01. பாராளுமன்ற பாதீட்டு அலுவலகம் (நிகழ்ச்சி நிரலின் விடய இல. 07)
பாராளுமன்ற கௌரவ உறுப்பினர்களுக்கு வரவு செலவு திட்ட செயன்முறை, பொருளாதார கொள்கைகள் மற்றும் நிதியியல் முறைமைகள் தொடர்பில் சுயாதீன மற்றும் பக்கச்சார்பற்ற அறிக்கையொன்றை பெற்றுக் கொடுத்தல் உட்பட மேலும் பல சேவைகளை மற்றும் வசதிகளை வழங்குவதை பிரதான நோக்கமாகக் கொண்டு 'பாராளுமன்ற பாதீட்டு அலுவலகம்' ஒன்றை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டமாதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. கட்டிடங்களுக்கு மேல் பொருத்தப்படுகின்ற சூரிய வளங்களின் மூலம் சூரிய சக்தி உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்காக நிதி திரட்டல் (விடய இல. 09)
சூரிய சக்தியினால் உற்பத்தி செய்யப்படுகின்ற வலுச்சக்தியினை 2025ம் ஆண்டளவில் 1000 மெகாவொட்டாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இவ்விலக்கை அடைந்து கொள்ளும் நோக்கில், 'சூர்ய பல சங்கிராம' வேலைத்திட்டத்தின் கீழ் கூறைகளில் பொருத்தப்படுகின்ற சூரிய வலுச்சக்தி உற்பத்தி பிரிவிற்காக சலுகை கடன் வழங்கப்படுகின்றது. அவ்வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் அது தொடர்பிலான மேலும் பல விடயங்களை மேற்கொள்வதற்கு சலுகை கடன் உதவியினை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதுடன், அதற்காக கலந்துரையாடல் இணக்கத்தை மேற்கொள்வதற்கும், உரிய கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் விமான நிலைய ஹோட்டல் ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 13)
பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிர்வனத்துக்கு உரித்தான காணிகள் இரண்டில் குறைந்த பட்சம் 100 அறைகளைக் கொண்ட நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டை அமைப்பதற்கு இரு முதலீட்டாளர்களுக்கு காணிகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. எனினும் அதில் ஒரு முதலீட்டாளர் தம்மால் அவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க முடியாது என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். அதனடிப்படையில் குறித்த காணியில் விமான நிலைய ஹோட்டல் ஒன்றினை நிர்மாணித்து, முன்னெடுத்துச் செல்வதற்கு பொருத்தமான வேறு முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கு விலை மனுக்கோருவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 14)
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை அதிகரிப்பது தொடர்பில் பரீசிலிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் மூலம் முன்வைக்கப்பட்ட கீழ்க்காணும் சிபார்சுகளை செயற்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கீழ்க்காணும் போக்குவரத்து தவறுகளுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை 25,000 ரூபாவாக அதிகரித்தல்:
• அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் இன்றி வாகனம் செலுத்துதல்.
• போக்குவரத்து அனுமதிப்பத்திரம் அற்ற சாரதி ஒருவரை சேவைக்கு அமர்த்துதல்.
• மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்ததன் பின்னர் வாகனம் செலுத்துதல்.
• புகையிரத வீதியினுள் முறையற்ற விதத்தில் மோட்டார் வண்டிகளை செலுத்துதல்.
• அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி இன்றி வாகனம் செலுத்துதல்
கீழ்க்காணும் போக்குவரத்து தவறுகளுக்காக தற்போது அறவிடப்படுகின்ற குறைந்த பட்ச தண்டப்பணத்தில் திருத்தம் செய்தல்.
• அதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல்.
- குறிக்கப்பட்ட வேகத்தை விட 20% வரையான அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 3,000 ரூபாவும்,
- குறிக்கப்பட்ட வேகத்தை விட 20%க்கும் அதிகமான மற்றும் 30மூ குறைவான வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 5,000 ரூபாவும்,
- குறிக்கப்பட்ட வேகத்தை விட 30%க்கும் அதிகமான மற்றும் 50மூ குறைவான வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 10,000 ரூபாவும்,
- குறிக்கப்பட்ட வேகத்தை விட 50%க்கும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 10,000 ரூபாவும்,
எனும் அடிப்படையில் உரிய இடத்தில் தண்டப்பணம் அறவிடல்.
• இடது பக்கத்தால் முன்னோக்கி செல்லுதல். (இக்குற்றத்துக்காக வேண்டி குறைந்த பட்ச உரிய இடத்துக்கான தண்டப்பணத்தினை 2,000 ரூபா வரை அதிகரித்தல்)
• பிறிதொரு நபரை நோக்கி கவனயீனமாக அல்லது எவ்வித காரணமுமின்றி வாகனம் செலுத்துதல். (இக்குற்றத்துக்காக 10,000 ரூபா குறைந்தபட்ச தண்டப்பணத்தை விதித்தல்)
• பாதுகாப்பற்ற முறையில் அல்லது விபத்தொன்றை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் வாகனங்களை செலுத்துதல். (இக்குற்றத்துக்காக 10,000 ரூபா குறைந்தபட்ச தண்டப்பணத்தை விதித்தல்)
• குறித்த வயதுக்கு குறைந்த வயது பொருந்திய ஒருவரினால் வாகனம் செலுத்துதல். (இக்குற்றத்துக்காக தற்போது காணப்படுகின்ற குறைந்த பட்ச தண்டப்பணத்தினை 5,000 ரூபாவிலிருந்து 30,000 வரை அதிகரித்தல்)
• மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்படாத குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை 2,500 ரூபா வரை அதிகரித்தல்.
கையடக்கத் தொலைப்பேசியினை பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை செலுத்துவது தொடர்பில் 2,000 ரூபா உரிய இட தண்டப்பணத்தை அறவிடல்.
சாரதி புள்ளியிடும் செயன்முறையினை துரிதப்படுத்தல்.
வாகன விபத்துக்கள் அதிகம் இடம்பெறும் இடங்களில் பொருத்தப்பட்டுள்ள ஊஊவுஏ கெமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.
போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற உரிய இடத்துக்கான தண்டப்பணத்தை அறவிடுவதற்காக இலத்திரனியல் செலுத்துகை முறையினை பயன்படுத்துவது தொடர்பான யோசனையினை துரிதமாக செயற்படுத்தல்.
அதிவேக வீதிகளில் மற்றும் பெருந்தெருக்களில் பயணிக்க வேண்டிய உயரிய வேகம் தொடர்பில் தெளிவாக பிரசுரித்தல்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்து போக்குவரத்துக்குரிய ஒன்றிணைந்த நேரசூசியினை அல்லது பொருத்தமான வேலைத்திட்டமொன்றை துரித கதியில் செயற்படுத்தல்.
முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் தொடர்பான நிர்ணயங்களை மேற்கொள்வதற்கு நிர்வனம் ஒன்றை ஸ்தாபித்தல்.
புயணிகள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் செயற்றிறன் மிக்க பொது போக்குவரத்து சேவையினை ஸ்தாபித்தல்.
போக்குவரத்து சட்டத்தினை செயற்படுத்துகின்ற சில அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கென மற்றும் சட்டத்தினை செயற்படுத்துவதனை உறுதி செய்வதற்காக நவீன தொழில்நுட்ப முறையொன்றை பாவித்தல்.
05. மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகளை அரச – தனியார் இணை வியாபார மாதிரியின் கீழ் செயற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துதல் (விடய இல. 15)
தற்காலத்தில் நட்டத்துடன் முன்னெடுக்கப்படுகின்ற மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில், 2016ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை 112.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்தும் இதனை முன்னெடுத்துச் செல்வது அரசாங்கத்துக்கு பாரிய தலையிடியாக மாறியுள்ளது. இதனை கருத்திற் கொண்டு, இதனை அரச – தனியார் இணை வியாபார மாதிரியின் கீழ் உயர் இலாபம் ஈட்டும் விமான நிலையமாக மாற்றும் நோக்கில் அவ்விமான நிலையத்தின் விமான சேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட வியாபாரங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக வேண்டிய முதலீட்டாளர்களிடத்தில் இருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டன. எனினும், விமான நிலையத்தின் முழு செயற்பாடுகள், முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளும் உள்ளடங்கும் எவ்வித யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த விடயங்களையும் கவனத்திற் கொண்டு இணை வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு இந்தியா அரசாங்கத்தினால் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இம்முன்மொழிவு தொடர்பில் மேலும் ஆராய்வதற்காக சிரேஷ;ட, அமைச்சின் செயலாளர்கள் சிலர் அடங்கிய குழுவொன்றினை நியமிப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. மலைநாட்டு உரிமைகளை பாதுகாத்தல் (விடய இல. 18)
மலைநாட்டு உரிமைகளினை பாதுகாக்க வேண்டிய தேவை உணரப்பட்டுள்ள நிலையில், மலைநாட்டு சம்பிரதாய கிராமங்களை அபிவிருத்தி செய்தல், பழைய வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் கலைகளை விருத்தி செய்தல், கிராமிய குளங்கள் மற்றும் நீர்ப்பாசன திட்டங்களை மறுசீரமைப்பு செய்தல், நூதனசாலை மற்றும் கலாச்சார மத்திய நிலையங்களை நிர்மாணித்தல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அந்நடவடிக்கைகளை கொண்டு நடாத்துவதற்காக வேண்டி 'மலைநாட்டு உரிமைகளை பாதுகாக்கும் அதிகாரசபை' எனும் அரசியலமைப்பு சபையொன்றை பாராளுமன்ற சட்டத்தின் கீழ் ஸ்தாபிப்பது தொடர்பில் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் கௌரவ எஸ்.பி. திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து வாழும் குடும்பங்கள் மீள்குடியமர்த்தும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்கள் மற்றும் அக்குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் போது பயன்படுத்தப்பட வேண்டிய வீட்டுத் திட்டம் (விடய இல. 20)
2017ம் ஆண்டு மே மாதம் நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் போது உரிய நிர்வனங்கள் மூலம் பின்பற்றப்பட வேண்டிய 'வழிகாட்டல்கள்' மற்றும் அக்குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் போது பயன்படுத்தப்பட வேண்டிய 'வீட்டுத் திட்டம்'; என்பவை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து வாழும் குடும்பங்கள் மீள்குடியமர்த்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. இலங்கை கோள் மண்டலத்தினை நவீனமயப்படுத்தல் (விடய இல. 22)
1965ம் ஆண்டிற்கு முன்னர் காணப்பட்ட கொங்கீரிட் தொழில்நுட்பத்தினை மையமாக வைத்து நிர்மாணிக்கப்பட்ட இலங்கை கோள்மண்டலமானது இதுவரை எவ்வித நவீனமயப்படுத்தல்களுக்கும் உட்படுத்தப்படவில்லை. அதனடிப்படையில், இனங்காணப்பட்டுள்ள புனரமைப்பு நடவடிக்கைகளை துரித கதியில் செயற்படுத்துவது தொடர்பில் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. சுகாதார பிரிவில் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் (விடய இல. 23)
அரசாங்கத்தினால் சுகாதார துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளினால் இன்று இலங்கையின் சுகாதார துறையானது குறிப்பிடத்தக்களவு அடைவினை அடைந்து இருக்கின்றது. அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் சமமான மட்டத்தில் இலங்கையின் சுகாதார சேவை முன்னெடுக்கப்படுவதுடன், சுகாதார சேவையினை இலவசமாக தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும், அதன் மூலம் நாட்டு பிரஜைகளை ஆரோக்கியமானவர்களாக மாற்றுவதற்கு இந்நாட்டு சுகாதார சேவையினை மேலும் விருத்தி செய்ய வேண்டியுள்ளது. இதனடிப்படையில் சுகாதார துறையினை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ள 28,000 மில்லியன் ரூபா மதிப்பீட்டு பெறுமதியான வேலைத்திட்டங்களை 2018ம் ஆண்டில் ஆரம்பித்து முன்னெடுப்பதற்கு தேவையான நிதியினை திரட்டிக் கொள்வது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி மத்திய நிலையத்தை ஸ்தாபித்தல் (விடய இல. 25)
இலங்கை மாத்திரமல்லாமல் இவ்வுலகையே தன் வாத்தியக் கருவிகளினாலும், இசையினாலும் ஆட்டிப் படைத்த காலஞ்சென்ற கலாநிதி பண்டித் அமரதேவ அவர்களின் மரபுரிமைகளை எதிர்கால சந்ததியினரும் அடைந்துக் கொள்வதற்கு ஏதுவான வகையில் சங்கீதம் தொடர்பான அனைத்து பிரிவுகள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய 'அமரதேவ அசபுவ' எனும் கலை நிர்வனத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளது. அதனடிப்படையில், அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி மத்திய நிலையம் என பாராளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்குவதன் மூலம் 'அமரதேவ அசபுவ' இனை ஸ்தாபிப்பது தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. பாரிய நகர வேலைத்திட்ட அலுவலகத்தின் ஊடாக மேல்மாகாண வலயத்துக்கு உட்பட்ட பாரிய நகர முன்முயற்சிகளை செயற்படுத்தல் (விடய இல. 29)
மேல்மாகாண வலய மாநகர திட்டமிடும் வேலைத்திட்ட அலுவலகம் 2015 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதுடன், பாரியநகர முன்முயற்சியின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில், மேல் மாகாண வலய மாநகர அதிகார சபையினை ஸ்தாபிக்கும் வரையில் 11 வேலைத்திட்ட அலுவலகங்களை ஸ்தாபிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் மூலம் அப்பணிகள் இரண்டாக மேற்கொள்ளப்படுவதை தடுக்கும் நோக்கில், மேல் மாகாண வலய பாரியநகர திட்டமிடல் பணியினை நிறைவுக்கு கொண்டு வருவதற்கும், குறித்த வேலைத்திட்டத்தினை முறையாக கொண்டு செல்வதற்கு குறித்த வேலைத்திட்டத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்களின் ஊடாக பொருத்தமான பெயர்களை இடுவதற்கும் பாரியநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. மிளகு விலை குறைவதை முகாமைத்துவம் செய்தல் (விடய இல. 39)
சர்வதேச சந்தை மற்றும் தேசிய சந்தையில் மிளகு விலை நாளுக்கு நாள் குறைவடைவதால் பாதிப்படைகின்ற மிளகு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் வருமான வழியினை பாதுகாக்கும் நோக்கில் தொடர்பான விடயங்களை பரிசீலித்து காலம் தாழ்த்தாது அமைச்சரவைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களின் தலைமையில் மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர், கைத்தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் ஆகியோரின் பிரதிநிதித்துவத்துடன் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
13. ஓசோன் நட்பு தேயிலை இலட்சிணையினை இலங்கை கிரிக்கட் அணியின் ஆடையில் சேர்த்தல் (விடய இல. 44)
ஓசோன் படைக்கு தாக்கம் செலுத்துகின்ற ஒரு வகை இரசாயன பதார்த்தத்தை இந்நாட்டு தேயிலையில் சேர்ப்பதனை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த நடவடிக்கைகளுக்கு சர்வதேசத்தின் பாராட்டுதல்களும் கிடைத்தன. குறித்த வெற்றியினை நினைவுபடுத்தும் வகையில் இலங்கை தேயிலை சபையின் மூலம் ஓசோன் நட்பு தேயிலை இலட்சிணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தேயிலையினை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கிரிக்கட் அணியினரின் உத்தியோகபூர்வ ஆடையில் அவ்விலட்சிணையினை உட்படுத்துவது தொடர்பில் உரிய நிர்வனத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. வழக்கு தீர்ப்பு அல்லது இறுதி தீர்ப்பின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்றை வழக்கின் ஒவ்வொரு பிரிவினருக்கும் கட்டணமின்றி வழங்குதல் (விடய இல. 47)
வழக்கு தீர்ப்பு அல்லது இறுதி தீர்ப்பின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்றை வழக்கின் ஒவ்வொரு பிரிவினருக்கும் காசுக்கு வழங்குவது தொடர்பான விதப்புரைகள் சிவில் வழக்கு கட்டளைகள் கோவை மற்றும் குற்றவியல் வழக்கு கட்டளைகள் கோவை என்பவற்றில் காணப்படுகின்றது. எனினும் பணம் இன்றி வழக்குகளுக்கு வரும் வழக்கின் பிரிவினருக்கு குறித்த ஆவணங்களின் பிரதிகளை பெற்றுக் கொள்வதற்கு முடியாத நிலை காணப்படுகின்றது. இது சாதாரணமற்ற செயலாக மாறிவருவதை அவதானித்து, வழக்கு தீர்ப்பு அல்லது இறுதி தீர்ப்பின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்றை வழக்கின் ஒவ்வொரு பிரிவினருக்கும் கட்டணமின்றி வழங்குவது தொடர்பில் சிவில் வழக்கு கட்டளைகள் கோவை சட்டம் மற்றும் குற்றவியல் வழக்கு கட்டளைகள் கோவை சட்டம் என்பவற்றில் திருத்தம் செய்வது தொடர்பில் நீதி அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வழிச்செலுத்தல் சேவை வளாகத்தினை விருத்தி செய்தல் (விடய இல. 49)
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வழிச்செலுத்தல் சேவை வளாகத்தினை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் புதிய சுவடொன்றினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 201.39 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவுக்கு வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. பம்பஹின்ன நீர்வழங்கல் செயற்றிட்டத்தினை நிர்மாணித்தல் (விடய இல. 52)
சபரகமுவ பல்கலைக்கழகம் உட்பட இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் செயற்படுத்தப்படுகின்ற பம்பஹின்ன நீர்வழங்கல் செயற்றிட்டத்தினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 1,019.47 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவுக்கு வழங்குவது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. நோய் எதிர்ப்பு சக்தி அற்ற நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற ஒளடதங்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 53)
நோய் எதிர்ப்பு சக்தி அற்ற நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற 5 – 6 கிராம் ஊசிகள் 6,500 இனை கொள்வனவு செய்வதற்கான டென்டரினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 637,000 அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. களனி பாலத்துக்கு குறுக்காக புதிய பாலம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பான ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 55)
களனி பாலத்துக்கு குறுக்காக புதிய பாலம் ஒன்றை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் களனி பாலத்துக்கு குறுக்காக 380 மீட்டர் நீளமான, 06 ஓடுபாதைகளைக் கொண்ட பாலம் மற்றும் அதன் நுழைவு மார்க்கம் என்பவற்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 9,896 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு வழங்குவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷமன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. வரையறுக்கப்பட்ட கந்தளை சீனி கைத்தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் காணப்படுகின்ற கட்டிடம் மற்றும் உபகரணங்கள், இயந்திரங்களை அகற்றுதல் (விடய இல. 56)
இற்றைக்கு 23 ஆண்டுகளாக மூடி காணப்படுகின்ற வரையறுக்கப்பட்ட கந்தளை சீனி கைத்தொழிற்சாலை பணிகளினை அரச – தனியார் இணை வேலைத்திட்டத்தின் கீழ் மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக குறித்த கைத்தொழிற்சாலை பூமியினை விடுவிப்பதற்கு முன்னர் அங்குள்ள அகற்றுவதற்கு முடியுமான அனைத்து கட்டிடங்களையும் உடைத்து அகற்றுவதற்கும், உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை விற்பனை செய்வதற்கும் கேள்வி மனு கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 540 மில்லியன் உயரிய விலையினை முன்வைத்துள்ள நிர்வனத்துக்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் குறித்த ஒப்பந்தத்தை வழங்;குவது தொடர்பில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. தற்போது நிலவுகின்ற வறட்சி நிலைமை காரணமாக வனாந்தரங்கள் தீப்பிடிப்பதை தடுத்தல் மற்றும் வனஜீவராசிகளுக்காக நீரினை வழங்குதல் (விடய இல. 61)
தற்போது நிலவுகின்ற வறட்சி நிலைமை காரணமாக வனாந்தரங்கள் தீப்பிடிப்பதை தடுப்பதற்கும் வனஜீவராசிகளுக்காக நீரினை வழங்குமாக 10 நீர்த்தாங்கிகளை வனஜீவிகள் காப்புறுதி திணைக்களத்துக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.