• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அமைச்சரவை தீர்மானங்கள் 04.04.2017

01.சமுத்திரத்துடன் தொடர்பான மீட்டெடுப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை விருத்தி செய்தல் (விடய இல. 10)
 
இலங்கை கையொப்பமிட்டுள்ள சர்வதேச ஒப்புதல்களின் அடிப்படையில் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி மற்றும் கப்பல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற வேளையில் விபத்துக்கு உள்ளாகின்ற கப்பல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் தேடல் மற்றும் மீட்டெடுக்கும் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் சமுத்திரத்துடன் தொடர்பான மீட்டெடுப்பு ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. 
அதனடிப்படையில், பல நவீன வசதிகளுடன் கூடிய சமுத்திரத்துடன் தொடர்பான மீட்டெடுப்பு ஒருங்கிணைப்பு பிரதான மத்திய நிலையத்தை கொழும்பில் ஸ்தாபிப்பதற்கும், உயிர்க்காப்பு மத்திய நிலையமொன்றை அம்பாந்தோட்டையில் ஸ்தாபிப்பதற்கும், அதற்கு மேலதிகமாக காலி, திருகோணமலை, பருத்தித்துறை, மொல்லிகுளம், அருகம்பே, மட்டக்களப்பு மற்றும் கல்அராவ ஆகிய பிரதேசங்களில் உப மத்திய நிலையங்களை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டங்களை 2017ம் ஆண்டில் ஆரம்பித்து 04 வருடங்களினுள் பூரணப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
 
02. இலங்கையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்ட (UNDP)) காரியாலயத்திற்காக அரசாங்கம் மெற்கொள்கின்ற செலவுகள் (விடய இல. 11)
 
1967ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டமானது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அன்றிலிருந்து 2014ம் ஆண்டு வரை இலங்கையானது வறுமைக் கோட்டுக்கு கீழ் காணப்படும் நாடு எனும் வகையில் 39,500 அமெரிக்கா டொலர் தொகையின் மூலம் குறித்த திட்டத்துக்கு தமது பங்களிப்பாக வழங்கி வந்தது. எனினும் 2014ம் ஆண்டின் பின்னர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டமையினால் 2016-12-31ம் திகதி வரை 1.182 மில்லியன் அ.டொலர் தொகையினை நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளது. அந்நிலுவை தொகையினை மீள செலுத்துவதற்கு பதிலாக இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினால் முன்வைக்கப்பட்ட சிபார்சுகளை செயற்படுத்துவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
03. தெற்காசியாவில் கலாச்சார கேந்திர நிலையமாக கொழும்பு நகரை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 12)
 
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானோரே எமது நாட்டுக்குரிய கலாச்சார முக்கியத்துவமிக்க விடயங்களால் ஈர்க்கப்பட்டு இங்கு வருகின்றனர். அதனடிப்படையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சர்வதேச கலை மற்றும் கலாச்சார விடயங்களை விருத்தி செய்வதற்காக வேண்டி தெற்காசியாவில் நாட்டியம் மற்றும் கண்காட்சி கேந்திர நிலையமாக கொழும்பு நகரை அபிவிருத்தி செய்தல் மற்றும் அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறித்த பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
04. தேசிய நிதியின் மூலம் தேசிய ஒப்பந்தக்காரர்கள் ஊடாக தேசிய பெருந்தெருக்கள் 20 இனை புனர்நிர்மாணம் செய்தல் (விடய இல. 14)
 
இலங்கை பூராகவும் காணப்படுகின்ற 12,210 கிலோ மீற்றர் நீளமான பெருந்தெருக்களில் 4,300 கி.மீ. நீளமான பெருந்தெருக்கள் புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகின்றது. A, B  வகைகளுக்கு உரித்தான 20 பெருந்தெருக்களை 58 பில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் அடுத்து வரும் 03 வருட காலப்பிரிவிற்குள் புனர்நிர்மாணம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய ஒப்பந்தக்காரர்களின் தரத்தினை விருத்தி செய்து, அவர்களை வீதி அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளில் உள்வாங்கும் முக்கியத்துவம், தேசிய வங்கிகளில் இருந்து அவற்றுக்கு தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் அவகாசத்தையும் கருத்திற் கொண்டு இப்பெருந்தெருக்கள் புனர்நிர்மாணம் செய்வதற்காக வேண்டி 'Swiss Challenge' கொள்முதல் முறையினை பின்பற்றி அக்கறை காட்டுகின்ற தேசிய கம்பனிகளிடமிருந்து விலை மனுக்களை கோருவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர்  லகஷ்மன் கிரியெல்ல முன்வைத்த யோசனைக்குஅமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
05. கண்டி சுரங்கத்தினை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 15)
 
கண்டி பிரதேசத்தில் காணப்படுகின்ற வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் தென்னங்குபுர பிரதேசத்தில் இருந்து சுதுகும்பொல பிரதேசம் வரையில் 4.36 கி.மீ நீளமான சுரங்க பாதையொன்றை மற்றும் 1.2 கி.மீ நீளமான வீதியினை 04 சுவடுகளுடன் கூடிய வீதியாக மாற்றுவதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்காக 252.30 மில்லியன் ரூபா செலவாகும் என மிதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தொகையில் 199.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை வழங்குவதற்கு கொரியாவின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியம் (EDCF) இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கும், குறித்த கடன் தொகை தொடர்பான நியமங்கள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பில் கலந்துரையாடுவது தொடர்பில் வெளியக மூலவளத் திணைக்களத்துக்கு அதிகாரத்தை வழங்குவதற்கும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
06. ஸ்ரீ ஜயவர்தனபுற பல்கலைகழகத்தின் அடுத்த கட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காணியொன்றை கொள்வனவு செய்தல் (விடய இல.17)
 
ஸ்ரீ ஜயவர்தனபுற பல்கலைகழகத்தின் அடுத்த கட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தனியார் வசமுள்ள 377.5 பேர்ச்சஸ் காணி துண்டொன்றை பல்கலைக்கழக நிதி மற்றும் அரச நிதியினை பயன்படுத்தி 481.31 மில்லியன் ரூபா தொகைக்கு கொள்வனவு செய்வது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல  முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
07. பாணந்துரை, புதிய தொழிற்பயிற்சி நிலையமொன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 22)
 
களுத்துறை மாவட்டத்தில் தொழிற் பயிற்சி நிலையங்களில் இணைத்துக் கொள்ளப்படும் இளைஞர்களின் தொகையினை அதிகரிக்கும் நோக்கில், பாணந்துரை பிரதேசத்தில் 370 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் புதிய தொழிற் பயிற்சி நிலையமொன்றை, இரு வருட காலத்தினுள் ஸ்தாபிப்பது தொடர்பில் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
08. சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளை விருத்தி செய்வதற்கான இந்து சமுத்திர நாடுகளின் சங்கத்தின் (Indian Ocean Rim Association) உறுப்பு நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை (விடய இல. 24)
 
பல்வேறு நன்மைகளை அடைந்துக் கொள்ளும் நோக்கில் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளை விருத்தி செய்வதற்கான இந்து சமுத்திர நாடுகளின் சங்கத்தின் (Indian Ocean Rim Association) உறுப்பு நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை சார்பில் கைச்சாத்திடுவது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகள் அமைச்சர் கௌரவ ரிஷhட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
09. நன்னீர் உயிரினங்களை விருத்தி செய்வதற்காக பயன்பாடற்ற வயல் நிலங்களை பயன்படுத்தும் வேலைத்திட்டம் (விடய இல. 25)
 
நன்னீர் உயிரினங்களை விருத்தி செய்வதற்காக பயன்பாடற்ற வயல் நிலங்களை பயன்படுத்துவதன் மூலம் 10,000 மெட்ரிக் தொன் நன்னீர் மீன்  வகைகளை உற்பத்தி செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுவதுடன், அவற்றின் மூலம் 2,500 மில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில், அதற்கு தேவையான பயன்பாடற்ற நிலங்களை உரிய கற்கைகளை மேற்கொண்டதன் பின்னர் குறித்த நிறுவனங்களின் அங்கீகாரத்தையும் பெற்று, வயல்களில் நீர் வழிந்தோடுவதற்கு தடை ஏதும் ஏற்படாத வகையில், நிரந்தரமாக நன்னீர் உயிரின உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
10.2015ம் ஆண்டு 04ம் இலக்க குற்றத்துக்கான சந்தேக நபர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு உதவுதல் மற்றும் பாதுகாப்பு அளித்தல் சட்டத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 29)
 
இலங்கைக்கு வெளியில் தூர இடத்தில் இருக்கும், ஏதேனும் குற்றமொன்று தொடர்பான சந்தேக நபர்கள் மற்றும் சாட்சியாளர்களின் சாட்சியங்களை அந்நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதுவராலயங்களில் இருந்து நவீன தொழிட்நுட்பத்தின் ஊடாக பெற்றுக் கொள்வது தொடர்பில் தயாரிக்கப்பட்ட 2015ம் ஆண்டு 04ம் இலக்க குற்றத்துக்கான சந்தேக நபர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு உதவுதல் மற்றும் பாதுகாப்பு அளித்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட மூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமாக நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
11.பாலூட்டிகள் 20,000 இனை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் (விடய இல. 31)
 
தேசிய பால் உற்பத்தியினை விருத்தி செய்வதற்காக, 20,000 பாலூட்டிகளை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக எதிர்வரும் மே மாதம் 17ம் திகதி ஒரு தொகை பசுக்கள் கொண்டுவரப்படவுள்ளன. இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்ற உயர் தர பசுக்களை, வர்த்தக அடிப்படையில் பாற் பண்ணைகளை முன்னெடுப்பவர்களுக்கு சலுகை விலைக்கு பெற்றுக் கொடுப்பதற்கும், அதற்கு தேவையான நிதியினை இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்ற சலுகை கடன் செயன்முறையினூடாக பெற்றுக் கொடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்களுக்கு தேவையான பயிற்சிக வழங்கப்படவுள்ளன. தற்போது முதற்கட்டமாக நன்மையடையும் பாற் பண்ணையாளர்களை தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பண்ணைகளின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யப்படுகின்றன. அதனடிப்படையில் குறைந்த பட்சம் பாலூட்டிகள் 10 இனைக் கொண்ட நன்மைப் பெற்ற பண்ணையில் சமூர்த்தி சலுகை பெரும் இருவருக்காவது வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மேற்கூறப்பட்ட செயன்முறையின் கீழ் இவ்வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் பி. ஹெரிசன்  முன்வைத்த  யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
12.மீள குடியமர்த்தப்படுகின்ற மக்களுக்காக சலுகை கடன் முறை (விடய இல. 38)
 
2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில், பயங்கரவாத நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் வழமையான நிலைக்கு திரும்புவதற்காக வசதிகளை செய்து கொடுப்பதற்காக நபர்கள், சொத்துக்கள் மற்றும் கைத்தொழில் புனர்நிர்மாண அதிகாரசபையின் மூலம் இலங்கை வங்கியின் ஊடாக சலுகை கடன் யோசனை முறையொன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை இத்திட்டத்தின் கீழ் 5,222 பயனாளிகளுக்கு 770.1 மில்லியன் கடன் தொகை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் இலங்கை வங்கியினால் வழங்கப்பட்ட 497 மில்லியன் ரூபா தொகையினை பயனாளிகள் திரும்ப செலுத்தியுள்ளனர். அவ்வாறு அறவிடப்பட்ட கடன் தொகையானது சுழற்சி அடிப்படையில் குறித்த பயனாளிகளுக்கே வழங்குவதற்கு பயன்படுத்த முடியும் என இலங்கை வங்கி அறிவித்துள்ளதுடன், அதனடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள் குடியமர்த்தல் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
13. அரச கரும மொழிக் கொள்கைக்கு அமைய அரச, அரச சார்பு துறை நிறுவனங்களில் மற்றும் பொது இடங்களில் பெயர் பலகைகளை இரு மொழிகளில் தயாரித்தல் (விடய இல. 39)
 
அரச கரும மொழிக் கொள்கைக்கு அமைய தயாரிக்கப்படாத பெயர் பலகைகளை அரச கரும மொழிக் கொள்கைக்கு அமைவாக மாற்றுவதற்கான வழிகாட்டல்களை வழங்குவதற்கும், அவ்வாறு பெயர் மாற்றம் செய்வதற்காக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் மேலதிக நிதியினை வழங்குவதற்கும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
14. ஆரம்பக் கைத்தொழில் அமைச்சுக்கும் தாய்லாந்தின் கமத்தொழில் மற்றும் கமத்தொழில் கூட்டுறவு வங்கி மற்றும் தாய்லாந்தின் கசெத்சாத் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை (விடய இல. 40)
 
ஆரம்ப கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பில் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சுக்கும் தாய்லாந்தின் கமத்தொழில் மற்றும் கமத்தொழில் கூட்டுறவு வங்கி மற்றும் தாய்லாந்தின் கசெத்சாத் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்கும் இடையில் இரு வேறு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவது தொடர்பில் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
15. மத்திய கடுகதிப்பாதை கருத்திட்டத்தின் கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான (36.59 கி.மி) பகுதியின் வடிவமைப்பு மீளாய்வு மற்றும் நிர்மாண மேற்பார்வைக்கான ஆலோசனை சேவைகளை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தை வழங்குதல் (விடய இல. 41)
 
மத்திய கடுகதிப்பாதை கருத்திட்டத்தின் கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான (36.59 கி.மி) பகுதியின் வடிவமைப்பு மீளாய்வு மற்றும் நிர்மாண மேற்பார்வைக்கான ஆலோசனை சேவைகளை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனையாளர் பெறுகைக் குழுவின் சிபார்சின் பெயரில் 2,548.91 மில்லியன் ரூபா ஒப்பந்த தொகைக்கு Resources Development Consultants (Pvt) Ltd. உடன் Green Tech Consultant (Pvt) Ltd. மற்றும் Consulting Engineers and Architects Associated (Pvt) Ltd.   கூட்டு நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
16.ருஹுணுபுர நீர் வழங்கல் கருத்திட்டத்தின் மொத்த செலவு மதிப்பீட்டினை மீளாய்வு செய்தல் (விடய இல. 42)
 
ருஹுணுபுர நீர் வழங்கல் கருத்திட்டத்தின் மொத்த செலவு மதிப்பீட்டினை 8,653.54 மில்லியன் ரூபாவிலிருந்து 10,029.64 மில்லியன் ரூபா வரை மீளாய்வு செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் திறைசேரி செயலாளருடன் கலந்துரையாடி பெறப்பட்ட இணக்கத்துக்கு இணங்க குறித்த தொகையில் திருத்தம் செய்வது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
17. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் விசேட சிறுவர் நோய் பிரிவொன்றை அமைத்தல் (விடய இல. 43)
 
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் விசேட சிறுவர் நோய் பிரிவொன்றை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம் மற்றும் பொறியியல் சேவை தனியார் கம்பனிக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்  ராஜித சேனாரத்ன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
18. அரச வைத்தியசாலைகளுக்காக புதிய எனிதீசியா இயந்திரங்கள் 137 இனை கொள்வனவு செய்தல் (விடய இல. 45)
 
அரச வைத்தியசாலைகளுக்காக புதிய எனிதீசியா இயந்திரங்கள் 137 இனை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு M/s Meditechnology Holdings (Pvt) Ltd.  கம்பனிக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
19. இலங்கை மின்சார சபையின் மின்சாரப் பகிர்ந்தளிப்புப் பிராந்தியம் 04 இற்கான அலுவலகக் கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல் (விடய இல. 46)
 
இலங்கை மின்சார சபையின் மின்சாரப் பகிர்ந்தளிப்புப் பிராந்தியம் 04 இற்கான அலுவலகக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 466.66 மில்லியன் ரூபாய் வரியற்ற ஒப்பந்த தொகைக்கு முறையான விலை மனுக்கோரலின் அடிப்படையில் பெறப்பட்ட விலை மனுக்களில் குறைந்த விலை பொருந்திய ஒப்பந்தக்காரரான M/s Sriipalie Constructors (Pvt) Limited நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
20. மன்னார் க்றிட் உப மின்னிலையத்தின் நிர்மாணப் பணிகளது விடயப் பரப்பை திருத்துதல் (விடய இல. 47)
 
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற தூய சக்தி மற்றும் மின்சார வலையமைப்பு வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் மன்னார் க்றிட் உப மின்னிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தமானது 2014ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. குறித்த உப மின்னிலையத்தின் சக்திக் கொள்திறனானது அது ஆரம்பிக்கப்பட்ட உடன் 132kV இலிருந்து 220 kV ஆக அதிகரிப்பதாக இனங்காணப்பட்டது. அதனால் மாறுபடும் விடயப் பரப்பை மேற்கொள்வதற்காக புதிதாக நிதிப் பிரேரணைகள் கோரப்பட்டன. அதனடிப்படையில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பிரதிபலனாக குறித்த மேலதிக ஒப்பந்தத்தை தற்போது ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரருக்கே வழங்குவது தொடர்பில் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
21. இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக 'விருசுமிதுரு' வீடமைப்புத் திட்டத்தை செயற்படுத்தல் (விடய இல. 51)
 
இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் குறித்த படைவீரர்களின் வீடமைப்புச் சிக்கலுக்கு நிரந்தர தீர்வினை வழங்கும் நோக்கில் போதியளவு நிதியினை ஒதுக்கி அதன் மூலம் 3,650 வீட்டு அலகுகளை 04 வருடங்களுக்குள் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் கீழ் 1,950 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளதுடன், இராணுவ வீரர்களுக்காக பாதியளவு நிர்மாணிக்கப்பட்டுள்ள 1,700 வீட்டு அலகுகளை பூரணப்படுத்தி கொடுக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த பலனாளிகள் ரணவிரு சேவைகள் அதிகார சபையினால் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும் புதிய வீட்டு அலகொன்றுக்காக 1.2 மில்லியன் ரூபாய்களும், பாதியளவு வீடொன்றுக்காக 500,000 ரூபாய்கள் மதிப்புள்ள கட்டிட நிர்மாண பொருட்களும் பெற்றுக் கொடுக்கப்பட உள்ளன. அதனடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தை 2017-2020 கால எல்லைக்குள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ரணவிரு சேவைகள் அதிகார சபை ஆகியவை ஒன்றிணைந்து செயற்படுத்துவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மற்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச முன்வைத்த முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
22. கிராமிய விவசாய உற்பத்தியாளர்களுக்கு உதவும் சிறுவிவசாய வியாபாரத்தொழில் பங்குடைமைகள் நிகழ்ச்சித்திட்டம் (SAP) (விடய இல. 56)
 
கிராமிய விவசாய உற்பத்தியாளர்களுக்கு உதவும் சிறுவிவசாய வியாபாரத்தொழில் பங்குடைமைகள் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நிதியுதவியளிப்பதற்கு விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் ((IFAD) இணக்கம் தெரிவித்துள்ளது. குறைந்த வருமானமுள்ள, விவசாய உற்பத்திச் சாத்தியவளம் உயர்வான மாவட்டங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ள இவ்வேலைத்திட்டத்தின் கீழ், 06 வருடங்களினுள் குறைந்த வருமானம் பெறும் 57,500 குடும்பங்களுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முழு முதலீட்டின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற இவ்வேலைத்திட்டத்தை ஜனாதிபதி செயலகம் முன்னெடுக்க உள்ளது. அதனடிப்படையில் குறித்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கும், அதனுடன் தொடர்பான கடன் நிபந்தனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வெளியக மூலவளத் திணைக்களத்துக்கு அதிகாரத்தை அளிப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
23. அரச சார்பற்ற பட்டம் வழங்கும் நிறுவனங்களில் பட்டப்படிப்பு நிகழ்ச்சித் திட்டங்களில் பட்டப்படிப்பினைத் தொடர்வதற்கு மாணவர்களுக்காக வட்டியில்லாக் கடன் திட்டம் (விடய இல. 57)
 
அங்கீகரிக்கப்பட்ட அரச சார்பற்ற பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களில் பட்டப்படிப்பினைத் தொடர்வதற்குத் தலா 800,000 ரூபா வீதம் வட்டியில்லாக் கடன் வசதிகளை வழங்குவது தொடர்பான முன்மொழிவொன்று 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு இருந்தது. இதன் இளைஞர் சமூகத்துக்கு கிடைக்கும் உயர் கல்வி வாய்ப்பு அதிகரிக்கின்றது. அதனடிப்படையில், அதன் முதற் கட்ட நடவடிக்கையாக 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் பெற்றுக் கொண்ட வெட்டுப் புள்ளிகளை கவனத்திற் கொண்டு இதற்கான மாணவர்களை தெரிவு செய்வதற்கும், இதற்காக போதுமான அளவு தேவையான அடிப்படை வசதிகள் கொண்ட வணிக முகாமைத்துவ தேசிய கல்லூரியினை (NSBM) இணைத்துக் கொண்டு இத்திட்டத்தின் முதற் கட்டத்தை செயற்படுத்துவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
24. கேகாலை மாவட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்காக தொடர்ந்தும் நிவாரணம் வழங்கல் (விடய இல. 59)
 
2016ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட அதிக மழையுடன் காலநிலையினால் கேகாலை மாவட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவினை தொடர்ந்து, 1,682 வீடுகளில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானத்துடன் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு சிபார்சு செய்திருந்தது. குறித்த மக்களை மீள குடியமர்த்த நிதி ஒதுக்கிட அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. பின்னர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், இவ்வவதானம் நிறைந்த வீடுகளின் தொகை 1,941 ஆக அதிகரித்துள்ளது. அதனடிப்படையில் புதிதாக இனங்காணப்பட்ட 259 வீடுகளை பாதுகாப்பான இடங்களில் மீண்டும் குடியமரத்துவதற்காக காணிகள் மற்றும் வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்காக மேலதிக திறைசேரி நிதியினை ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
25. முதலீட்டாளர்களுக்கான வரி ஊக்குவிப்புக்கள் (விடய இல. 65)
 
தற்போது வரையப்பட்டு வரும் புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் தேவையான விதப்புரைகள் சேர்க்கப்படுகின்றன. அதனடிப்படையில் புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் அட்டவணை ii இன் கீழ் இணைத்துக் கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ள, முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான ஏற்பாடுகளையும், அட்டவணை iv இன் கீழ் இணைத்துக் கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ள, '2017 – 2019 வரையான காலப்பகுதி வரை முதலீடுகளை மேற்கொள்ளும் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டங்கள் தொடர்பான ஏற்பாடுகளையும் உள்ளடக்கி முன்மொழியப்பட்டுள்ள புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தினை வரைவதற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் நிதியமைச்சர்  ரவி கருணாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
26. 2016/17 பெரும்போகத்தில் வரட்சி காரணமாக அனர்த்தத்திற்குள்ளாகிய கமக்காரக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல் (விடய இல. 66)
 
2016/17 பெரும்போகத்தில் வரட்சி காரணமாக அனர்த்தத்திற்குள்ளாகிய கமக்காரக் குடும்பங்களுக்கும் மற்றும் வரட்சியினால் நெற்பயிர் செய்கையில் ஈடுபடாத குடும்பங்களுக்கும், வரட்சி காரணமாக பிற பயிர் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் ஒரு குடும்பத்துக்கு 10,000 ரூபா அடிப்படையில் விசேட நிதி நிவாரணமொன்றை 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்காக வழங்குவதற்கும், குறித்த தொகையினை தமிழ், சிங்கள புது வருடத்துக்கு முன்பதாக அனைத்து கமக்காரக் குடும்பங்களுக்கும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா  மற்றும் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.