நாடளாவியரீதியில் அரச பாடசாலைகளில் க.பொ.த உயர்தரத்தில் கற்கும் மாணவர்களில் கலை, விளையாட்டு மற்றும் புத்தாக்கத்தில் ஆர்வமுடைய ஆயிரம் மாணவர்களுக்கு புலமைபரிசில் வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட குறித்த புலமைபரிசில் திட்டமானது 'சுபஹ' என்று பெயரிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் விசேட திறமைகளை விருத்தி செய்வதுடன் கல்வி இலக்குகளை அடையவும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கவும் மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
2017ம் ஆண்டு தரம் 12 கல்வி கற்கும் மேற்கூறப்பட்ட துறைகளில் விசேட திறமைகளை காட்டிய மாணவர்கள் குறித்த புலமைபரிசிலுக்கு விண்ணப்பிக்கலாம்.
இருபது மாத கால எல்லையுடன் 50,000 ரூபா பெறுமதியான இப்புலமைபரிசில் திட்டத்தினூடாக ஒரு மாணவனுக்கு மாதாந்தம் 2500 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.
ஒன்பது மாகாணங்களிலும் உள்ள கல்வித் திணைக்களத்தினூடாக 150 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டத்தில் ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இன விகிதாசாரம், மொழி ரீதியான தெரிவுகள் தவிர்க்கப்படுவதுடன் புலமை பரிசிலை பெற விரும்பும் மாணவர்கள் அதிபர்களூடாக வலய கல்வி அலுவலகங்களுக்கு செப்டெம்பர் மாதம் 6 ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவேண்டும். மேலதிக விபரங்களை வலய கல்வி அலுவலர்களூடாக அறிந்துகொள்ள முடியும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.