வயம்ப பல்கலைகழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மருத்துவ பீடத்திற்குள் குளியாப்பிட்டிய தள வைத்தியசாலை உள்வாங்கப்படவுள்ளதாக போஷாக்கு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வயம்ப பல்கலைகழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிக்கப்படும் விடயம் தொடர்பில் நேற்று (16) அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
வயம்ப பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. இது தவிர சப்ரகமுவ பல்கலைகழகத்திலும் மொரட்டுவை பல்கலைக்கழகத்திலும் மருத்துவ பீடம் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குளியாபிட்டிய தள வைத்தியசாலையை மத்திய அரசாங்கம் பொறுப்பெடுத்து போதனா வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான பத்திரத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இவ்விடயத்தை விரைவுபடுத்த பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளதுடன் அக்குழுவில் சுகாதார அமைச்சு, வயம்ப பல்கலைக்கழகம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.