01. தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (விடய இல. 06)
நாட்டில் சர்வசன வாக்குரிமையானது முறையாக செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனின் வாக்கெடுப்புகள் சுதந்திரமாகவும், சாதாரணமாகவும் நடைபெற வேண்டும். ஏதேனுமொரு வாக்கெடுப்பு சுதந்திரமாகவும் சாதாரணமாகவும் அமைய வேண்டும் எனின் அங்கு மக்கள் எவ்வித தங்குதடைகளுமின்றி வாக்களிக்க வேண்டும். அவ்வாறு ஏதேனுமொரு அரசியல் கட்சி, குழு அல்லது வேட்பாளர் ஒருவரின் மூலம் மக்கள் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அதிகமதிகமாக பணம் செலவளிக்கப்படும் எனின் அது பொதுமக்களின் விருப்பங்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்களவு தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும்.
இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தீர்ப்பினை சரியாக பெற்றுக் கொள்வதற்காக தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக சட்டதிட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் 1977ம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட தேர்தல்களில் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்கான சட்ட ரீதியாக அவகாசங்கள் காணப்பட்ட போதும் தற்போதைய தேர்தல் முறையில் அவ்வாறான விதிமுறைகள் உள்வாங்கப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பில் விதிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை தொடர்பில் ஆரம்ப இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் மூலம் அறியத்தரப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள், குழுக்கள் அல்லது வேட்பாளர்களின் மூலம் மேற்கொள்ளப்படும் தேர்தல் செலவுகள் தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்கு மற்றும் அச்செலவுகள் தொடர்பில் மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஏதுவான முறையில் தற்போது காணப்படுகின்ற தேர்தல் சட்டங்களை திருத்தம் செய்வதற்கும் மற்றும் புதிதாக சட்டங்களை விதிப்பது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையில் இளையோர் அபிவிருத்திக்கு உரித்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் (விடய இல. 08)
இளைஞர் - யுவதிகள் மத்தியில் பல்வேறு வகையில் நலன்களை விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு வசதிகளை விரிவுபடுத்தல் மற்றும் விருத்தி செய்தல் (விடய இல. 10)
சுhதாரண விலையில் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உயர் தரத்திலான குழந்தைகள் பகல் நேர பாதுகாப்பு வசதிகளை நாட்டினுள் அபிவிருத்தி செய்வதன் மூலம், விசேடமாக உயர் கல்வி மட்டத்தினைக் கொண்ட குறிப்பிடத்தக்களவு மகளீரின் பங்களிப்பினை நாட்டின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்காக பயன்படுத்த முடியும் என்பதால் இப்பிரிவினை மேலும் விருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் இணங்கண்டுள்ளது.
மகளீர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தற்போது இலங்கையில் அரச மற்றும் தனியார் பிரிவுகளின் மூலம் முன்னெடுக்கப்படுகின்ற 1,200 பகல் நேர பாதுகாப்பு நிலையங்களில் 24,000 சிறுவர்கள் பாராமரிக்கப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இத்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளை இனங்கண்டு இலங்கையில் சிறுவர் பகல் நேர பாதுகாப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்துவது, விருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக அரச, மாகாண சபைகள், அரச சார்பற்ற மற்றும் தனியார் ஆகிய துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினை நியமிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. புலம்பெயர்ந்த மோரா வகை மீனினங்களின் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 11)
Convention on the Conservation of Migratory Species of Wild Animals இல் இலங்கை 1993ம் ஆண்டிலிருந்து உறுப்புரிமை பெற்றுள்ளது. அதனடிப்படையில், 2017ம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 22ம் திகதி முதல் 28ம் திகதி வரை பிலிப்பைன்ஸ் நாட்டின் மெனிலாவில் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் மாநாட்டில், புலம்பெயர்ந்த மோரா வகை மீனினங்களின் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த மோரா வகை மீனினங்களின் விசேட பாதுகாப்பு தொடர்பாக நிதியியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இவ்வொப்பந்தம் வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வொப்பந்தத்தில் இலங்கை சார்பில் கைச்சாத்திடுவது தொடர்பில் நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. களனி வழி புகையிரத மார்க்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு இனங்காணப்பட்டுள்ள காணிகளில் வசிப்பவர்களுக்காக வேறு இடங்களில் வீடுகளை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 12)
களனி வழி புகையிரத மார்க்கத்தின் மரதானையிலிருந்து பாதுக்கை வரையான பிரிவினை இரு வழிகளைக் கொண்ட புகையிரத மார்க்கமாக விருத்தி செய்தல் மற்றும் அவிஸ்ஸவாளை வரையான அதன் அடுத்த கட்டத்தை புனர்நிர்மாணம் செய்தல் என்பன களனி வழி புகையிரத மார்க்க அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். அவ்வேலைத்திட்டத்துக்கு தேவையான காணிகளை விடுவிக்கும் போது ஏற்படுகின்ற சமூக – பொருளாதார தாக்கங்கள் தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த ஆய்வில் மரதானையிலிருந்து ஹோமாகம வரையிலான பகுதியின் தாக்கம் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அவ்வாய்வின் அடிப்படையில் குறித்த புகையிரத மார்க்கத்தின் இரு புறமும் புகையிரத பாதுகாப்பு இடங்களில் வசிக்கின்ற 2,100 குடும்பங்களுக்காக, குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு முன்பதாக வேறு இடங்களில் குடியமர்த்த வேண்டியுள்ளது.
குறித்த மக்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக வீடுகளை பெற்றுக் கொள்வதற்கு ஆவலாக உள்ளனர். 2017 – 2019 வரையான காலப்பிரிவினுள் முடிவுக்கு கொண்டு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அவ்வாறான வீடமைப்பு வேலைத்திட்டங்களில் 4 – 5 மில்லியன் பெறுமதியினைக் கொண்ட, 400 – 500 சதுர அடி அளவிலான 2,036 வீடுகளை அவ்வாறான பிரஜைகளுக்கு ஒதுக்கிக் கொடுப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் அவ்வீடுகளை ஒதுக்கிக் கொள்வதற்கு அவசியமான நிதியினை திரட்டிக் கொள்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. கடும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நிவாரணங்களை வழங்குதல் (விடய இல. 13)
நாட்டில் நிலவுகின்ற கடுமையான வறட்சியினால் பல மாவட்டங்களிலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார பின்னடைவினை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களுக்காக உலர் உணவு கூப்பன்களை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டமானது அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வேலைத்திட்டத்தின் கீழ் வறட்சியினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 19 மாவட்டங்களின் 740,000 குடும்பங்களுக்காக உலர் உணவு கூப்பன்களை பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. கடந்த ஒரு சில தினங்களில் அவற்றில் ஒரு சில மாவட்டங்களுக்கு குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி கிடைத்த போதும் அது குறித்த பின்னடைவில் இருந்து அவர்களை மீட்கும் அளவுக்கு போதுமானதாக அமையவில்லை.
அதனடிப்படையில், அக்குடும்பங்களுக்காக தற்போது பெற்றுக் கொடுக்கப்படுகின்ற உலர் உணவு கூப்பன்களை தொடர்ந்தும் பெற்றுக் கொடுப்பதற்கும், இப்பணிக்கு அவசியமான நிதியினை பெற்றுக் கொள்வதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. அனர்த்தங்களை குறைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் மண்சரிவு அவதானத்தை குறைத்துக் கொள்ளல் (விடய இல. 14)
பல்வேறு காரணங்களினால் மலையகத்தில் மண்சரிவு ஏற்படுவது சாதாரண நிகழ்வொன்றாக மாறியுள்ளது. மண்சரிவினை குறைப்பதற்காக பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. மண்சரிவு ஆபத்தினை முழுமையாக குறைத்துக் கொள்வதற்காக இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அதனடிப்படையில் அனர்த்தங்களை குறைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் மண்சரிவு ஆபத்தினை குறைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தினை அடுத்து வருகின்ற 04 வருட காலப்பிரிவினுள் செயற்படுத்துவது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. பொது சந்தைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் (விடய இல. 16)
கொள்ளுபிட்டிய, பம்பலபிட்டிய, பொரளை, நுகேகொடை, மஹரகம, தெஹிவளை, கல்கிஸ்ஸ, மொரடுவ மற்றும் கடுபெத்த ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள பொது சந்தை தொகுதிகளை நவீன மற்றும் முழுமையான வசதிகளுடன் கூடிய வகையில் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உரிய உள்ளுராட்சி மன்றங்கள் இணைந்து முறையான செயன்முறையொன்றின் கீழ் செயற்படுத்துவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. அங்கொடை 'வொர்க் அப்' (Walk Up) வீட்டுத்தொகுதிக்காக அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு, மேலதிகமான இடமொன்றை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 17)
நகர மீளப்புதுப்பிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அங்கொடை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற 500 வீட்டு அலகுகளைக் கொண்ட மாடி கட்டிட வீட்டுத்தொகுதிக்காக கழிவகற்றம் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்காக அதற்கருகில் உள்ள அரசாங்கத்துக்கு உரித்தான மேலதிக இடப்பகுதியினை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையகப்படுத்திக் கொள்வது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. பெஹெலியகொடை கழிவு சேகரிக்கும் பூமியினை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 18)
தற்போது கழிவு சேகரிக்கப்படுகின்ற அதிக பெறுமதி வாய்ந்த பெஹெலிகொடை கழிவு சேகரிக்கும் பூமிப்பகுதியை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கை காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்புடன் அப்பூமி பகுதியினை முறையான முறையில் நிரப்பி சுற்றியுள்ள வலயத்தினுள் மழை நீர் வழிந்தோடும் பிரிவொன்றை அமைப்பதன் மூலம் அபிவிருத்தி செய்வது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. 'சூரிய பலய சங்கிரமய' வேலைத்திட்டத்தின் கீழ் சிறு அளவிலான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைத்தல் - கட்டம் - ii (விடய இல. 21)
'சூரிய பலய சங்கிரமய' வேலைத்திட்டத்தின் கீழ் சிறு அளவிலான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைத்தல் - கட்டம் - ii இன் கீழ் 01 மெகாவொட் அளவிலான சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலைய வேலைத்திட்டங்கள் 90 இற்கான அவகாசங்களை பெற்றுக் கொடுக்க முடியும் என இலங்கை மின்சார சபை உறுதி செய்துள்ளது.
அதற்காக முதலீட்டாளர்களிடத்தில் இருந்து முன்மொழிவுகளை கோரும் போது, முதல் கட்டத்தின் போது அதற்காக பின்பற்றப்பட்ட நிர்ணயங்களை ஆராய்ந்து போட்டித்தன்மையினை அதிகரிப்பதற்கு தேவையான திருத்தங்களுடன் இரண்டாம் கட்டத்தின் 90 வேலைத்திட்டங்களுக்கும் முன்மொழிவுகளை கோருவதற்கு மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தின் செயற்பாட்டு அலுவலகம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபித்தல் (விடய இல. 23)
எதிர்கால நெற்பயிர் செய்கை நிலங்கள், அதனுடன் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் என்பவற்றை மேலும் பலனுள்ள விதத்தில் முன்னெடுப்பதற்கு சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தின் செயற்பாட்டு அலுவலகம் ஒன்றை இலங்கையின் பதளகொட பிரதேசத்தில் அமைந்துள்ள நெல் ஆராய்ச்சி நிலையத்தில் ஸ்தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக சர்வதேச நெல் ஆராய்ச்தி நிலையத்துக்கும் இலங்கை நெல் ஆராய்ச்சி நிலையத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. கங்கையுடன் கூடிய அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான செயன்முறை ஒன்றை தயாரித்தல் (விடய இல. 24)
பல்வேறு இயற்கை மற்றும் செயற்கை காரணிகளினால் கங்கைகள் தனது இயற்கை தன்மையினை இழந்து வருகின்றது. அதனால், கங்கையுடன் கூடிய அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் பங்குபற்றல் முகாமைத்துவ முறையின் ஊடாக செயற்படுத்துவது தொடர்பில் நீர்ப்பாசன மற்றும் நீரியல் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ விஜித் விஜய முனி சொய்சா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற் கொண்டு அதனுடன் தொடர்பான அனைத்து அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பொருத்தமான செயன்முறையொன்றை தயாரிப்பது தொடர்பில் அமைச்சரவையின் மூலம் கொள்கை அளவிலான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
14. 2018ம் ஆண்டின் அரச வெசாக் உற்சவம் (விடய இல. 25)
2018ம் ஆண்டின் அரச வெசாக் உற்சவத்தினை குருணாகல் மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க ரஜமஹா விகாரையினை மையப்படுத்தி நடாத்துவதற்கும், 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி தொடக்கம் மே மாதம் 02ம் திகதி வரையான வாரத்தினை 'தேசிய வெசாக் வாரமாக' பிரகடனப்படுத்துவதற்கும் புத்தசாசன அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. 1971ம் ஆண்டு 52ம் இலக்க வர்த்தக கப்பம் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள சிறிய வணிக படகுகளை நிர்ணயிப்பதற்காக சட்டத்திட்டங்கள் (விடய இல. 31)
1971ம் ஆண்டு 52ம் இலக்க வியாபார கப்பம் சட்டத்தின் கீழ் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள '2017 வர்த்தக கப்பல் (சிறிய வணிக படகுகள்) ஒழுங்குவிதிகள்' உட்பட்ட 2017ஃ31ம் இலக்க 2017-05-04ம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலினை அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த சமரவிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. மலையக பிரஜைகளுக்காக காணி உரித்து மற்றும் பொருத்தமான வீடுகளை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 33)
பல்வேறு வேலைத்திட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வீட்டுத்திட்டங்களின் உரித்துகளை அம்மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அக்காணி உரித்துக்களை வழங்குவதற்காக வேண்டி உரிய வீடமைப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற காணிகளை பிரதேச தோட்ட கம்பனிகளிடத்தில் இருந்து விடுவித்துக் கொள்வது தொடர்பில் மலைநாட்டு புதிய கிராமங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் பிரஜைகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ யூ. பழனி திகாம்பரம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. புதிய சிறைச்சாலை கூடமொன்றை மன்னார் பிரதேசத்தில் ஸ்தாபித்தல் (விடய இல. 34)
சிறைச்சாலை திணைக்களத்துக்காக நிலையான சிறைச்சாலை கூடமொன்றை மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கான அவசியத்தை கவனத்திற் கொண்டு, மன்னார் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் உப்புக்குளம் (தெற்கு) கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள, சிறைச்சாலைகள் திணைக்களத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ள காணிப்பகுதியில் சிறைச்சாலை கூடமொன்றை புதிதாக நிர்மாணிப்பது தொடர்பில் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. கொரியா குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்புகள் தொடர்பான ஒப்பந்தம் (விடய இல. 36)
பல்வேறு வகையான பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் தென் கொரியா குடியரசுடன் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இவ்வருடம் நவம்பர் மாதம் அளவில் தென் கொரியாவில் மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வியாபார அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19,20 மற்றும் 21. சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரங்கள் (விடய இல. 43,44 மற்றும் 46)
சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• ராகம வைத்தியசாலையின் புதிய கிளினிக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 195 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு M/s Link Engineering (Pvt.) Ltd.நிறுவனத்துக்கு வழங்கல்.
• மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோய் சிகிச்சை பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 383 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு M/s Nuwani Construction (Pvt.) Ltd.நிறுவனத்துக்கு வழங்கல்.
• சிலாபம் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் முன்மொழியப்பட்டுள்ள மருத்துவ வாட்டு கட்டிடத் தொகுதியினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 583 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கல்.
22. மாகும்புரவில் முன்மொழியப்பட்டுள்ள பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் மற்றும் சூழலினை விருத்தி செய்யும் பணிகள் (விடய இல. 48)
நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதியினை பயன்படுத்தி மாகும்புரவில் முன்மொழியப்பட்டுள்ள பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் மற்றும் சூழலினை விருத்தி செய்யும் பணிகளை இலங்கை காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நிறைவேற்றிக் கொள்வது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. அனல் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருற்களை வழங்குதல் மற்றும் பகிர்ந்தளிப்பதற்கான கொள்முதல் (விடய இல. 49)
அனல் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிவாயுக்களை வழங்குதல் மற்றும் பகிர்ந்தளிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் ஒரு லீட்டர் சிலின்டர் எண்ணெய் 295.40 ரூபா வீதமும் ஒரு லீட்டர் சிஸ்டம் எண்ணெய் 253.83 ரூபா வீதமுமான மதிப்பீட்டு தொகைக்கு M/s. N.M. Distributors (Pvt.) Ltd நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. உமா ஓயா பல்துறை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்றை செயற்படுத்தல் (விடய இல. 58)
உமா ஓயா பல்துறை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்றை செயற்படுத்துவதற்கும் அத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக வேண்டி விசேட அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டு மத்திய நிலையம் ஒன்றை பண்டாரவளை நகரை அண்டிய பிரதேசத்தில் ஸ்தாபிப்பதற்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25, 26 மற்றும் 27. கட்டார் அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (விடய இல. 62, 63 மற்றும் 64)
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மிக விரையில் காட்டார் நாட்டில் மேற்கொள்ள உள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பின்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
• வலுசக்தி துறையில் ஒத்துழைப்புகளை மேம்படுத்திக் கொள்வது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அர்ஜுன ரணதுங்க மற்றும் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய ஆகியோர் முன்வைத்த யோசனை.
• அரசாங்க ரீதியிலான பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சி துறையில் ஒத்துழைப்புகளை மேம்படுத்திக் கொள்வது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் வெளி விவகார அமைச்சர் கௌரவ திலக் மாரப்பன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனை.
• நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்திக் கொள்வது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனை.