின் மூலம் முன்வைக்கப்பட்ட சிபாரிசிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.