பட்டதாரிகளின் தொழிலில்லா பிரச்சினைக்கு தீர்வாக கிழக்கில் உள்ள 1,700 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏராவூர் நகரசபையில் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை வரைவியில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு 20,000 அபிவிருத்தி உதவியாளர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அதற்கான விண்ணப்பங்களை தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு கோரியுள்ளது.
இந்து சமுத்திரத்தின் பொருளாதார கேந்திர நிலையமாக நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம். இந்த நோக்கத்தை அடைவதற்கு துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். சிங்கப்பூர் நிறுவனமான சுபானா ஜுரங் நகர அபிருத்தி நிறுவனத்திற்கு திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கப்பற்போக்குவரத்து, இறங்குதுறை, சுற்றுலாத்துறை, நிறுவனங்கள் மற்றும் நகர அபிவிருத்தித் திட்டங்களில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதனூடாக கிழக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவித்து பல தொழில்வாய்ப்புக்களை உருவாக்க முடியும். அதேபோல் உள்ளக விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யவும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. உல்லாசப்பிரயாணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். ஏற்கனவே மட்டக்களப்பு விமானநிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மேலும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளன என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.