கண்டி- தொடம்வல - ஹல்தொலுவ பாலம் எதிர்வரும் 6ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
நீண்ட காலம் நிர்மாணிக்கப்படாதிருந்த குறித்த பாலமானது அமைச்சர் லஷ்மன் கிரியெல்லவின் ஆலோசனையின் பேரில் கடந்த ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு புத்தாண்டில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் இரும்பு பாலம் திட்ட நிதியின் (UK Steel Bridge) கீழ் செயற்படுத்தப்படும் பிரதேச பாலத் திட்டத்தினூடாக 105 மீற்றர் நீளத்திற்கு இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் 374 மில்லியன் ரூபா நிதிச் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பாலத்தினூடாக மகாவெலி ஆற்றைக் கடந்து மிக விரைவாக கண்டி நகருக்கு விஜயம் செய்ய முடியும். அத்துடன் நீண்டகாலமாக நிலவிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் இப்பாலம் உதவியாக இருக்கும்.
குருணாகலையில் இருந்து கண்டிக்கு செல்வோருக்கும் கண்டியில் இருந்து குருணாகலைக்கு செல்வோருக்கும் போக்குவரத்தை இலகுவாக்குவதுடன் கண்டிக்கு செல்லாமல் வேறிடங்களுக்கு செல்வோருக்கும் இப்பால நிர்மாணிப்பு வசதியுடையதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.