01. இலங்கை மற்றும் பெலரூஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் (விடய இல. 08)
குற்றங்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதில் இரு நாடுகளுக்குமிடையில் பலனுள்ள ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ளல் மற்றும் சந்தேக நபர்களை குறித்த நாட்டுக்கு அனுப்புதல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் பெலரூஸ் குடியரசிற்கும் இடையில் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. புதுப்பிக்கத்தகு வலுச்சக்தி உற்பத்திக்காக மகாவலி பொருளாதார வலயத்தினை பயன்படுத்தல் (விடய இல. 10)
காலநிலை மாற்றம் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCC) அங்கத்துவ நாடு எனும் ரீதியில் தீங்கு விளைவிக்கக் கூடிய வாயுக்களின் தாக்கத்தினை குறைத்துக் கொள்ளுவது தொடர்பில் இலங்கை இணக்கத்தை தெரிவித்துள்ளது. தீங்கு விளைவிக்கக் கூடிய வாயுக்களின் தாக்கத்தினை குறைத்துக் கொள்வதில் வலுச்சக்தி உற்பத்தி துறை பிரதான பங்களிப்பினை செலுத்துகின்றது. அதன்போது டீசல் மற்றும் அனல் போன்ற பெற்றோலிய வகைகளை பயன்படுத்தும் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு பதிலாக காற்று, நீர் மின்னுற்பத்தி மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தகு வலுச்சக்தி வளங்களை பயன்படுத்தி மின்னுற்பத்தியில் ஈடுபட வேண்டிய தேவையை அரசாங்கம் உணர்ந்துள்ளது. அதனடிப்படையில், இலங்கை மகாவலி அதிகார சபைக்கு உரித்தான, மகாவலி பொருளாதார வலயத்தில் அமைந்துள்ள கமத்தொழிலுக்கு பயன்பாடற்ற இடம், நீர்த்தேக்கம் மற்றும் கால்வாய்களை இனங்கண்டு, அவற்றில் மிதக்கும் சூரிய சக்தி உற்பத்தி பிரிவொன்றும் உள்ளடங்களாக மிகவும் சூழலுடன் ஒத்து செல்லும் புதுப்பிக்கத்தகு வளங்களின் மூலம் இயங்குகின்ற மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்காக கொள்கை அடிப்படையில் அங்கீகாரத்தை வழங்குவதற்கும், அதற்காக தகுந்த செயன்முறையொன்றை முன்மொழிவதற்காக அதிகாரிகளை கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. அங்கவீனமுற்ற நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டவரைபு (விடய இல. 14)
இலங்கை வாழ் அங்கவீனமுற்ற நபர்களின் உரிமைகள் மற்றும் எதிர்காலப் பாதுகாப்பு மிகவும் உறுதிப்படுத்தக் கூடியவாறு தொகுக்கப்பட்ட 1996ம் ஆண்டின் 28ம் இலக்க அங்கவீனமுற்ற நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் இது வரையில் அங்கவீனமுற்ற சமுதாயத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்ட வரைபொன்றாக அமுல்படுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08ஆந் திகதி இலங்கை அங்கவீனமுறற்ற நபர்களின் உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையை அங்கீகரித்தது. இவ்வங்கீகாரத்தோடு அதன் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்ட 30 உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மேற் கூறப்பட்ட சட்டத்தில் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சபைக்கு பதிலாக மிகவும் சுயாதீனமான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதன் மூலம் அங்கவீனமுற்ற நபர்களுக்காக மிகவும் பரந்த அளவிலான சேவையொன்றை வழங்குவதை நோக்காக கொண்டு 1996ம் ஆண்டின் 28ம் இலக்க அங்கவீனமுற்ற நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பில் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சர் கௌரவ எஸ்.பி. திசாநாக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. ஒளடதங்களை தேசிய ரீதியில் உற்பத்தி செய்யும் செயன்முறையினை விரிவுபடுத்துவதற்கு அரச – தனியார் துறையினரை ஒன்றிணைத்து வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்தல் (விடய இல. 16)
ஒளடதங்களை தேசிய ரீதியில் உற்பத்தி செய்யும் செயன்முறையினை விரிவுபடுத்துவதற்கு அரச – தனியார் துறையினரை ஒன்றிணைத்து வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் சிபார்களின் அடிப்படையில், குறித்த ஒளடதங்களை குறைந்த செலவின் கீழ் உற்பத்தி செய்வதற்கு அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ஒளடதங்களை உற்பத்தி செய்யும் ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. சமுத்திர மீன்கள்/ சிப்பி இனங்களுக்கான இனப்பெருக்க ஆய்வு நிலையம் ஒன்றை நிறுவுதல் (விடய இல. 23)
சுpறந்த குணப் பண்புகள் கொண்ட மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்ட கடலட்டை, நண்டு, இருதோடுகள் கொண்ட சிப்பி இனங்கள், சமுத்திர மீன்கள் மற்றும் ஏனைய தோடுடைய மீன் இனங்களை இனப்பெருக்கம் செய்வதற்கு ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த இனப்பெருக்க ஆய்வு நிலையம் ஒன்றை அமைக்க கற்பிட்டி, கந்தகுழிய பிரதேசத்தில் அமைந்துள்ள 05 ஏக்கர் நிலப்பரப்பை தேசிய நீரியல் வளங்கள் மற்றும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்துக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. நீண்ட கால தேசிய கடற்றொழில் கொள்கை மற்றும் நடவடிக்கை திட்டம் ஒன்றை தயாரித்தல் (விடய இல.24)
இலங்கையில் அனைத்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் துறையை ஒன்றிணைக்கம் வகையில் நீண்ட கால தேசிய கடற்றொழில் கொள்கை மற்றும் நடைமுறைத் திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கும், இலங்கை கடற்றொழில் அதிகாரிகளின் தகைமைகளை விருத்தி செய்வதற்காக வெளிநாட்டு பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கும், இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் துறைக்கு நோர்வே அரசாங்கத்தின் முதலீட்டை பெற்றுக் கொள்வதை விருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு மூன்று வருட வேலைத்திட்டமொன்றை நோர்வே அரசின் தொழில்நுட்ப உதவியின் கீழ் செயற்படுத்துவது தொடர்பிலும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. மத்திய கடுகதிப்பாதை கருத்திட்டம் - மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான (39.29 கி.மி) பிரிவு இரண்டின் நிர்மாண மேற்பார்வைக்கான ஆலோசனை சேவைகளை வழங்குதல் (விடய இல. 31)
மத்திய கடுகதிப்பாதை கருத்திட்டம் - மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான (39.29 கி.மி) பிரிவு இரண்டின் நிர்மாண மேற்பார்வைக்கான ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனையாளர் பெறுகைக் குழுவின் சிபார்சின் அடிப்படையில் ஒப்படைப்பதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் கௌரவ லக்ஷமன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்காக நீண்ட கால ஒப்பந்தங்கள் 03 இனை வழங்கல் (விடய இல. 36)
சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால ஒப்பந்தங்களின் கால எல்லை இதுவரையில் முடிவுக்கு வந்துள்ளதுடன், நீண்ட கால விலை மனுக்கோரலின் அடிப்படையில் அனைத்து பெற்றோலிய உற்பத்திகளையும் கொள்வனவு செய்வதை நோக்காகக் கொண்டு, நீண்ட கால ஒப்பந்தங்கள் மூன்றிற்காக இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தின் மூலம் பதிவுசெய்யப்பட்ட வழங்குனர்களிடத்தில் இருந்து வௌவேறாக விலைமனுக்கள் கோரப்பட்டன. அதனடிப்படையில் அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்ட விசேட கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் 2016.12.01ம் திகதி முதல் 2017.07.31ம் திகதி வரையான காலப்பகுதிக்காக அதன் நீண்ட கால ஒப்பந்தம் மூன்றினையும் வழங்குவது தொடர்பில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்த அமைச்சர் கௌரவ சந்திம வீரக்கொடி அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. ஜனாதிபதி அவர்களின் பதிவிப்பிரமாண இரண்டாம் வருட பூர்த்தி கொண்டாட்டம் (விடய இல. 38)
2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 08ம் திகதியன்று அனுஷடிக்கப்படும் தமது இரண்டாவது வருட பூர்த்தியை கொண்டாடும் உற்சவத்தை தேவையற்ற உற்சவங்கள் மற்றும் களியாட்டங்கள் இன்றி கொண்டாடுவதற்கும், 2017ம் ஆண்டு வரவு செலவு திட்ட யோசனைகளின் கீழ் துரித கதியில் செயற்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்களை முடியுமான அளவு துரித கதியில் ஆரம்பித்தல் மற்றும் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதையும் இதற்கு சமாந்தரமாக செயற்படுத்துமாறும் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவுறுத்தப்பட்டது.