புலமைச்சொத்து கொள்ளையை நிறுத்துவதற்காக தற்போதுள்ள சட்டவிதிகளை உரியவாறு அமுல்படுத்துவதற்கும்
அந்த சட்டவிதிகளில் குறைபாடுகள் இருப்பின் புதிய சட்டங்களை வகுத்து இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலைஞர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கினார்.
காப்புரிமை இலாப பங்கை செலுத்துதல் மற்றும் வெளியீட்டு உரிமையை பாதுகாத்தலுக்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் கவனம்செலுத்தப்பட்டது.
புலமைச்சொத்து தொடர்பில் இப்போது அனைத்து அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. நாமும் அது தொடர்பில் விரைவாக கவனம் செலுத்த வேண்டும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.
புலமைச்சொத்து உரிமை மற்றும் காப்புரிமை கொடுப்பனவு தொடர்பில் தொடர்புடைய தரப்பினரை தெளிவுபடுத்துவதற்காக புதிய செயற்திட்டத்தை அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி ஊடகத்துறை அமைச்சுக்கு ஆலோசனை வழங்கினார்.
பண்புள்ள ஊடகவியல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் போலியான படைப்புகள் மூலம் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்துக்களும் யோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய, அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய இலங்கை புலமைச்சொத்து அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் கீதாஞ்சலி ரணவக்க ஆகியோருடன் கலைஞர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
pmd