விளையாட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் பராமரிப்புக்கென சுமார் 8 லட்சம் பெறுமதியான புல் வெட்டும் வாகன இயந்திரம், கை வெட்டு இயந்திரம், மரம் வெட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட 5 இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டஅராசங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமாரிடம் இவ் இயந்திரங்கள் இன்று (04) வழங்கப்பட்டன.
விளையாட்டு மைதானத்தினை அபிவிருத்தி செய்தல், பராமரித்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக கடந்த வருடத்தில் வழங்கப்பட்ட நிதியின் மீதப்படுத்தப்பட்ட தொகையிலிருந்தே இந்த இயந்திரங்கள் கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு வெபர் மைதானமானது கடந்த வருடத்தில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும் மேலதிகமான பராமரிப்பு வேலைகளுக்குரிய நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்த இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மாவட்டத்தின் விளையாட்டு அபிவிருத்தியினையும் இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தின் மேம்பாடும் கருதி அரசாங்க அதிபரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய விளையாட்டு அமைச்சினால் இதற்கான நிதிகள் ஒதுக்கியுள்ளது.
2016ஆம் ஆண்டு விளையாட்டு அமைச்சினால் 9 விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்கான 12.9 மில்லியனும், விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தினால் 5 வேலைத்திட்டங்களுக்காக 25.7 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மாவட்ட விளையாட்டுப்பிரிவின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.