முப்பத்தொரு ஆண்டுகளின் பின்னர் மட்டு. மாவட்டத்தின் வௌ்ளாவவௌி பிரதேசத்தில் பொலிஸ் நிலைய புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளியில் உள்ள பொலீஸ் நிலையமானது கடந்த யுத்தத்தினால் அழிவடைந்தது. இதனால் 1970 ஆண்டு முதல் வெல்லாவெளி பொலிஸ் நிலையமானது 11 தமிழர்களின் வீடுகளில் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதற்கு பின்பு சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் ஒரு கோடி ரூபா நிதியில் பழைய பொலிஸ் நிலையம் இருந்த அதே இடத்தில் கட்டிமுடிக்கப்பட்டு இன்று (29) திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மாதிபர் யாகொட ஆராச்சி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொலிஸ்மாதிபர் பூஜித ஜயசுந்தர பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு பொலிஸ் நிலையத்தினைத் திறந்து வைத்தார்.
புதிய பொலிஸ் நிலைய கட்டிடத்தொகுதி ஆயுத களஞ்சியம், பொறுப்பதிகாரி அலுவலகம், கடமை பொலிஸ் உத்தியோகஸ்தர் அலுவலகம், இரண்டு சிறைக்கூடங்கள், தொலைபேசி இயக்குனர் அலுவலகம், பொலிஸ் விடுதி அலுவலகம் போன்ற வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தினூடாக சுமார் முப்பத்தோராயிரம் பொதுமக்கள் சேவையை பெறுவர்.
பாராளுமன்றம், மாகாண சபை, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம், பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் என பல்வேறு இடங்களிலும் பேசப்பட்டுவந்த நிலையில் வெல்லாவெளிப்பிரதேச மக்களின் காணிகள், வீடுகள் விடுவிப்புடன் வெல்லாவெளி பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளமையானது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட், பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர்அலி, மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராஜா, ஞா.கிருஸ்ணப்பிள்ளை, பிரதி பொலீஸ்மாதிபர், மாவட்ட அத்தியட்சகர், உதவி பொலீஸ் அத்தியட்சகர்கள், மாவட்ட அரச அதிகாரிகள், மதப்பெரியார்கள் கலந்து கொண்டனர்.
LDA_dmu_batti