• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

உலக ஒசோன் தினத்தைக் கொண்டாடுதல் 2021

ஓசோன் படையை நலிவு படுத்தும் பதார்த்தங்களுக்கான மொன்ட்றியல் உடன்படிக்கையின் பங்காளர் என்ற வகையிலே இலங்கையானது உயிர்காக்கும் ஓசோன் படையைப் பேணுவதற்காக சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் தனது கடப்பாடுகளை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ளது.  சுற்றாடல் அமைச்சானது மொன்ட்றியல் உடன்படிக்கையின் கடப்பாடுகளை செயல்வலுப்படுத்துவதற்கான நோக்கப்புள்ளியாகப் பங்கு வகிக்கிறது. இவ்வமைச்சிலுள்ள தேசிய ஓசோன் அலகானது மொன்ட்றியல் உடன்படிக்கையின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. 

ஓசோன் படையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் வருடாந்தம் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றாடல் அமைச்சினாலும் ஏனைய சகல பங்காளர்களாலும் ஓசோன் படையைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும் தொழில் நுட்பங்களின் விருத்தி தொடர்பில் விழிப்புணர்வையூட்டுவதும் ஓசோன் விஞ்ஞானத்தைப் பரப்புவதுமே  இந்த நிகழ்வின் பிரதானமான நோக்கங்களாகும்.

தற்போதுள்ள பெருந்தொற்றுக் காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த வருடம் இன்றைய தினம் (16 ஆம் திகதி) இந் நிகழ்வு நிகழ்நிலையில்  ZOOM தொழிநுட்பத்தின் உதவியுடன் நடைபெறவிருக்கிறது. உலக ஓசோன் தினத்தின் உலகளாவிய தொனிப்பொருள் ‘மொன்ட்றியல் உடன்படிக்கை: எம்மை, எமது உணவை, தடுப்பு மருந்துகளைக் குளிர்மையாக வைத்திருக்கிறது’ என்பதாகும்.  இந்த நிகழ்வானது சுற்றாடல் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களின் தலைமையில், அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவின் பங்குபற்றலுடன்  நடைபெறவுள்ளது. 

உலகெங்கும் பேசுபொருளாக தடுப்பூசிகள் காணப்படும் இன்றைய கால கட்டத்தில், நோய்ப்பரம்பலியல் மருத்துவ நிபுணர் வைத்தியர் மஞ்சுள காரியவசமும் ஓய்வு பெற்ற அரச சேவகர் எந்திரி பியசிறி களுபோவிலவும் கலந்து கொள்ளும் குளிர்ச்சங்கிலி பற்றிய ஓசோன் உரையாடல் இந்நிகழ்வின் பிரதான நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும். 

2020 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்புமருந்தேற்றும் பிரசாரங்கள் தொட்டு குளிரூட்டலின் முக்கியத்துவம் பற்றி, அதிலும் குறிப்பாக SARS-COV-II வைரசுக்கெதிரான உலகளாவிய தடுப்புமருந்துப் பிரசாரத்தை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையாக அமையும் குளிர்ச்சங்கிலி பற்றி   உலகம் விழிப்புணர்வடையத் தொடங்கியிருக்கிறது. முதலாவது தடுப்பூசிகளுக்குத் தேவைப்பட்ட மிகவும் தாழ்வான வெப்பநிலையுடைய சேமிப்பு வசதிகளானவை, தடுப்பு மருந்துகளைப் பாதுகாப்பதில்  குளிர்ச் சங்கிலியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள்  மத்தியில் ஏற்படுத்தியதோடல்லாமல் வெப்பநிலைக் கட்டுப்படுத்தப்பட்ட  சேவைகள் விநியோக ஒழுங்கமைப்புத் துறையுடன் தொடர்புடைய அனைவரையும் அணிதிரட்டவும் உதவியது. 

தடுப்புமருந்துகளுக்கான செலவு மற்றும் அச்செலவைத் தாங்கிக்கொள்ளும் வல்லமை ஆகியன அம்மருந்துகளைச் சேமிக்கவேண்டிய வெப்ப நிலையிலேயே தங்கியிருக்கின்றன. ஆதலினால் குறிப்பாக இலங்கையில் இக்குளிர்ச்சங்கிலி , அதன் தேவைகள்  மற்றும் சவால்கள் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியிருப்பது காலத்தின் தேவையாகும். 

உலக ஓசோன் தினமானது சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் உள்ளவர்களை சுற்றாடல் அமைச்சுடன் இணைத்து விழிப்புணவையூட்டுவதற்கான  வழிகோலாகக் அமைகிறது. வருடாந்தம் இத்தினத்தையொட்டி பல்வேறு போட்டிகளும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவ்வருடம் அனைவரும் பங்குபற்றக் கூடிய குறுக்கெழுத்துப்போட்டித் தொடர்களும், ஓசோன் உரையாடல் போட்டியும், மாணவர்களுக்கான ஓசோன் சுவரொட்டிப்போட்டியும்  நடாத்தப்பட்டது. அவற்றின் முடிவுகள் இந்த நிகழ்விலே அறிவிக்கப்படவிருக்கின்றன. 

இலங்கையைப் பொறுத்தவரையிலே வளிப்பதனாக்கல் மற்றும் குளிரூட்டல் துறையில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகும். சிறுவயதிலேயே ஆர்வத்தை ஊட்டாமல் அப்பங்களிப்பை எம்மால் அதிகரிக்க முடியாது. ஆதலினால் இலங்கை சாரணியர் சங்கத்துடன் இணைந்து ‘ஓசோன்  நண்பர்கள்’ சின்னத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஓசோன் படையைப்பாதுகாப்பதற்காக சாரணியர் சங்கத்தின் சகல குழுக்களிலுமுள்ள சிறுமியரை ஈடுபடுத்துவதற்கு சுற்றாடல் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இது எதிர்காலத்தில் வளிப்பதனாக்கல் மற்றும் குளிரூட்டல் துறையிலே பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் அவர்கள் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தவும் உறுதுணையாகக் கூடும். அதற்கான முதற்படியாக தத்தமது குழுக்களுக்கான ஒசோன் நண்பர்கள் சின்னத்தை வடிவமைக்கும் போட்டி சாரணியர் மத்தியில் நடாத்தப்பட்டது. இப்போட்டியின் முடிவுகளும் இந்நிகழ்விலேயே அறிவிக்கப்படவுள்ளன. 

ஓசோனை  நலிவடையச் செய்யும் வல்லமை அதிகமாகக் கொண்ட, அதேவேளை குளிரூட்டிகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த குளோரோபுளோரோகாபன்களின் பாவனையை  இலங்கை சில தசாப்தங்களுக்கு முன்னரே தடை செய்திருந்தது. ஓசோனை  நலிவடையச் செய்யும் வல்லமை குறைவாகவிருந்த ஐதரோகுளோரோபுளோரோகாபன்கள் குளோரோபுளோரோகாபன்களுக்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப்பட்டன.  அவை ஓசோன் படையில் செலுத்தும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அவற்றைக் கட்டம் கட்டமாக அகற்றுவதற்கு நாடுகள் பின்னர் உறுதி பூண்டன.  

ஓசோன் படையை நலிவு படுத்தும் வல்லமை பூச்சியமாகவுள்ள ஐதரோபுளோரோகாபன்கள் ஐதரோகுளோரோபுளோரோகாபன்களுக்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப்பட்டன. ஆயினும் அவை காபனீரொட்சைட்டை விட பல்லாயிரம் மடங்குகள் அதிகமாக பூகோளத்தை வெப்பமாக்க வல்லவை எனக் கண்டறியப்பட்டது.  அவை ஓசோன் படையைப் பாதிக்காத போதிலும் காலநிலை மாற்றத்துக்குக் காரணமான பூகோள வெப்பமயதாலுக்கு பங்களிக்கின்றன. ஆதலினால் இலங்கை உட்பட உலக நாடுகள் ஐதரோபுளோரோகாபன்களையும் கட்டம்கட்டமாகக் குறைப்பதற்கு உறுதி பூண்டுள்ளன. 

ஐதரோபுளோரோகாபன்களின் பாவனையால் ஏற்படும் பூகோள வெப்பமயமாதலின் தாக்கத்தைத் தணிப்பதற்காக  மரங்கள், காடுகளை வளர்க்க உதவும், தரமிழந்த நிலங்களை சீர்திருத்தும் சுதேச வழியான விதைப்பந்துகளை இந் நிகழ்விலே அறிமுகப்படுத்தவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கரடியனாறு தேசிய பாடசாலையின் மாணவர்கள், தேத்தாத் தீவினைச் சேர்ந்த ‘வேர்கள்’ தன்னார்வ அமைப்பின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் இணைந்து தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான றியாஸ் அஹமட் என்பவரின் தலைமை மற்றும்  வழிகாட்டலின் கீழ் விதைப்பந்துகளைத் தயாரித்து சுற்றாடல் அமைச்சுக்கு வழங்கியிருக்கிறார்கள். இது சுற்றாடல் அமைச்சு தன் பங்காளர்களுடன் அவ்விதைப்பந்துகளைப் பகிர்ந்து கொள்வதற்காகவாகும். விதைப்பந்துகள் தயாரிப்பது தொடர்பான ஆவணக் காணொளியும் இந் நிகழ்விலே ஒளிபரப்பப்படவுள்ளது. 

வயதுவேறுபாடு மற்றும் பின்புல வித்தியாசங்களின்றி பசுமைச் செயல் முறையில் ஈடுபட்டிருக்கும், தம்மைப்பற்றி ஒருபோதும் அவ்வாறு நினைத்திராத மக்களை  இணைப்பதற்கு விதைப்பந்து தயாரித்தலும் பகிர்ந்தளித்தலும் ஒரு சிறந்த முறையாகப் பார்க்கப்படுகிறது. ஒருமித்த கூட்டுச் செயற்பாடு இங்கு தான் ஆரம்பிக்கிறது. 

இப்பிரதான நிகழ்வு சிங்கள மொழி மூலம் நடாத்தப்படுகிறது என்பதுடன் யாவரும் உள்ளடக்கப்படுவதையும் எவரும் தவறவிடப்படாமல் இருப்பதையும்  உறுதி செய்வதற்காக ஒரே நேரத்திலே தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல உரைபெயர்ப்புகளுக்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.                                       

இந்த நிகழ்வுக்கான ZOOM இணையவழி நிகழ்விலக்கம்  891 9391 2387 ஆகும். அத்துடன் இந்த இணைப்பினூடாகவும் பதிவு செய்ய முடியும். https://us02web.zoom.us/webinar/register/WN_JdgADFuzTiC9B6lSofnZlw

அதுமட்டுமன்றி இந்நிகழ்வு @lankaozone எனும் முகவரியினூடாக முகநூலிலே நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும் . 

வளி வள முகாமைத்துவம் மற்றும் தேசிய ஓசோன் அலகு

சுற்றாடல் அமைச்சு 

இலங்கை

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.