இலங்கை தற்போது பல துறைகளிலும் அடைந்துவரும் முன்னேற்றங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பாராட்டைப் பெற்றுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் செயற்பாடுகள் பற்றிய உதவி பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் கூறியுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (21) இலங்கை வந்துள்ள அவர் பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவருடைய உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், வரட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை மாற்றங்களினால் எதிர்கொள்ள நேரிட்ட நெருக்கடிகள் மற்றும் வடக்கு, தெற்கு பிரதேசங்களில் காணப்படும் சில இனவாத சவால்களுக்கு மத்தியில் அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் உதவிப் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
தனது மூன்று நாள் விஜயத்தின்போது சமூகத்தின் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்ட ஜெப்ரி பெல்ட்மன் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக தான் போதிய புரிந்துணர்வுடன் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படாதவாறு நல்லிணக்கத்தை பலப்படுத்துவது தனது நோக்கமாகுமென ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.