01.இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை (SLIIT) சுயாதீன நிறுவனமாக முன்னெடுத்துச் செல்லல்(விடய இல. 05)
மஹாபொல நிதியத்தின் மூலம் வழங்கப்பட்ட கடன் தொகையினை பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட, மாலபே பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனமானது, தற்போது தொழில்நுட்பம், வியாபாரம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளுக்கு உரித்தான பட்டங்களை வழங்கும் மிக முக்கிய கல்வி நிறுவனமாகும். தற்போது அங்கு சுமார் 7,000 மாணவ, மாணவிகள் கல்வி கற்பதோடு, சுமார் 9,000 பட்டதாரிகள் இதுவரை பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர். முதலீட்டாளர்களை கவர்ந்து, வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்நிறுவனத்தை மேலும் விருத்தி செய்ய வேண்டியுள்ளது. மஹாபொல நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகையானது, தற்போது முழுமையாக செலுத்தப்பட்டிருப்பதை கவனத்திற் கொண்டு, பட்டமளிக்கும் சுயாதீன கல்வி நிறுவனமாக அந்நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில்; அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02.பாதுகாப்பு படையணித் தலைமையகம் (மத்திய) ஸ்தாபிப்பதற்காக வேண்டி இரு மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 07)
2013ம் ஆண்டு தியதலாவ பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 'பாதுகாப்பு படையணித் தலைமையகம் (மத்திய)' மூலம் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், தென் மாகாணத்தில் ஒரு பகுதிக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. அதேபோன்று அவசர நிலைமைகளின் போது மற்றும் பாதுகாப்பு வழங்கும் போது முதன்மைக் கொண்டு செயற்படுகின்றது. தற்போது பல்வேறு கஷ;டங்களுக்கு மத்தியில் தியதலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள தொண்டர் படையணியின் பயிற்சிப் பாடசாலைக்கு உரித்தான கட்டிடத்தில் முன்னெடுக்கப்படும் இத்தலைமையகத்தை ஸ்தாபிப்பதற்காக இரு மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03.சுற்றுலாத்துறையினை விருத்தி செய்வதற்காக காணித்துண்டுகளை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 11)
2020 இல் சுற்றலாப் பயணிகளின் வருகை மூலம் 10 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதியான வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்காகச் சுற்றுலாப் பயணிகளின் வருகையினை 4.5 மில்லியனாக அதிகரிப்பினை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் போது பிரதேச ரீதியாக சுற்றுலா பயண முடிவிடங்களை விருத்தி செய்து, அதனுடன் தொடர்புடைய அடிப்படை வசதிகளை விருத்தி செய்வது அவசியமாகின்றது. கற்பிட்டிப் பிரதேசமானது பல்வேறுபட்ட சுற்றுலா கவர்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது என்ற வகையில் சுற்றுலா அபிவிருத்திக்கு மிகப் பொருத்தமான இடமாகும். எனினும் அப்பிரதேசத்தில் தற்போது காணப்படும் ஹோட்டல் மற்றும் பிற சுற்றுலா வசதிகளானது, உயர் தரத்திலான சுற்றுலாப்பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதல்ல. அதனால் அப்பிரதேசத்தில் சுற்றுலாத்துறையினை மற்றும் அதனுடன் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 56.35 ஹெக்டேயர் இடப்பகுதியினை 05 பாகங்களாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால்முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04.இலங்கை மற்றும் கனடா இடையே முன்மொழியப்பட்ட விமானசேவை உடன்படிக்கை(விடய இல. 13)
வெளிநாடு சென்றுள்ள அதிகமான இலங்கையர்கள் கனடாவில் வசித்து வருகின்றனர். எனினும் இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் எவ்வித விமான சேவை உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை. எனவே இரு நாடுகளுக்கும் இடையில் முறையான விமான சேவையினை கட்டியெழுப்பும் நோக்கில் தற்போது அதிகாரிகள் மட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள முன்மொழியப்பட்டுள்ள விமானசேவை உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும், அதன் பின்னர் உடன்படிக்கையின் அம்சங்களை செயற்படுத்துவதற்கும் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வாஅவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05.எல்பிட்டிய உதவி பொலிஸ் அதிகாரசபை அலுவலகம் மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலக காரியாலயம் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்காக காணிப்பகுதிகளை உரிமை மாற்றம் செய்து கொள்ளல்(விடய இல. 14)
இலங்கை போக்குவரத்துச் சபைக்குரிய எல்பிட்டிய டிபோ காணியிலிருந்து 140 பேர்ச்சஸ் காணித்துண்டொன்டை எல்பிட்டிய உதவி பொலிஸ் அதிகாரசபை அலுவலகத்தை நிர்மாணிப்பதற்கும், 01 ஏக்கர் காணித்துண்டொன்டை முன்மொழியப்பட்டுள்ள எல்பிட்டிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பிரதேச செயலக காரியாலயத்தை நிர்மாணிப்பதற்கும் உரிமை மாற்றம் செய்து கொள்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்மொழியப்பட்ட பின்வரும் தீர்வுகளுக்குஅமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06.வறுமையினை ஒழித்தல் தொடர்பிலான BIMSTEC அமைப்பின் அமைச்சர்கள் மட்ட கூட்டத்தினை 2017ம் ஆண்டில் இலங்கையில் நடாத்துதல்(விடய இல.24)
மூன்றாவது வறுமையினை ஒழித்தல் தொடர்பிலான BIMSTEC அமைப்பின் அமைச்சர்கள் மட்ட கூட்டத்தினை 2017ம் ஆண்டில் இலங்கையில் நடாத்துவது தொடர்பில் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சர் கௌரவ எஸ்.பி. திசாநாயக்கஅவர்களினால்முன்வைக்கப்பட்டயோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07.2017ம் நிதி வருடத்திற்கான 01ம் காலாண்டு இறுதியில் உண்மையான செலவினம் பற்றிய அறிக்கை(விடய இல. 18)
கௌரவ நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட2017ம் நிதி வருடத்திற்கான 01ம் காலாண்டு இறுதியில் உண்மையான செலவினம் பற்றிய அறிக்கையின் அடிப்படையில் 2017ம் ஆண்டின் முதல் காலாண்டு இறுதி மொத்த மெய் மீண்டெழும் செலவினம் 482,856 மில்லியன் ரூபா எனவும், மொத்த மெய் மூலதனச் செலவினம் 474,509 மில்லியன் ரூபா எனவும், ஆக மொத்தம் 957,365 மில்லியன் ரூபா எனவும் அமைச்சரவையின் கவனத்திற் கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை 2017ம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08.பத்தரமுல்லை பிரதேசத்தைச் சுற்றி அரச அலுவலகங்களில் நெகிழ்வான அலுவலக நேரங்கள் நடைமுறைப்படுத்தும் முன்னோடி கருத்திட்டம்(விடய இல. 19)
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பிரிவினுள் பத்தரமுல்லை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அலுவலக வேலைகளுக்காக வருகைத்தரும் வாகனங்களில் 58மூ ஆனவை மு.ப 7.00 மணியிலிருந்து மு.ப. 9.30 வரையான காலப்பகுதியில் அலுவலகங்களுக்கு வருகைத்தருவதாகவும், பி.ப. 3.00 மணியிலிருந்து பி.ப. 5.30 மணி வரையான காலப்பகுதியில் அலுவலகங்களில் இருந்து வெளியேறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில் மு.ப. 7.00 மணியிலிருந்து மு.ப. 9.30 மணி வரையான காலப்பகுதியில் எந்நேரத்திலும் அலுவலகத்துக்கு வருகைத்தருவதற்கும், பி.ப. 3.00 மணியிலிருந்து பி.ப. 5.30 மணி வரையிலான எந்நேரத்திலும் அலுவலகத்திலிருந்து செல்வதற்கும் ஏதுவான வகையில் நெகிழ்வான அலுவலக நேரங்கள் கொண்ட முன்னோடி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அது தொடர்பிலான சுற்று நிரூபங்களை வெளியிடுவதற்கு குறித்த அமைச்சின் செயலாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்குமாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09.கடந்த வருடத்தில் கேகாலை மாவட்டத்தில் நிலவிய கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சேதமடைந்த தேயிலை மற்றும் இறப்பர் பயிர் செய்கை நிலங்களை மறுசீரமைத்தல்(விடய இல. 20)
கடந்த வருடத்தில் கேகாலை மாவட்டத்தில் நிலவிய கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சேதமடைந்த தேயிலை மற்றும் இறப்பர் பயிர் செய்கை நிலங்களை மறுசீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவின் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10.கேள்வி சார் சக்தி முகாமைத்துவத் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறைந்த அளவான மின்சார நுகர்வையுடைய குடும்ப அலகொன்றுக்கு சக்தி வினைத்திறன் வாய்ந்த மின் விளக்குகளைப் (LED Lamps)பெற்றுக் கொடுத்தல்(விடய இல. 21)
குறைந்தளவிலான மின்சாரத்தை நுகரும் நுகர்வோருக்கிடையில் பயன்படுத்தப்படும் அதிக மின்விரயமாகும் மின்குமிழ்களுக்கு பதிலாக மிகவும் வினைத்திறன் மிக்க LED மின்குமிழ்களை பாவிக்கும் வகையில், அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அந்த மின்சார நுகர்வோருக்கு இடையில் குறித்த மின்குமிழ்களை சலுகை விலைத்திட்;டத்தின் கீழ் பகிர்ந்தளிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வட்டியில்லா 24 தவனைகளில், மாதாந்த மின்கட்டணத்துடன் அறவிடுவதற்கு முடியுமான முறையில் குறித்த மின்குழிழ்களை பெற்றுக் கொடுக்கும் செயன்முறையொன்றை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாதாந்தம் 1-30 வரையான மின் அலகுகளை பாவிக்கும் வீடுகளுக்கு 02 மின்குமிழ்களும், 30-60 வரையிலான மின் அலகுகளை பாவிக்கும் வீடுகளுக்கு 03 மின்குமிழ்களும், 60-90 வரையிலான மின் அலகுகளை பாவிக்கும் வீடுகளுக்கு 04 மின்குமிழ்களும் வீதம் பெற்றுக் கொடுப்பதற்கும், குறித்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான 10 இலட்சம் LED மின்குமிழ்களை விலை மனுக்கோரலின் மூலம் கொள்வனவு செய்வதற்கும் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11.தேசிய மிலாதுன் நபி நிகழ்வு தொடர்பில் அனைத்து அமைச்சுக்கள் மட்டத்தில் நிகழ்ச்சிகளை செயற்படுத்தல்(விடய இல.23)
இவ்வருடம் டிசம்பர் மாதம் 01ம் திகதி அனுஷ;டிக்கப்பட உள்ள நபியவர்களின் பிறந்த தின நிகழ்விற்காக முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதன் பிரதான நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் சமய விவகாரங்களை அபிவிருத்தி செய்ய திறைசேரியினால் 14 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வை கொண்டாடுவதற்காக வேண்டி அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ள முஸ்லிம் சமய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அம்மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வதற்கும் தபால், தபால் சேவை மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சர் கௌரவ எம்.எச்.ஏ. ஹலீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. உள்ளுராட்சி நிறுவனங்களின் தேர்தல் நடத்தும் கட்டளைச்சட்டம் (262 ஆவது அதிகாரம்)திருத்தம் செய்தல் (விடய இல. 24)
முன்மொழியப்பட்டுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல் நடத்தும் கட்டளைச்சட்டம் (262 ஆவது அதிகாரம்) திருத்த சட்டமூலத்தை அமைச்சரவை உப குழுவின் மூலம் மேலும் ஆராயப்பட்டுள்ளதுடன், தேர்தல் ஆணைக்குழுவின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள அம்சங்களும் கவனத்திற் கொள்ளப்பட்டு இறுதி சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பின் 75ம் பிரிவினை மீறும் அம்சங்களாக காணப்படுவதால், அதனை பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையின் மூலம் அங்கீகரிக்க வேண்டும் என சட்டமாதிபரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பின்னர் குறித்த அம்சங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் மெற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல் அங்கத்தவர் தேர்தல் தொகுதிக்கு அபேட்சகர்களை முன்நிறுத்தும் செயன்முறை தொடர்பில் தேர்தர் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற்கொண்டு, அதனை சட்ட வரைஞரினால் சட்டமூலமாக வரைந்து, அதனை பாராளுமன்ற குழு நிலை விவாதங்களின் போது முன்வைத்து, அதனையும் குறித்த சட்ட மூலத்தில் இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மேலதிக திருத்தங்களை பாராளுமன்ற குழுநிலை விவாதங்களின் போது இணைத்துக் கொள்வதற்கும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா அவர்களினால்முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13.மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரையான புகையிரத வீதியினை நீடிக்கும் வேலைத்திட்டத்தின், மாத்தறை – பெலியத்தை பகுதியின் சமிஞ்ஞை, மின்சார தொடர்பு மற்றும் புகையிரத குறுக்கு வீதிகள் பாதுகாப்பு கடவைகளை (Level Crossing Protection) பொருத்துதல்(விடய இல. 30)
மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரையான புகையிரத வீதியினை நீடிக்கும் வேலைத்திட்டத்தின், மாத்தறை – பெலியத்தை பகுதியின் புகையிரத வீதியினை நிர்மாணிக்கும் பணியின் போது எஞ்சிய நிதியினை பயன்படுத்தி, குறித்த பகுதியில்புகையிரத வீதி சமிஞ்ஞைகள், மின்சார தொடர்பு மற்றும் புகையிரத குறுக்கு வீதிகள் பாதுகாப்பு கடவைகளை Level Crossing Protection) பொருத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை, குறித்த வேலைத்திட்டத்தை தற்போது முன்னெடுத்து வரும் சைனா நெஷனல் மெசினரி இம்போர்ட் என்ட் எக்ஸ்போர்ட் கொபர்ரேஷன் நிறுவனத்துக்கே பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழு சிபார்சித்துள்ளது. குறித்த சிபார்சின் அடிப்படையில் அவ்வொப்பந்தத்தை வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14.மஹா மன்னார் நீர் வழங்கல் திட்டத்திற்கான சாத்தியவள ஆய்வினை மெற்கொள்ளல் (விடய இல. 34)
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் ஆகியோர் மேற்கொண்ட கலந்தாலோசனையின் அடிப்படையில் மஹா மன்னார் நீர் வழங்கல் திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் சாத்திய வள ஆய்வொன்றினை மேற்கொள்வதற்கும், தமது கேள்விகளை முன்வைத்துள்ள நிறுவனத்தின் செலவில் குறித்த ஆய்வை மெற்கொள்வதற்கும், குறித்த வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக Swiss Challenge கொள்முதல் செயன்முறையினை பின்பற்றுவதற்கும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15.நாராஹேன்பிட்டிய பொலிஸ் வைத்தியசாலையினை விருத்தி செய்து நவீனமயப்படுத்துவதற்காக ஆலோசனை நிறுவனமொன்றை நியமித்தல்(விடய இல. 36)
நாராஹேன்பிட்டிய பொலிஸ் வைத்தியசாலையினை விருத்தி செய்து நவீனமயப்படுத்துவதற்காக 02 ரூட் 23.5 பேர்ச்சஸ் காணிதுண்டொன்டை நகர அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து உரித்தாக்கி கொள்வதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. குறித்த கட்டுமானபணிகளை மேற்கொள்வது தொடர்பில் ஆலோசனை சேவையினை வழங்குவதற்கு, பொலிஸ் திணைக்களத்தின் மூலம் தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் ஆலோசனை சேவையினை வழங்குகின்ற பொறியியல் செயற்பாடுகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகத்தின் சேவையினை பெற்றுக் கொள்வது தொடர்பில் சட்டமும், ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.