சிறுநீரக நோய் தடுப்பு சமூக நற்பணி விழா இன்று (30) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு மகாவெலி மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
அகில இலங்கை சிறுநீரக நோய் தடுப்புச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நற்பணி விழாவில் சிறுநீரக நோயாளர்களுக்கான விசேட இணையதம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அகில இலங்கை சிறுநீரக தடுப்புச் சங்கம் சிறுநீரக நோயாளர்களுக்கான பல்வேறு விசேட சேவைகளை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் சிறுநீரக நோயாளர்களுக்கு பல்வேறு பயனுள்ள தகவல்களை வழங்கும் வகையில் இவ்விணையதளம் ஆரம்பிக்கப்படுகிறது.
மேலும், நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் குடும்பங்களுக்கான வங்கி முறைமை அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளதுடன் நோயாளிகளின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளன.
அகில இலங்கை சிறுநீரக நோய் தடுப்புச்சங்கம் ஸ்தாபிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மேற்கூறப்பட்ட புதிய சேவைகளை சிறுநீரக நோயாளர்கள் மற்றும் அவர்களின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சஞ்சய ஹெய்யந்துடவ தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் தமது சங்கம் நிறைவேற்றியுள்ள சேவைகளுக்கு பொது மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது என சுட்டிக்காட்டிய அவர், இச்சங்கத்தினூடாக சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி மாற்றுச் சிகிச்சை இலவசமாக மேற்கொள்ள உதவி வழங்குவதாகவும், சிறுநீரக நோயாளர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சிறுநீரக நோயாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் பராமரிப்பாளர்கள் சிறுநீரக நோய் மற்றும் அது தொடர்பான விடயங்களை அறிந்துக்கொள்ளும் வகையில் இதுவரையில் 10 புத்தகங்கள் வெளியடப்பட்டுள்ளதாகவும் இன்றைய நிகழ்வில் 11ஆவது புத்தகம் வெளியிடப்படவுள்ளது என்றும் டொக்டர் சஞ்ஜய ஹெய்யந்துடுவ தெரிவித்தார்.