மனநோய்க்கு சிகிச்சை போன்றே உளநல ஆலோசனையும் அவசியம் என்று சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
வர்த்தக மனோவியல் தொடர்பான சர்வதேச மாநாடு நேற்று (25) கொழும்பில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு குத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 25 விசேட மனநல மருத்துவர்களை நியமிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்காக அனைத்து மனநல மருத்துவர்களும் ஒன்றிணைந்து இருப்பது அவசியம். கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்தம் மற்றும் சுனாமி போன்ற காரணத்தினால் இலங்கையர் மத்தியில் உளபாதிப்பு காணப்படுகிறது. அவர்களது மன நல ஆரோக்கியம் தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்
உளநல சேவையானது இலங்கையின் மிக முக்கியமான துறையாக நான் பிரகடனப்படுத்துவேன். வளர்ச்சியடைந்துள்ள உலகில் உளநல பிரச்சினை மற்றும் மனத்தடுமாற்றம், அழுத்தம் என்பன அதிகமாக காணப்படுகின்றன. இலங்கையில் உளநல தடுமாற்றத்தை அரசியலிலும் கலாசாரத்திலும் காணக்கூடியதாக உள்ளது. இளைஞர் தொழிலின்மை காரணமாக உளநல பாதிப்பிற்குள்ளாகின்றனர் என்பதும் மிகப் பெரிய பிரச்சினையாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரபல அமெரிக்க உளவியல்துறை பேராசிரியர் மார்ட்டின் செலிகமன்கே உட்பட பலர் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 28ம் திகதி வரையில் நடைபெறும் இம்மாநாட்டில் 15 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.