• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

2019.03.19 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் 

01.இளம் பால் உற்பத்தி வியாபாரிகளை உருவாக்குவதன் மூலம் தேசிய பால் உற்பத்தியினை கட்டியெழுப்புதல் (விடய இல. 05)
 
இலங்கையர்களின் நுகர்வுக்காக வேண்டி போதியளவு பால் உற்பத்திப் பொருட்கள் நாட்டினுள் உற்பத்தி செய்யப்படாமையினால் அதிகளவிலான அந்நியச் செலாவணிகள் வருடாந்தம் நாட்டைவிட்டு வெளியே செல்கின்றது. இந்நிலைமையினை கட்டுப்படுத்த வேண்டும் எனின் உள்நாட்டு பால் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில், உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இளம் பால் உற்பத்தி வியாபாரிகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 100 லீட்டர் பால் உற்பத்தி செய்கின்ற 10,000 இளம் பால் உற்பத்தியாளர்களை இத்திட்டத்தின் கீழ் உருவாக்குவதன் மூலம் நாட்டின் பால் உற்பத்தியினை சிறந்ததொரு மட்டத்துக்கு கொண்டு வர முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
அதனடிப்படையில், கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சானது, மத்திய மாகாண சபை மற்றும் கண்டி மாவட்ட செயலகத்தின் உதவியினை பெற்று, இந்த வேலைத்திட்டத்தினை கண்டி மாவட்டத்தில் செயற்படுத்துவதற்கும், அதன் வெற்றியின் அடிப்படையில் ஏனைய பிரதேசங்களில் அவ்வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
02. மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை செயற்படுத்துவதற்கு அவசியமான நிதியினை திரட்டிக்கொள்ளல் (விடய இல. 08)
 
வடமேல், வட மத்திய மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களில் காணப்படுகின்ற வரண்ட பிரதேசங்களுக்கு மகாவலி ஆற்றின் நீரினை பெற்றுக் கொடுப்பதன் மூலம் அப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் நிதியளிக்கப்படுகின்ற மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் இரண்டாம் கட்டமாக 210 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியினை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து பெற உள்ளதுடன், அதனை மகாவலி ஆற்றுடன் தொடர்புபட்ட பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நிதியினை பெற்றுக்கொள்வது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
03. பட்டதாரி கற்கைநெறிகளை தொடரும் மாணவர்களுக்கு சலுகை கடன் வசதிகளை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 10)
 
அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற வெட்டுப்புள்ளி முறைமையின் மூலம் பல்கலைக்கழக நுழைவு கிடைக்காத மாணவர்களுக்கு பட்டங்களை பெற்றுக் கொடுக்கும் அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்றைநெறிகளை தொடர்வதற்காக ரூ.800,000 உயரிய கடன் தொகைக்கு உட்பட்டு, வட்டியற்ற சலுகை கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதற்கு சமாந்தரமாக அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் கல்வியியல் பட்டப்படிப்பினை தொடர்வதற்காக வேண்டி க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியெய்திய இளம் சமூகத்தினரின் அன்றாட செலவுகள் உள்ளடங்கும் வகையில் 1.1 மில்லியன் ரூபா வரை கடன் தொகையினை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
 
அதனடிப்படையில், ஏனைய கற்கை நெறிகளை தொடரும் மாணவர்களுக்கும் ஏனைய செலவுகளுக்காக வேண்டி வருடாந்தம் 75,000 ரூபா வீதம் மேலதிகமாக வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த சலுகை கடன் தொகையினை மூன்று வருட பட்டப்படிப்பிற்காக வேண்டி 1,025,000 ரூபா வரையும், நான்கு வருட பட்டப்படிப்பிற்காக வேண்டி 1,100,000 ரூபா வரையும் அதிகரிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
04. சர்வதேசம் அங்கீகரிக்கின்ற வணிகமானி பாடசாலையொன்றை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கான வசதிகளை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 14)
 
இசர்வதேசம் அங்கீகரிக்கின்ற வணிக பட்டம் வழங்குகின்ற பாடசாலையொன்றை உலகில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதன் பலனாக வணிக பட்டம் வழங்குகின்ற பாடசாலையொன்றை இலாப நோக்கமற்ற நிலையில் இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு ஐக்கிய அமெரிக்காவின், கெலிபோனியாவின் பர்க்லி பல்கலைக்கழகத்தின் மூலம் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இப்பாடசாலையினை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக ஸ்தாபிப்பதற்கும் அப்பலைக்கழகம் எதிர்பார்க்கின்றது. திறமைக் கொண்ட ஆனால் பொருளாதார வசியற்ற மாணவர்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கின்றது.
 
இவ்வணிக பட்டம் வழங்கும் பாடசாலையினை கம்பஹா மாவட்டத்தில் ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் அடிப்படை திட்டமிடல் நடவடிக்கைகளுக்காக வசதிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள், உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஸ்மன் கிரியெல்ல அவர்கள் மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இணைந்து முன்வைத்த ஒன்றிணைந்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
05. 400 மெகாவொட் இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையமொன்றை அம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஸ்தாபித்தல் (விடய இல. 15)
 
சீன அரசாங்கத்தினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள China Machinery Engineering Corporation (CMEC) நிறுவனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகிய இரண்டும் இணைந்து 400 மெகாவொட் இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையம் மற்றும் இயற்கை வாயு சேமிக்கப்படும் பகுதி ஆகியவற்றை நிர்மாணிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
06. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வேண்டி ஹங்கேரியா அரசாங்கத்தின் நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளல் (விடய இல.16)
 
பின்வரும் வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்காக வேண்டி 149 மில்லியன் யூரோ கடன் வசதிகளை பெற்றுத்தருவதற்கு ஹங்கேரியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
 
• பிங்கிரிய – உடுபத்தாவ நீர்வழங்கல் வேலைத்திட்டம் (53 யூரோ மில்லியன் ரூபா) 
• கொகுவலை, கிருலபனை மற்றும் யாங்கல்மோதர மேம்பாலத்தை ஸ்தாபித்தல் (52 யூரோ மில்லியன் ரூபா)
• நீதிமன்ற முகாமைத்துவ இலத்திரனியல் பிரிவு (32 யூரோ மில்லியன் ரூபா)
• புகையிரத குறுக்கு வீதிகள் பாதுகாப்பு வேலைத்திட்டம் (12 யூரோ மில்லியன் ரூபா)
 
அதனடிப்படையில், மேற்கூறப்பட்ட கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி ஹங்கேரியா அரசாங்கத்துடன் நிதி ஒத்துழைப்பு கட்டமைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
07. டன்சானியா, ருவண்டா, அசர்பைஜான் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளல் (விடய இல. 18,19 மற்றும் 21)
 
டன்சானியா, ருவண்டா, அசர்பைஜான் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும், பின்னர் அவ்வொப்பந்தத்தின் உள்ளடக்கங்களை செயற்படுத்துவது தொடர்பிலும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
08. விமான நிலையத்தினுள் சட்டவிரோதமான தரகர் நடவடிக்கைகளை தடுப்பதற்காக வேண்டி சட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் (விடய இல. 22)
 
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் நடமாடும் சூழலினுள் சட்டவிரோதமாக சுற்றித்திரிகின்ற பல்வேறு தரகர்களின் வுழரவள செயற்பாடுகளின் காரணத்தினால் பயணிகள் பல்வேறு கஷ;டங்களை அனுபவிப்பதை கவனத்திற் கொண்டு, அந்நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக சட்டமொன்றை விதிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் 2010ம் ஆண்டு 14ம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்தினை திருத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் சமரப்பிப்பதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
09. தொலைக்காட்சி நாடகங்கள், படங்கள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகளுக்கான வரி (விடய இல. 29)
 
உள்நாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், படங்கள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகளின் மீது வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், படங்கள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகள் செலுத்துகின்ற தாக்கத்தினை கருத்திற் கொண்டு, வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், படங்கள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகளின் மீது விதிக்கப்படுகின்ற வரியினை அதிகரிப்பதற்கு 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டது.
 
அதனடிப்படையில், குறித்த வரியினை திருத்தம் செய்து 2006ம் ஆண்டு 11ம் இலக்க நிதிச்சட்டத்தின் கீழ் குறித்துறைக்கப்பட்டுள்ள 2044/21ம் இலக்க 2017-11-07ம் திகதிய வர்த்தமானி அறிவித்தலினை அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் சமரப்பிப்பதற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
10.Chanos chanos இன மீனின வளர்ப்பு வேலைத்திட்டத்துக்காக குத்தகை அடிப்படையில் காணியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 35)
 
அதிக வருமானம் ஈட்டித்தருகின்ற Chanos chanos இன மீனின வளர்ப்பு வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பான யோசனையொன்றை அகில இலங்கை பல்வகை மீன்பிடி இயந்திர சங்கம் முன்வைத்துள்ளது. தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட உள்ள (அரச – தனியார் இணை அடிப்படையில், உரிய சுற்றுசூழல் மதிப்பீட்டு ஆய்வினை மேற்கொள்வதற்கு இணங்க) இவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக புத்தளம் மாவட்டத்தின், பங்களாதெனியவில் காணப்படுகின்ற 12.14 ஹெக்டெயர் இலங்கை நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரிய நிலப்பரப்பினை அச்சங்கத்துக்கு குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
11.பெருந்தோட்ட பிரஜைகளுக்காக வீதி அடிப்படை வசதிகளை விருத்திசெய்தல் மற்றும் பாடசாலைகளுக்காக கேட்போர் கூடங்களை அமைத்தல் (விடய இல. 44)
 
மனிதனின் அடிப்படை தேவைகளை அடைந்துக் கொள்வதற்காக வேண்டி பிரவேசிப்பதற்கான மார்க்கங்கள் மோசமாக பாதிப்படைந்துள்ளமையினால், பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தர சுட்டி நாட்டின் ஏனைய பிரதேசங்களை விடவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இந்நிலைமையினை கவனத்திற் கொண்டு ஹட்டன் பிரதேசத்திலுள்ள எபோர்ட்ஸ்லி இருந்து புரோடொக் பகுதி வரையான வீதியினை தார் இட்டு செப்பனிடுவது தொடர்பில் மலையக புதிய கிராமங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் பிரஜை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
12.இலங்கை பாராளுமன்றத்தில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற வலையமைப்பு அடிப்படை வசதிகளை (Network Infrastructure) விருத்தி செய்தல் (விடய இல. 46)
 
காலத்துக்கு ஏற்றாற் போல் பாராளுமன்ற நடைமுறையையும் மாற்ற வேண்டிய நிலையில் இலங்கை தகவல் மறறும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) மூலம் 'இலத்திரனியல் பாராளுமன்ற வேலைத்திட்டம்' அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதன் கீழ் தற்போது காணப்படுகின்ற வலையமைப்பு அடிப்படை வசதிகளை (Network Infrastructure) விருத்தி செய்வதற்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு உகந்த கம்பனியொன்றை தெரிவு செய்வதற்காக அரசாங்கத்தின் கொள்முதல் செயன்முறையினை பின்பற்றுவது தொடர்பில் இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரின் பிரனாந்து அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
13. மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தினை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் மீண்டும் செயற்படுத்துதல் (விடய இல. 54)
 
யுத்தத்தினால் மோசமாக செயலிழந்த யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசத்தில் அமைந்துள்ள மயிலிட்டி மீன்பிடி துறைமுகமும் அதனுடன் தொடர்புபட்ட 54 ஏக்கர் காணியினை 2017ம் ஆண்டு அரசாங்கம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக விடுவித்தது. அதனடிப்படையில் அப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள அப்பிரதேசத்தில் குடியமர்ந்துள்ளதுடன், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக மய்லடி மீன்பிடி துறைமுகத்தை பயன்படுத்துவதற்கும் முன்வந்துள்ளனர். இந்த வகையில் மோசமாக செயலிழந்து காணப்படுகின்ற குறித்த துறைமுகத்தினை மீள பயன்படுத்துவதற்கு ஏதுவான வகையில் மறுசீரமைப்பு செய்வதற்கான வேலைத்திட்டங்களை துரித கதியில் ஆரம்பிப்பதற்கு அவசியமான செயற்றிட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
14. தேசிய விடுமுறை விடுதிகளை (NHR) விருத்தி செய்தல் (விடய இல. 55)
 
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) மூலம் நிர்வகிக்கப்படுகின்ற அநுராதபுரம், நுவரெலியா, பண்டாரவளை மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள தேசிய விடுமுறை விடுதிகளில் காணப்படுகின்ற சுற்றுலாப் பயணிகளை கவரும் விடயங்களை மேலும் விருத்தி செய்யும் நோக்கில், அவ்விடுமுறை விடுதிகளை புனரமைப்பு செய்வது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
15. இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வாசிகசாலை கட்டிடத் தொகுதியினை நிர்மாணித்தல் (விடய இல. 57)
 
இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வாசிகசாலை கட்டிடத் தொகுதியின் முதலாம் கட்ட நிர்மானப்பணிகளுக்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் 315 மில்லியன் ரூபா ஒப்பந்த தொகைக்கு M/s CML-MTD Construction Ltd. . நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஸ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
16. நவீன ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கட்டிடத் தொகுதியின் (MRDC) வெளியக பணிகள் மற்றும் பூமி அபிவிருத்தி பணிகளுக்காக ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 58)
 
நவீன ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கட்டிடத் தொகுதியின் (MRDC) வெளியக பணிகள் மற்றும் பூமி அபிவிருத்தி பணிகளுக்காக ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் 215.9 மில்லியன் ரூபா ஒப்பந்த தொகைக்கு M/s Ranasiha Lanka Construction (Pvt) Ltd. நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
17. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திரிசிகிச்சைஃ மருத்துவ பிரிவினை விரிவுபடுத்துதல் (விடய இல. 60)
 
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திரிசிகிச்சைஃ மருத்துவ பிரிவினை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் 690 மில்லியன் ரூபா ஒப்பந்த தொகைக்கு M/s Subasinghe Constractors & Earth Movers நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
18. 2018ம் ஆண்டில் செயற்படுத்தப்பட உள்ள நகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 63)
 
2018ம் ஆண்டில் செயற்படுத்தப்பட உள்ள நகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தினை நகர அபிவிருத்தி அதிகார சபை, பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம், இலங்கை காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனம், மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகிய நிர்வனங்களுக்கு வழங்குவது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
19. பண்டாரகமை, அலுபோமுல்லை, குறுக்கு வீதி சந்தை மற்றும் வணிக கட்டிடத்தொகுதியினை நிர்மாணித்தல் (விடய இல. 64)
 
'சுபித புரவர' அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 200 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவின் கீழ் பண்டாரகமை, அலுபோமுல்லை, குறுக்கு வீதி சந்தை மற்றும் வணிக கட்டிடத்தொகுதியினை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கும், அதற்காக பண்டாரகமை வரையறுக்கப்பட்ட பல் சேவை கூட்டுறவு சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
20. 'சூரிய பல சங்கிரமய' வேலைத்திட்டத்தின் கீழ் அரச நிர்வனங்களுக்காக சூரிய சக்தி முறைமையினை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 65)
 
'சூரிய பல சங்கிரமய' வேலைத்திட்டத்தின் கீழ் அரச நிர்வனங்களுக்காக சூரிய சக்தி முறைமையினை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 63 வைத்தியசாலைகள், 13 அரச பாடசாலைகள் மற்றும் ஒரு பிரதேச செயலகத்தில் இச்சூரிய சக்தி முறைமையினை பொருத்தும் ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
21. யான்ஓயா நீர்த்தேக்க வேலைத்திட்டத்தின் கீழ் இடது வங்கி பிரதான கால்வாயினை நிர்மாணித்தல் (விடய இல. 66)
 
யான்ஓயா நீர்த்தேக்க வேலைத்திட்டத்தின் கீழ் இடது வங்கி பிரதான கால்வாயினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் 39.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒப்பந்த தொகைக்கு M/s China CAMC Engineering Co. Ltd. (CAMCE).  நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
22. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பங்கு உரிமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் (விடய இல. 68)
 
அரச – தனியார் இணை வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்தி அதனை அபிவிருத்தி செய்வதற்கான இணை ஒப்பந்தம் 2017ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் திகதி கைச்சாத்திடப்பட்டது. அதனடிப்படையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட பணிகளை மேற்கொள்ளும் இரு நிறுவனங்களும் தமது செயற்பாட்டினை 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 09ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. HIPG நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் 85% ஆனது CM Port நிறுவனத்துக்கோ அல்லது அதனுடன் தொடர்புடைய நிர்வனத்துக்கோ உரித்தாவதுடன், 15% ஆனது இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உரித்தாகின்றது. அதேபோன்று HIPS நிறுவனத்தின் பங்கு முதலீட்டில் 58% ஆனது HIPG நிறுவனத்துக்கு கிடைப்பதுடன், எஞ்சிய 42% ஆனது இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உரித்தாகின்றது. அதனடிப்படையில் பங்கு உரிமை தொடர்பில் உரிய தரப்பினருடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
23. சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புக்குள்ளான சொத்துக்களை மறுசீரமைப்பு செய்வதற்காக அரச செலவீனங்களை முகாமைத்துவம் செய்தல் (விடய இல. 71)
 
சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புக்குள்ளான சொத்துக்களை மறுசீரமைப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக தேவைப்படுகின்ற நிதியினை தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியினுள் முகாமைத்துவம் செய்து கொள்வதற்கு ஏதுவான வகையில், பல்வேறு அமைச்சுக்களின் மூலம் இதுவரை செலவு செய்யப்படாத நிதியனை பயன்படுத்துவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
24. அரச முதலீட்டினை செயற்றினான முறையில் திட்டமிடுதல் மற்றும் வேலைத்திட்டங்களை தயாரிப்பதற்கான வசதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் (விடய இல. 75)
 
அரச முதலீட்டினை செயற்றினான முறையில் திட்டமிடுதல் மற்றும் வேலைத்திட்டங்களை தயாரிப்பதற்கான வசதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தினை () செயற்படுத்துவதற்கு அவசியமான 4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை திரட்டிக் கொள்ளும் நோக்கில் உலக வங்கியுடன் நிதியியல் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
25. மீதொடமுல்லை கழிவகற்றும் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அகற்றப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்காக வழங்கப்பட்டு வந்த 50,000ரூபா வீட்டுக்கூலி கொடுப்பனவினை தொடர்ந்தும் பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 78)
 
மீதொடமுல்லை கழிவகற்றும் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அகற்றப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்காக வழங்கப்பட்டு வந்த 50,000ரூபா வீட்டுக்கூலி கொடுப்பனவினை இறுதியாக குடியமர்த்தப்பட்ட 72 குடும்பங்களுக்காக 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மீள குடியமர்த்தப்பட்ட 2017-11-08ம் திகதி வரையான இரு மாத காலத்துக்கும் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
26. கொழும்பு சன நெரிசல் மிகுந்த புகையிரத வீதி வேலைத்திட்டத்துக்கான சாத்தியவள ஆய்வறிக்கை மற்றும் முழு திட்டத்திற்கான ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 79)
 
கொழும்பு சன நெரிசல் மிகுந்த புகையிரத வீதி வேலைத்திட்டத்துக்கான சாத்தியவள ஆய்வறிக்கை மற்றும் முழு திட்டத்திற்கான ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் 256,030 பவுன்கள், 6,481,575 அமெரிக்க டொலர்கள் மற்றும் 379,213,616 ரூபா ஒப்பந்த தொகைக்கு M/s DOHWA Engineering Co. Ltd.  மற்றும் அதன் இணை நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
27. தனியார் வைத்தியசாலைகளின் மூலம் அவசர இருதய சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளல் (விடய இல. 82)
 
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காணப்படுகின்ற இரு இருதய சத்திரசிகிச்சை பிரிவுகளிலும் புனர்நிர்மானம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால், அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய இருதய சத்திரசிகிச்சைகளை அரசாங்கத்தின் செலவில் தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கும், குறித்த புனர்நிர்மானப்பணிகளை துரித கதியில் மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாக கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாதர்ன ஆகியோர் முன்வைத்த ஒன்றிணைந்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
28. வாழ்க்கை செலவினை குறைப்பதற்காக குறுகிய கால செயற்பாடுகள் (விடய இல. 84)
 
காலநிலை மாற்றத்தின் விளைவினால் நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையினால் அத்தியவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன. அரிசி, தேங்காய் மற்றும் மரக்கறி வகைகளின் விலைகள் உயர்வடைந்துள்ளமையினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கௌரவ பிரதமரினால் அமைச்சரவையில் எடுத்துரைக்கப்பட்டது. குறித்த நிலையினை கட்டுப்படுத்தும் நோக்கில் அத்தியவசிய உணவு உற்பத்திப் பொருட்களை போதுமானளவு சந்தைக்கு வழங்குவதற்காக பின்வரும் நடவடிக்கைகளை துரிதகதியில் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
 
• திறைசேரியின் மேற்பார்வையின் கீழ் அரிசி இறக்குமதி செய்வதற்காக ஏதேனுமொரு தனியார் நிறுவனத்துக்கோ அல்லது இலங்கை கூட்டுறவு சங்கத்துக்கோ வசதிகளை செய்து கொடுத்தல்.
 
• தேவையான தேங்காய்களை பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இறக்குமதி செய்தல்.
 
• பயிர்செய்கை குறைவடைந்துள்ளமையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளுக்கு மேலதிகமாக வழங்க முடியுமான சலுகைகள் தொடர்பில் யோசனைகளை முன்வைப்பதற்கு என அதிகாரிகள் குழுவொன்றினை நியமித்தல்.

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.