நாட்டில் நிலவும் டெங்கு அபாயம் காரணமாக இன்று (03) தொடக்கம் மூன்று நாள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பாடசாலை, அரசாங்க நிறுவனங்கள் மற்றும் தனியார் இடங்களில் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பாக அதிக டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் உள்ள இடங்கள் கூடுதலாக அவதானிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, குருணாகலை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார அதிகாரிகள், முப்படை உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்ட சுமார் 2000 இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையானவர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் இடைக்கிடை பெய்யும் மழையின் காரணமாக டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் அதிகரிக்கின்றமையினால் சூழலை பாதுகாப்பாக வைக்கவேண்டியது பொதுமக்களின் கடமையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜூன் மாதததின் இரண்டாவது வாரத்தில் மட்டும் 8988 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் மூன்றாவது வாரத்தில் அவ்வெண்ணிக்கை 7949ஆகவும் நான்காவது வாரத்தில் 2484ஆகவும் குறைவடைந்துள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
2017ம் ஆண்டு ஆரம்பம் இன்று வரை சுகாதார அமைச்சு 176,333 இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன் அதில் 34,000 இடங்கள் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் வைத்திருந்தனர். அதில் 23,519 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 27, 28, 29ம் திகதிகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.