நாடு பூராகவும் உள்ள தாதியர் கல்லூரிகளை அபிவிருத்தி செய்ய போஷாக்கு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய இவ்வாண்டு களுத்துறை, காலி, அநுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள தாதியர் கல்லூரிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இத்தாதியர் கல்லூரிகள் 2500 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய்ப்படவுள்ளதாகவும் களுத்துறை, காலி மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் உள்ள தாதியர் கல்லூரிகளுக்கு ஐந்து மாடிகளைக் கொண்ட நிர்வாக கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவ்வமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கண்டி தாதியர் கல்லூரியின் புதிய கட்டிட நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (05) போஷாக்கு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இவ்வபிவிருத்தி பணிகள் நிறைவடைந்த பின்னர் அதிக எண்ணிக்கையான தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள முடியும் என்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை அமைந்துள்ள காணியில் தாதியர் பீடம் அமைக்கப்படவுள்ளதுடன் அதனூடாக வருடாந்தம் 2000 தாதியர் பட்டதாரிகளை உருவாக்க முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
தாதியர் பட்டப்படிப்பிற்கு வெளிநாடுகளில் அதிக கேள்வி நிலவுகின்றமையினால் அதற்கேற்றாற் போல் பயிற்சிகளும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.