நாட்டின் எதிர்கால சந்ததியினரை போதையின் பிடியிலிருந்து விடுவித்து சுகதேகியான, ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட போதையிலிருந்து விடுபட்ட தேசம் செயற்திட்டம் இன்று சாதகமான பெறுபேறுகளை தர ஆரம்பித்துள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
மதுபானம் மற்றும் சிகரெட் என்பவற்றிலிருந்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானங்கள் வரலாற்றில் முதல் தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளதென மூன்று வாரங்களுக்கு முன்னர் திறைசேரியினால் அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அரசாங்கத்தின் வருமானம் குறைவடைந்தாலும் எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக மேற்கொள்ளப்பட்ட முதலீடாகவே தான் இதனைக் கருதுவதாக தெரிவித்தார்.
நேற்று (11) முற்பகல் கண்டி, தெல்தெனிய மாவட்ட தள மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்தியை அளவிடுவதற்கான பிரதான அளவுகோலாக கல்வியும் சுகாதாரமும் அமைகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் கல்வி கற்ற ஆரோக்கியமான மக்களைக் கொண்ட நாடு மிக விரைவாக அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் சகல துறைகளையும் விரிவானதும், வினைத்திறனானதுமான அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என்பதுடன், வரலாற்றில் முன்னொருபோதும் காணப்படாத வகையில் சர்வதேசத்தின் உதவிகள் தற்போது நாட்டிற்கு கிடைத்துவருவதாகவும் அவற்றை நாட்டின் அபிவிருத்திக்காக உபயோகிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
JICA நிதியுதவி மற்றும் சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நவீன சத்திர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் நீதிமன்ற வைத்திய பிரிவு என்பவற்றைக் கொண்ட ஐந்து மாடி கட்டிடத்தொகுதிக்கு 2013 மே 04 ஆம் திகதி அப்போதைய சுகாதார அமைச்சராக செயற்பட்ட ஜனாதிபதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எந்தவிதமான அனாவசிய பிரச்சினைகளும், கட்டுப்பாடுகளும் இன்றி சிறந்தவொரு நட்பு நாடாக இலங்கையின் அபிவிருத்திக்கு ஜப்பான் அரசு வழங்கிவரும் உதவிகளை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி அவர்கள் ஜப்பான அரசிற்கும், அந்நாட்டு மக்களுக்கும் தனது நன்றியையும் தெரிவித்தார்.
நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத் தொகுதியைத் திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள் அதனைப் பார்வையிட்டதுடன், புதிய வார்ட்டுத்தொகுதியில் தங்கவைக்கப்பட்ட முதல் நோயாளியையும் பதிவு செய்தார்.
மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்கநாயக்கவினால் இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மாகாண சுகாதார அமைச்சர் பந்துல யாலேகம உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்களும், ஜப்பான் நாட்டின பதில் கடமைபுரியும் தூதுவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரும், மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சமிந்த வீரகோன் உள்ளிட்ட பணிக் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.