• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அமைச்சரவை தீர்மானங்கள் 20.06.2017

01. அவுஸ்திரேலியாவின் சலுகை கடன் திட்டத்தின் கீழ் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஆகிவற்றை விருத்தி செய்தல் (விடய இல. 07)
 
இனங்காணப்பட்ட வைத்தியசாலைகளில் காணப்படும் தேவைகளை உணர்ந்து அவற்றினை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. அதற்காக வேண்டி 9.58 மில்லியன் யூரோ நிதியினை சலுகை கடன் அடிப்படையில் வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், குறித்த கடன் தொகையினை பெற்றுக் கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் வேலைபார்க்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ நிரோஷன் பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
 
02. கட்டுநாயக்க பொறியியல் தொழில்நுட்ப நிர்வனத்தை விருத்தி செய்தல் மற்றும் உயர்த்துதல் (விடய இல. 08)
 
கட்டுநாயக்க பொறியியல் தொழில்நுட்ப நிர்வனத்தை விருத்தி செய்வதற்கான ஒப்பந்தமானது 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி கூடிய அமைச்சரவையினால் ஒப்படைக்கப்பட்டது. குறித்த வேலைத்திட்டத்துக்கு 9.5 மில்லியன் யூரோ நிதியினை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் ரெய்பேசியன் பேங்க் இன்டர்நெஷனல் நிர்வனத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும், பின்னர் கடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கும் வேலைபார்க்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ நிரோஷன் பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட குறித்த கொள்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
03. வருடாந்த பஸ் கட்டண திருத்தம் (விடய இல. 09)
 
 
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை கவனத்திற் கொண்டு 2017ம் ஆண்டு ஜுலை மாதம் 01ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்போது நடைமுறையிலிருக்கும் பஸ் கட்டணமானது 6.28 சதவீதத்தால்; அதிகரிப்பதற்கும், ஆகக் குறைந்த பஸ் கட்டமாண 09 ரூபாவினை 10 ரூபாவாக திருத்தம் செய்வதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
 
04. மா ஓயா வடி நிலத்தின் யடிமஹன நீர்த்தேக்கம் மற்றும் களனி கங்கை வடிநிலத்தின் வீ ஓயா நீர்தேக்கம் ஆகியவற்றின் நிர்மாணப்பணிகளுக்கான சாத்திய வள அறிக்கையினை மேற்கொள்ளல் (விடய இல. 16)
 
 
இன்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கீழ் காணப்படும் நீர் சுத்தகரிப்பு நிலையங்களுக்கு தேவையான சுத்திகரிக்கப்படாத நீரினை, வறண்ட காலநிலையிலும் மா ஓயா மற்றும் களனி கங்கை ஆகியவற்றில் இருந்து பெற்றுக் கொள்ளும் போது பல்வேறு கஷடங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. மேலும், பாரிய நகரம் திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்திக்காக எதிர்கால நீர் வழங்கல் திட்டங்களை செயற்படுத்தல் மற்றும் திட்டங்களை தயாரிப்பதற்காக, வெப்ப காலங்களில் மேற்கூறப்பட்ட அடிப்படை நீர் மூலதாரங்கள் இரண்டிலும் சுத்தகரிக்கப்படாத நீர் இன்மை பிரதான தடையாகும்.
 
களனி கங்கை வடிநிலம் மற்றும் மா ஓயா வடிநிலம் ஆகியவற்றில் நீர்தேக்கங்களை நிர்மாணிப்பதற்காக இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கட்டாயமாக தேவைப்படுவதுடன், அதனால் ஆரம்பத்தில் களனி கங்கையின் MCM 19 கொள்ளளவினைக் கொண்ட வீ ஓயா நீர்தேக்கமும், மா ஓயா கங்கையின் MCM 12.7 கொள்ளளவினைக் கொண்ட யடிமஹன நீர்த்தேக்கமும் முன்மொழியப்பட்டன. குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் சாத்திய வள அறிக்கையினை மேற்கொள்வதற்கும், அதற்கான ஒப்பந்தத்தை வரையறுக்கப்பட்ட Mahaweli Consultancy Bureau (pvt) Ltd க்கு ஒப்படைப்பதற்கும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
 
05. 'திவி உதான' சலுகை வட்டி கடன் வேலைத்திட்டம் - 2017 (விடய இல. 22)
 
 
2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் படி 08 வகையான சலுகை கடன் திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த திட்டமானது 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படுவதாகவும், வணிக வங்கிகளின் மூலம் அவ்வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்காக வேண்டி நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் மூலம் குறித்த வங்கிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாகவும், அக்கடன் திட்டம் தொடர்பில் இலத்திரனியல் மற்றம் அச்சு ஊடகங்களின் மூலம் பொதுமக்களை அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
 
06. சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் (IFC) மூலம் வெளிநாட்டு (offshore) இலங்கை ரூபா (LKR) திறைசேரி முறி வேலைத்திட்டத்தினை ஸ்தாபித்தல் தொடர்பான பிரேரனை (விடய இல.23)
 
 
சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் (IFC) மூலம் வெளிநாட்டு (offshore) இலங்கை ரூபா (LKR) திறைசேரி முறி வேலைத்திட்டத்தினை ஸ்தாபித்தல் தொடர்பான பிரேரனை தொடர்பில் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவில் கவனத்திற் கொள்ளப்பட்டதுடன், அதனை செயற்படுத்துவதற்காக இன்னும் சில சிபார்சுகளும் முன்வைக்கப்பட்டன. அதனடிப்படையில் இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய உரிய நிர்வனங்களின் முறையான அனுமதியினை பெற்றுக் கொண்டு இவ்யோசனையை செயற்படுத்துவது தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
 
07. திருகோணமலை மாவட்டத்தில் பல்கலைக்கல்லூரியை ஸ்தாபித்தல் (விடய இல. 24)
 
 
திருகோணமலை மாவட்ட மாணவர்களின் நன்மைக்கருதி 434 மில்லியன் ரூபா செலவில் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் பல்கலைக்கல்லூரியை ஸ்தாபிப்பது தொடர்பில் திறன்விருத்தி மற்றும் வாழ்க்கைத்தொழிற் பயிற்சி அமைச்சர் கௌரவ சந்திம வீரக்கொடி அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
 
08. மீள ஏற்றுமதிக்காக தேயிலை இறக்குமதியின் போது அறவிடப்படுகின்ற 1மூ இறக்குமதி கட்டுப்படுத்தும் கட்டணத்தை ஒழித்தல் (விடய இல. 29)
 
 
மீள ஏற்றுமதிக்காக தேயிவை இறக்குமதியின் போது அறவிடப்படுகின்ற 1மூ இறக்குமதி கட்டுப்படுத்தும் கட்டணத்தை ஒழிப்பது தொடர்பான யோசனைகள் 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகியவை இணைந்து முன்வைத்த ஒன்றிணைந்த யோசனைகளை கவனத்திற் கொண்டு 1953/28 இலக்கமுடைய 2016.02.11ம் திகதிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளில் அட்டவணை 1இல் தொடர் எண் 46 இனை அகற்றி அந்த ஒழுங்குவிதிகளில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் மீள ஏற்றுமதிக்காக தேயிலை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்படுகின்ற அனுமதிப்பத்திரத்திற்காக 1,000 ரூபா கட்டணத்தையும் அறவிட தீர்மானித்தது.
 
 
09. எச்.வீ.ஏ. பாம்ஸ் (தனியார்) கம்பனியிடம் சுற்றாடலுக்கு ஒவ்வும் சேதன பழங்கள் மற்றும் காய்கறி பயிர் செய்கைக்காக காணியினை நீண்டகால குத்தகைக்கு வழங்குதல் (விடய இல. 33)
 
 
புத்தளம் மாவட்டத்திலுள்ள வனாத்தவில்லுவ பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள, ரால்மடுவ கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 69.9 ஹெக்டேயார் நிலப்பரப்பை எச்.வீ.ஏ. பாம்ஸ் (தனியார்) கம்பனியிடம் சுற்றாடலுக்கு ஒவ்வும் சேதன பழங்கள் மற்றும் காய்கறி பயிர் செய்கைக்காக காணியினை நீண்டகால 30 வருட கால குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
10. இலங்கை தொழிநுட்பவியல் பல்கலைக்கழகம் (விடய இல. 36)
 
 
இலங்கை தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகமானது உறுதியான கைத்தொழில்கள் பங்குடமை கொண்ட மாதிரி பொறியியல் நிறுவனமாகும். மேற்படி நிறுவனம் இலங்கை டெலிகொம் நிறுவனத்தினால், தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் பாதுக்கையில் அமைந்திருக்கின்றது. இலங்கை டெலிகொமின் செய்மதி நிலையத்திலே 36 ஏக்கர்கள் கொண்ட நிலப்பகுதியிலேயே இது அமைந்திருக்கின்றது. 04 வருடங்களை கொண்ட பொறியியல் பட்டகற்கை நெறிகளை வழங்குவதோடு, 2017ம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. உயர் தர மாணவர்களுக்கும் புதிய கற்கைகளை ஆரம்பித்தது. மேலும் பல சர்வதேச பல்கலைக்கழகத்துடன் மாணவர்களை இடமாற்றிக் கொள்ளும் உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுள்ளது. மேலும் பட்டப்பின் ஆய்வுக்கான பிரிவொன்றையும் உருவாக்குவதற்கு எண்ணியுள்ளது. குறித்த பல்கலைக்கழகம் தொடர்பில் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரின் பிரனாந்து அவர்களின் மூலம் அமைச்சரவைக்கு எடுத்துக் கூறப்பட்டது.
 
 
11. இலங்கை முதலீட்டு சபையின் ஹொரண வலயத்துக்காக நீர் உள்ளீர்ப்பு பொறிமுறை செயற்பாட்டு நிலையத்தினை ஸ்தாபித்தல் (விடய இல. 38)
 
 
இலங்கை முதலீட்டு சபையின் ஹொரண வலயத்துக்காக நாளொன்றுக்கு 8,000 கனமீற்றர் கொள்ளளவுடைய நீர்வழங்கல் திட்டமொன்றை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஹொரண, மதுறுவெல பிரதேசத்தில் 02 ஏக்கர், 5.1 பேர்ச்சஸ் விஸ்தீரனமான காணித்துண்டொன்றினை இலங்கை முதலீட்டு சபைக்கு கைமாற்றம் செய்வது தொடர்பில் சர்வதேச வர்த்தக மற்றும் திறமுறை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
12. சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பான பேச்சுவார்த்தை (விடய இல. 39)
 
 
சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில் இதுவரை இந்தியாவுடன் 04 கட்டமும், சீனாவுடன் 06 கட்டமும், சிங்கப்பூருடன் 05 கட்டமும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளை இவ்வருட இறுதிக்குள் முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச வர்த்தக மற்றும் திறமுறை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைக்கப்பட்ட அம்சங்கள் தொடர்பில் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது.
 
 
13. யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டிடத் தொகுதியை தாபிப்பதற்கான கருத்திட்டம் (விடய இல. 40)
 
 
JICA நிர்வனத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டிடத் தொகுதியை தாபிப்பதற்கான கருத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக ஆலோசனை சேவை கம்பனியுடன் ஆலோசனை சேவை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதுடன், நிபந்தனைகளுக்கு உட்பட்டு துஐஊயு வினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்றி ஆலோசனை சேவை கம்பனியினால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தக்காரருடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு அதிகாரத்தினை வழங்குவது தொடர்பில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
14. அன்ரி ரேபீஸ் (ரிசீ) தடுப்பூசி (ஹியுமன் யூஸ்) 1 மி.லி. குப்பிகளினை கொள்வனவு செய்தல் (விடய இல. 45)
 
 
அன்ரி ரேபீஸ் (ரிசீ) தடுப்பூசி (ஹியுமன் யூஸ்) 1 மி.லி. குப்பிகள் 2,900,000 இனை கொள்வனவு செய்வதற்காக சர்வதேச விலை மனுக்கோரலின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள விலை மனுக்கோரலில், குறைந்த விலையினை முன்வைத்துள்ள M/s SmithKline Beechan (Pvt) Ltd நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
15. 2017ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் பெறுகை கண்காணிப்பின் செயலாற்றுகை (விடய இல. 47)
 
 
குறித்த பெறுகை கண்காணிப்பின் செயலாற்றுகையின் அடிப்படையில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதி வரை 219 பெறுகை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 32 வழங்கப்பட்டுள்ளன. நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட அவ்வாறான விடயங்கள் அடங்கிய அறிக்கை தொடர்பில் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பெறுகை செயன்முறையில் ஏற்பட்டுள்ள காலதாமதத்திற்கான காரணங்களினை இனங்கண்டு அவற்றினை தீர்ப்பது தொடர்பிலும் இவ்வறிக்கையில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அவை தொடர்பிலும் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது.
 
 
16. கொழும்பு – 02, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள காணியொன்றை கலப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்திற்காக வரையறுக்கப்பட்ட சுப்பர்லேடிவ் ப்ரப்பட்டீஸ் நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கல் (விடய இல. 49)
 
 
கொழும்பு – 02, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள காணியொன்றை கலப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்திற்காக வரையறுக்கப்பட்ட சுப்பர்லேடிவ் ப்ரப்பட்டீஸ் நிறுவனத்திற்கு 1,815 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் 99 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள கொள்முதல் குழு சிபார்சு செய்துள்ளது. அதனடிப்படையில், குறித்த நிலப்பகுதியினை விடுவிப்பது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
17. ஹபரண புதிய க்றிட் உப மின்னிலையத்தின் நிர்மாணமும், வெயாங்கொட க்றிட் உப மின்னிலையத்தின் மேம்பாடு செய்வதற்கான ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 41)
 
 
ஹபரண புதிய க்றிட் உப மின்னிலையத்தின் நிர்மாணமும், வெயாங்கொட க்றிட் உப மின்னிலையத்தின் மேம்பாடு செய்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் இந்தியாவின் ளுநைஅநளெ நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
18. ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்கான பங்குபற்றுதலினை ஸ்திரப்படுத்துவதற்கான உதவி உடன்படிக்கையினை திருத்துதல் (விடய இல. 53)
 
 
ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்கான பங்குபற்றுதலினை ஸ்திரப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தினை ஐக்கிய அமெரிக்க முகவராண்மை நிலையத்துடன் இணைந்து தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு செயற்படுத்துகின்றது. இதற்காக 2016ம் ஆண்டு குறித்த உதவி வழங்கும் நிர்வனம் 22.70 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உடன்பட்டது. இத்தொகையினை மேலும் 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்களினால் அதிகரித்து, மொத்தம் 26.30 மில்லியன் அமெரிக்க டொலர்களாக திருத்தம் செய்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
19. அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் வசமான அரச காணிகளை அப்புறப்படுத்தல் திறமுறையை ஒழுங்குபடுத்தல் (விடய இல. 55)
 
 
அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் வசமான அரச காணிகளை அப்புறப்படுத்தல் திறமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான செயன்முறையினை அறிமுகப்படுத்தும் நோக்கில் உபயோகமற்ற காணிகளை வேண்டி முன்வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் தொடர்பில் பரிசீலித்து அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு சிபார்சுகளை முன்வைப்பதற்காக வேண்டி ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் மற்றும் உரிய ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட்ட குழுவொன்றினை நியமிப்பது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
20. 2017ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் காணாமல் போயுள்ள கடவுச்சீட்டுகளை மீள் பெற்றுக் கொள்வதற்கு சலுகை வழங்குதல் (விடய இல. 57)
 
 
2017ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் காணாமல் போயுள்ள கடவுச்சீட்டுகளை புதிதாக பெற்றுக் கொள்வதற்கு அறவிடப்படுகின்ற 10,000 ரூபா மேலதிக கட்டணத்தை செலுத்துவதிலிருந்தும் அவரை விடுவிப்பதற்கும், 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 01ம் திகதியின் பின் கடவுச்சீட்டொன்றை பெற்றுக் கொண்ட நபராக இருப்பின், அது தொடர்பில் பிரதேசத்திற்குரிய பிரதேச செயலாளரின் பிரத்தியேக சிபாரிசின் அடிப்படையில் 100 ரூபா கட்டணத்தை மட்டும் அறவிட்டுக்கு கொண்டு கடவுச்சீட்டொன்றை விநியோகிப்பதற்கும், அச்சலுகையினை 2017.08.30 வரை முன்னெடுப்பதற்கும் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பி. நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
21. சங்கைக்குரிய மாதுளுவாவே சோபித்த நாஹிமிகம கருத்திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 59)
 
 
296.50 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் மேற்கொள்ளப்படவுள்ள சங்கைக்குரிய மாதுளுவாவே சோபித்த நாஹிமிகம கருத்திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
22. பொது படுகடன் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கு பொறுப்பு முகாமைத்துவம் (விடய இல. 60)
 
 
செயலிலுள்ள பொது படுகடன் முகாமைத்துவத்திற்கான ஓர் உபாயத் திட்டமாக பொறுப்பு முகாமைத்துவத்தைப் பயன்படுத்துவதற்கும், குறித்த விடயம் தொடர்பில் உத்தேச சட்டத்தை வரையறை செய்வதற்கு சட்ட வரைஞருக்கு அறிவுரை வழங்குவதற்கும், குறித்த சட்டத்தை செயற்படுத்துவதற்கு தேவையான ஏனைய விடயங்களை மேற்கொள்வதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
23. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சர் குழுவொன்றை நியமித்தல் (விடய இல. 62)
 
 
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிணைப்பதற்காக கௌரவ பிரதமர் அவர்களின் தலைமையில் அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும், அக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும் யோசனைகளை முன்வைத்து கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
24. இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி (SVAT) இனை நீக்குதல் (விடய இல. 63)
 
 
இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி (SVAT) இனை நீக்குவதற்கான 2018.01.01 ம் திகதி திருத்தியமைக்கப்படுவதன் கீழ், அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் (திருத்தச்) சட்ட மூலத்தினை அரசர்ஙக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவது தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
25. கொழும்பு நகர் மற்றும் சன நெருக்கடியான மாநகர மற்றும் நகர சபை அதிகாரங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் கழிவுகளை அகற்றுதல் (விடய இல. 64)
 
கொழும்பு நகர் மற்றும் சன நெருக்கடியான மாநகர மற்றும் நகர சபை அதிகாரங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் கழிவுகளை உரிய முறையில் உரி உள்ளூராட்சி நிர்வனங்களின் ஊடாக அகற்றுவதற்கும், கழிவுகளை அகற்றுவது தொடர்பில் ஏற்படும் பொது மக்கள் எதிர்ப்புக்களை தடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவினை பெற்றுக் கொள்வதற்கும், உரிய முறையில் பிரிக்கப்பட்டதன் பின்னரே குறித்த கழிவுகளை அகற்றுவதற்கும், கழிவு அகற்றுவதற்கு உரிய உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கும், அது தொடர்பில் பொது மக்களை அறிவுறுத்துவதற்கும், பெருந்தெருக்களில் கழிவகற்றுவதை தடுத்தல், பொலிதின் பாவனையினை அகற்றுவதற்கு மாற்று முறையொன்றினை அறிமுகப்படுத்துதல் போன்ற விடயங்களை பின்பற்றுவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.