மீன்பிடி மற்றும் நீர்வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் 'குளத்துடன் ஒரு கிராமம்' வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாந்தோட்டை உடுகிரிவெல கிராமத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மற்பாண்ட பொருட்களை குடிசைக் கைதொழிலாக கொண்ட இக்கிராமத்தில் உள்ள 32 குடும்பங்களுக்கு அவர்களுடைய கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு இத்திட்டத்தினூடாக 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதுடன் இதற்கான குறித்த அமைச்சு 16 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த கிராமத்தில் உள்ள மண்ணை அரைத்து பதப்படுத்தும் இயந்திரம் கடந்த 15 வருடங்களாக செயலற்று இருப்பதனால் அதனை திருத்துவதற்கும் நிதி வழங்கவும் அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த இயந்திரத்தை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர், அதனை திருத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
'குளத்துடன் ஒரு கிராமம்', அபிவிருத்தி திட்டத்தினூடாக அனைத்து மீனவ கிராமங்களிலும் உள்ள மக்களுக்கு அழகிய சிறிய வீடொன்றை வழங்குவதே அரசின் நோக்கம் என்று தெரிவித்த அமைச்சர், மீனவ குடும்பங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இவ்வருடம் 1200 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.