மாத்தறை மாவட்ட நீர் விநியோகத்திட்டத்தின் நான்காம் கட்ட ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஆறாம் திகதி நூபே சந்தியில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
நில்வளா கங்கை நீரைக் ஆதாரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள உத்தேச நீர் விநியோகத்திட்டத்தின் நான்காம் கட்டத்தினுல் தங்கல்ல, திஹகொட, தெவிநுவர, திக்வெல்ல, வெலிகம, வெலிபிட்டிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, கிரிந்த, அதுரலிய, பெலியத்த ஆகிய 12 பிரதேச செயலக பிரிவுகளில் அமைந்துள்ள 371 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆறு நிலகீழ் தாங்கிகள், 4 நீர் தாங்கி கோபுரங்கள், தாதுத்தடைகள் மற்றும் சுத்திகரிப்பு மத்திய நிலையங்கள் உள்ளடக்கப்பட்டு நிர்மாணிக்கப்படவுள்ள இவ்வுத்தேச நீர் விநியோகத் திட்டமானது 18,208 மில்லியன் ரூபா செலவில் மூன்று வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளது. நாளொன்றுக்கு 60,000 கண மீற்றர் கொள்வனவுச் செய்யக்கூடிய இத்திட்டத்தினூடாக 2,85000 பேர் தூய்மையான குடிநீரைப் பெறுவர்.
நிதி மற்றும் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரின் அழைப்பில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோக அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் இவ்வாரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.
தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனீ பெர்ணாண்டோபுள்ளே, அரச சுயமுயற்சி ஊக்குவிப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன, மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன, நகர திட்டமிடல் மற்றும் நீர்விநியோக அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி ஆகியோர் இந்நிகழ்வில் விசேட விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.