கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வௌிநோயாளர் பிரிவு நிர்மாணிப்புப் பணிகள் நேற்று (08) ஆரம்பமாயின.
சீன நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இவ்வபிவிருத்தித் திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு போஷாக்கு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் இலங்கைக்கான சீன உயர்ஸ்தானிகர் லீ சியான் யங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
எதிர்வரும் 2020ம் ஆண்டு பூர்த்தி செய்யப்படவுள்ள இத்திட்டத்தினூடாக அதி நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட வௌிநோயாளர் பிரிவு நிர்மாணிக்கப்படவுள்ளது. 22 மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டப்பட்டது. நிர்மாணிப்புப் பணிகளை விரைவில் பூர்த்தி செய்யும் பொறுப்பை சீனா ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் சீன அரசின் நிதியுதவியுடன் இலங்கையில் ஏற்கனவே பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் நீதி மன்ற கட்டிடத் தொகுதி என்பன இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையை நினைவுகூர்ந்தார்.
இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிம், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சீன அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.