ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ரஷ்ய விஜயத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க பரிசான கண்டீய யுகத்தைச் சேர்ந்த வேலைப்பாடுகளுடன் கூடிய வாள் இன்று (02) தேசிய அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ளது.
அரிய அரச வம்சத்தினருக்கான ஆயுதம் மட்டுமன்றி வரலாற்று ரீதியாகவும் விஞ்ஞானரீதியாகவும் மிகவும் பெறுமதிமிக்க இவ்வாளானது கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 19ம் திகதி லண்டனில் சொன்த்பி ஏல விற்பனை நிலையத்தில் ஏலத்திற்காக காட்சிப்படுத்தப்பட்டது.
புராதன பொருட்கள் சேகரிப்பில் ஆர்வம் மிக்க ரஷ்ய ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதியை கௌரவிக்கும் வகையில் இதனை பரிசாக வழங்கியுள்ளார்.
19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இவ்வாளானது பல்வேறு வேலைப்பாடுகளுடன் பௌத்த மத சின்னங்கள் சிலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்டுள்ளதுடன் 480.5 mm நீளமும் 23.5 mm அகலமும் கொண்டுள்ளது. இவ்வாள் 23.5 mm நீளமும் 6.35 mm அகலமும் கொண்ட உரையினைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.