வரலாற்று சிறப்பு மிக்க கண்டி தலதா மாளிகை எசல பெரஹரா நிறைவுப் பத்திரம் நேற்று (08) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
வரலாற்று சிறப்பு மிக்க எசல பெரஹரா வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது என்பதை அறிவிக்கும் பாராம்பரிய முறையில் நிறைவுப் பத்திரம் தியவடன நிலமே நிலங்க தேலவின கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த பத்திரத்தை தலதா மாளிகையின் தியவடன நிலமே ஊர்வலமாக எடுத்து வர அவருடன் ஏனைய ஆலயங்களின் நிலமேக்களும் உடன் வந்தனர். ஜனாதிபதி மாளிகையின் வாயிலில் நிலமேக்களை வரவேற்று நிறைவுப் பத்திரத்தை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, பெரஹராவில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு பாரம்பரியமாக வழங்கப்படும் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
“சுற்றாடல் புனிதமானது தலதா மாளிகை கலாச்சாரம்” எனும் நூலை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஜனாதிபதியிடம கையளித்தார்.
மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, எஸ்.பீ. திஸாநாயக்க, பிரதியமைச்சர் அனுராத ஜயரத்ன, மாகாண அமைச்சர்கள் திலின பண்டார தென்னக்கோன், பந்துல யாலேகம, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாண்டோ மற்றும் கண்டி மாவட்ட அரச அதிபர் எச்.எம். ஹிட்டிசேக்கர உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.