01. சமூர்த்தி மானியங்களை வெட்டிவிடுவதாக வெளியாகியுள்ள பிழையான செய்தி அறிக்கைகள்
சில சமூர்த்தி மானியங்கள் பெறுபவர்களின் சமூர்த்தி மானியக் கொடுப்பனவு வெட்டிவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள பிழையான ஊடக செய்தி அறிக்கை காரணமாக, அது தொடர்பில் பிழையான எண்ணப்பாடுகள் மக்கள் மத்தியில் பரவி வருகின்றது. எவ்வித சமூர்த்தி மானியங்கள் பெறுபவர்களின் கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கோ அல்லது வெட்டி விடுவதற்கோ அரசாங்கத்தினால் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்பட வில்லை என்பதுடன், அது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் கடந்த தினமொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை கவனத்திற் கொள்ளப்பட்டது.
02. நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களுக்காக வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்குதல் (விடய இல. 09)
நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களுக்கு தேவையான வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்குவதற்காக நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற் கொண்டு 2018 மற்றும் 2019 ஆகிய வருடங்களில் அதற்கான நிதியினை ஒதுக்கிக் கொள்வதற்கும், அதன் முதற் கட்டமாக 2018ம் ஆண்டில் 500 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கிக் கொடுப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. மோட்டார் வாகன சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 10)
நாட்டில் அதிகரித்து வருகின்ற வீதி விபத்துக்களை கவனத்திற் கொண்டு, அதற்கு உகந்த தீர்வுகளாக Driver’s demerit points system இனை பிரயோக ரீதியாக செயற்படுத்துவதற்கான அதிகாரத்தை நீதிபதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒப்படைப்பத்தல், ஆபத்தான இரசாயன பதார்த்தங்களை போக்குவரத்து செய்கின்ற வாகனங்கள், அவசர சேவை வாகனங்கள் மற்றும் பொது சேவை வாகனங்களை செலுத்துகின்ற சாரதிகளுக்கான விசேட தகைமைகளை வெளியிடல், வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடுகள், வாகன தண்டப்பணங்களை செலுத்துவதற்கு இலத்திரனியல் தொழில்நுட்ப முறையினை அறிமுகப்படுத்தல், அங்கவீனர்களால் பயன்படுத்தப்படுகின்ற விசேட வகை வாகனங்களை பதிவு செய்வதற்காக புதிய வாகன பிரிவை அறிமுகப்படுத்தல், மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்படாத குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் போன்ற மோட்டார் வாகன சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக வேண்டி குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. சொகுசு, அறை சொகுசு மற்றும் இரட்டை அறை சொகுசு வாகனங்களுக்காக செலுத்த வேண்டிய மிகுதி வரிப்பணத்தை அறவிடல் (விடய இல. 12)
சொகுசு, அறை சொகுசு மற்றும் இரட்டை அறை சொகுசு வாகனங்கள் முதலில் பதிவு செய்த தினத்தில் இருந்து 07 வருடங்கள் வரை தொடர்ந்து வரிப்பணம் செலுத்த வேண்டும். அதன் முதலாவது வரிப்பண தவணையினை குறித்த வாகனம் பதிவு செய்யப்படும் போது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் அறிவிடப்படுவதுடன், மிகுதி தொகையினை அத்திணைக்களத்திற்கோ அல்லது காப்புறுதி நிறுவனத்திற்கோ செலுத்த முடியும். அவ்வாறு வரிப்பணத்தை செலுத்தாது விடுகின்ற சந்தர்ப்பங்களில் மிகுதி வரிப்பணத்துக்காக 50ம% தண்டப்பணம் அறிவிடப்படும். இது வரைக்கும் அவ்வாறு சேர்க்கப்பட்டுள்ள மொத்த மிகுதி வரிப்பணத் தொகையானது 350 மில்லியன் ரூபாய்களாகும். அவ்வாறு வரி பணத்தை செலுத்துவதற்கு காலதாமதம் ஏற்படுவதற்கு வாகன உரிமையாளர்களின் நிர்வாகத்துக்கு புறம்பான காரணங்களும் ஏதுவாய் அமைகின்றன என்பதை கவனத்திற் கொண்டு, சொகுசு, அறை சொகுசு மற்றும் இரட்டை அறை சொகுசு வாகனங்களுக்காக செலுத்தப்பட வேண்டிய மிகுதி வரிப்பணத்தினை செலுத்துவதற்காக 2017ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01ம் திகதி முதல் 2017 நவம்பர் மாதம் 30 வரையான 03 மாத கால அவகாசம் வழங்குவதற்கும், அச்சலுகை காலத்தினுள் மிகுதி வரிப்பணத்தை செலுத்துகின்ற வாகன உரிமையாளர்களுக்கு உரிய தண்டப்பணத்தில் 5ம% இனை மாத்திரம் அறவிடுவதற்கும போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. 1998ம் ஆண்டு 53ம் இலக்க இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 16)
இலங்கையில் நீர் உயிரின வளர்ப்பு விருத்தி மற்றும் நிர்ணயம் செய்தல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு 1998ம் ஆண்டு 53ம் இலக்க சட்டத்தின் கீழ் இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை தாபிக்கப்பட்டது. இவ்வதிகாரசபையின் வேலைத்திட்டங்களை மேலும் பயனுள்ளதாக மாற்றி தற்காலத்துக்கு பொருத்தமான முறையில் தேவையான அதிகாரங்களை இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கும் வகையில் 1998ம் ஆண்டு 53ம் இலக்க இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தினை திருத்தம் செய்வதற்கும், அது தொடர்பான தகவல்களை ஆராய்ந்து யோசனைகள் மற்றும் சிபார்சுகளை முன்வைப்பதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கும் மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. 1958ம் ஆண்டு 02ம் இலக்க தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந் தோட்டங்கள் (திட்டக் கட்டுப்பாடு) சட்டத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 22)
பல்வேறு பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்காக தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந் தோட்டங்களை பயன்படுத்தும் போது நம்பகத்தன்மை காணப்படுவது காலத்தின் தேவையாகும். அதனடிப்டையில், வணிக நடவடிக்கைகளுக்காக, தென்னை தோட்டங்களை பிரித்தல் அல்லது ஒரு தனியான பிரிவாக வழங்குவதற்கான வரையறையினை 05 ஏக்கர்களாகவும் (02 ஹெக்டேயார்), தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களை பிரித்தல் அல்லது ஒரு தனியான பிரிவாக வழங்குவதற்கான வரையறையினை 20 ஏக்கர்களாகவும் (08 ஹெக்டேயார்) குறைப்பது தொடர்பான விதப்புறைகளை உள்ளடக்கி 1958ம் ஆண்டு 02ம் இலக்க தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந் தோட்டங்கள் (திட்டக் கட்டுப்பாடு) சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றால் பாதிப்புக்கு உள்ளான சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு சலுகை வழங்கல் (விடய இல. 23)
2017ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றால் காலி, இரத்தினபுரி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு மற்றும் கேகாளை ஆகிய மாவட்டங்களில் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் 457.37 ஹெக்டேயார் பயிர் செய்கை நிலங்கள் ழுமுமையாகவும், 1,823.10 ஹெக்டேயார் பயிர் செய்கை நிலங்கள் பகுதி அளவிலும் பாதிப்படைந்துள்ளது. அவ்வாறு பாதிப்படைந்துள்ள தேயிலை பயிர் செய்கையினை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான கன்றுகள் மற்றம் உரங்களை பெற்றுக் கொடுப்பதற்கும், பாதிப்புக்குள்ளான சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்துவதற்கு நிதி வசதியளிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. நடுத்தர வருமானம் கொண்டவர்களின் வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக வேண்டி துரித வேலைத்திட்டம் (விடய இல. 28)
நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கு வீடு வசதிகளை வழங்கும் நோக்கில், அதிவேக வீதி, பெருந்தெருக்கள் மற்றும் புகையிரத வீதிகளை மையமாகக் கொண்டு நகர மற்றும் அறை நகர பிரதேசங்களில் வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் துரித வேலைத்திட்டங்கள், தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான வேலைத்திட்டங்கள் நான்கு தற்போது வாத்துவ, ஹோமாகம, ஜல்தரை மற்றம் ராகம ஆகிய நகரங்களுக்கு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பல வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், முன்மொழியப்பட்டுள்ள அடுத்த வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்காக வேண்டி கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், மாத்தளை, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள அரசாங்கத்துக்கு உரித்தான காணிப்பகுதிகள் சிலவற்றை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. உயர் தூண்களின் மீது நிர்மாணிக்கப்படுகின்ற (Elevated Highway) துறைமுக பிரவேச பெருந்தெருக்கள் வேலைத்திட்டம் - இலங்கை துறைமுக அதிகார சபைக்காக 17 மாடிகளைக் கொண்ட புதிய அலுவலக கட்டிடம் மற்றும் 04 களஞ்சியசாலைகளை நிர்மாணித்தல் (விடய இல. 40)
முன்மொழியப்பட்டுள்ள துறைமுக பிரவேச பெருந்தெருக்கள் வேலைத்திட்டத்தினை 2018, பெப்ரவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன், இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு உரித்தான கட்டிடங்கள் மற்றும் வசதிகள் அமைந்துள்ள பிரிவினூடாக அப்பிரவேச வீதிகளை நிர்மாணிப்பு நடவடிக்கைகளை 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தினால் வெளியேற்றப்படவுள்ள இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உரித்தான கட்டிடங்களுக்கு பதிலாக 17 மாடிகளைக் கொண்ட புதிய அலுவலக கட்டிடம் மற்றும் 04 களஞ்சியசாலைகளை அமைப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அந்நிர்மாண பணிகளை காலம் தாழ்த்தாது ஆரம்பிக்கும் நோக்கில் அதற்குரிய ஆலோசனை சேவையினை வழங்குவதற்காக யோசனைகளை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திடமிருந்து பெற்றுக் கொடுப்பதற்கும், அவ்யோசனைகளை மதிப்பிட்டு உரிய ஒப்பந்தத்தை வழங்குவதற்கும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷமன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. பெருந்தோட்ட துறையில் அபிவிருத்திக்காக 2018ம் ஆண்டிலிருந்து செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டங்கள் (விடய இல. 45)
பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சின் மேற்பார்வையின் கீழ் காணப்படுகின்ற இறப்பர் ஆராய்ச்சி நிலையம், தேங்காய் பயிர்செய்கை சபை, தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனம் போன்றவற்றால் பெருந்தோட்ட துறையின் மேம்பாட்டுக்காக 2018ம் ஆண்டிலிருந்து செயற்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள 10 வேலைத்திட்டங்களுக்காக திறைசேரியில் இருந்து 730 மில்லியன் ரூபா நிதியினை பெற்றுக் கொள்வது தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் கௌரவ நவின் திசாநாயக்க அவர்களினால் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவினால் அகற்றப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்காக 50,000 ரூபா வீட்டு வாடகை கொடுப்பனவுகளை வழங்குதல் (விடய இல. 53)
2017-04-14ம் திகதி கொலன்னாவ, மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேட்டு சரிவினால் வீடுகளை இழந்த மற்றும் வசிக்கின்ற வீடுகள் அதியுயர் அவதானத்துக்கு உட்பட்ட குடும்பங்கள் அவ்வீடுகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 91 குடும்பங்களுக்காக இதுவரை மாற்று வீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் 60 குடும்பங்கள் மாற்று வீடுகளை பெற்றுக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதுடன், அக்குடும்பங்கள் 60யும் உட்படுத்தி, இவ்வனர்த்தத்தினால் மேலும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற 141 குடும்பங்களுக்காக 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்காக வேண்டியும் 50,000 ரூபா வீட்டு வாடகை கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.