டொக்டர் நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையில் இன்று (01) முதல் இலவச மருத்துவ சேவை வழங்கப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனைக்கு நிர்வாகசபையொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சமர்ப்பித்து அனுமதி பெற்றார். அதற்கமைய நிர்வாகசபையின் தலைவராக முன்னால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அஜித் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை பணிப்பாளர் நாயகமாக டொக்டர் ரியல் அட்மிரல் என்.ஈ.டப்ளியு ஜயசேக்கர நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று தொடக்கம் மருத்துவமனையின் அனைத்து மருத்துவ சேவைகளும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும் அதற்கான மருந்துகள் நேற்று (31) மருந்து விநியோகப்பிரிவினூடாக மாலபே நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அறுநூறு கட்டில்களைக் கொண்ட இம்மருத்தவமனையில் அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் ஏற்கனவே சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மருத்தவமனை தேவைகளுக்காக 20 கோடி ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விசேட வைத்தியநிபுணர்கள், ஏனைய வைத்தியர்கள் இம்மருத்துவமனையில் பணியாற்றுகின்றனர். அது தவிர உள்ள ஆளணி பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இம்மருத்துவமனையானது கிழக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையாக எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.