மத்திய மாகாண கர்ப்பிணித்தாய்மார்களுக்கு உலர் உணவு கூப்பன் வழங்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் நேற்று (16) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
கர்ப்பிணித்தாய்மார்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மத்திய மாகாண ஆளுனர் அலுவலகத்தினால் இந்நிகழ்வுஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மத்திய மாகாணத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களுக்கு இந்த உலர் உணவு கூப்பன் மற்றும் போஷாக்கு பொதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் சில கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பொதிகள் ஜனாதிபதி வழங்கினார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் கர்ப்பிணித்தாய்மார்களுக்காக தயார்செய்யப்பட்டிருந்த பகற்போசன விருந்திலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.
திடீர் விபத்தில் உயிரிழந்த தனது மகனின் இதயத்தை இருதய சத்திர சிகிச்சைக்காக அன்பளிப்புச் செய்த உடுநுவரவைச் சேர்ந்த ஐ பி நந்தசேன மற்றும் இந்திரா கல்யாணி ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர். அவர்களின் சுகதுக்கங்களை விசாரித்த ஜனாதிபதி அவர்களின் செயலுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுனர் மார்சல் பெரேரா, வடமத்திய மாகாண ஆளுனர் பி பீ திசாநாயக்க, தென்மாகாண ஆளுனர் ஹேமக்குமார நாணயக்கார, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர் அனுராத ஜயரத்ன, மத்திய மாகாண மகளிர் விவகார அமைச்சர் திலின பண்டார தென்னகோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.