எதிர்வரும் 2018ம் ஆண்டு 2800 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான முன்மொழிவை முன்வைப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று போஷாக்கு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
களுத்துறை, பதுரலிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இத்திட்டம் எதிர்வரும் 2018ம் ஆண்டு வரவுசெலவில் உள்ளடக்கப்படவுள்ளது. அதேபோல், பௌதீக மற்றும் சமூக வளங்கள் சமமாக பகிரப்படுவதை உறுதிப்படுத்தி, பிரதான மருத்துவமனையில் காணப்படும் நெரிசலை குறைப்பதற்கு ஏனைய மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிறுவர், புற்றுநோய், சத்திரசிகிச்சை, தாய்சேய் நலன் பிரிவு, வாய் சுகாதாரம் போன்று வாட்டுத் தொகுதிகள், ஆய்வுகூடங்கள், மருந்து களஞ்சியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்கள் போன்ற வசதிகளை இம்மருத்துவமனைகளில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. தற்போது நோய் தடுப்பு நடவடிக்கைகள் 100 சதவீதமும், தங்கியிருந்து சிகிச்சை பெறும் சேவை 95 வீதமும் வெளிநோயாளர் சிகிச்சை சேவை 45 வீதமும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சுவ உதான' சுகாதார முகாமும் மொரபிட்டிய வீதிய பண்டார மகா வித்தியாலயத்தில் நடைபெற்றதுடன் அந்நிகழ்வின் போது பதுரலிய பிரதேச வைத்தியசாலைக்கு பல மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.