தேசிய இளைஞர் சபையின் 'கிராமத்துக்கு ஒரு கோடி' வேலைத்திட்டத்தின் கீழ் மாத்தளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 117 திட்டங்களுக்கு 175 இலட்சம் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது.
ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 3000 விசேட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள இந்த ' கிராமத்துக்கு ஒரு கோடி' திட்டத்தினூடாக கிராமிய மட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் அடையாளங்காணப்பட்டு பிரதேச இளைஞர் யுவதிகளின் பங்களிப்பில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் சபையின் உதவிப் பணிப்பாளர் எல்.கே. ஹேரத் தெரிவித்தார்.
ஒரு அபிவிருத்தித் திட்டத்திற்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதுடன் அவ்வபிவிருத்தி திட்டம் ஒவ்வொன்றின் பெறுமதி மூன்று இலட்சத்துக்கும் அதிகம் என்றும் உதவிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இத்திட்டத்தினூடாக கிராமங்களில் வாழும் இளைஞர் யுவதிகளின் திறமை, சவால்களுக்கு முகங்கொடுத்தல் மற்றும் பிரச்சினை முகாமைத்துவம் என்பன குறித்தும் பயிற்றுவிக்கப்படவுள்ளனர். இத்திட்டங்களில் சிறந்த 10 திட்டங்களை தெரிவு செய்து அதற்கு பங்களிப்பு வழங்கிய 10 அங்கத்தவர்களுக்கு விசேட சுற்றுலாவொன்றும் ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் உதவிப்பணிப்பாளர் எல். கே. ஹேரத் தெரிவித்தார்.