உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
உமா ஓயா திட்டத்தினூடாக மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் பதுளை மாவட்டச் செயலகததில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்திலேயே இத்தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
உமா ஓயா அபிவிருத்தித் திட்டத்தினால் பண்டாரவெல, எல்ல, வெலிமட, ஊவா பரணகம மற்றும் ஹப்புத்தலை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள 32 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழும் மக்கள் குடிநீர் பிரச்சினை, வீடுகளில் வெடிப்பு, மற்றும் வீடுகளை இழத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இப்பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்கவும் நட்டஈட்டை உரிய கால எல்லைக்குள் வழங்குவதற்கு தேவையான திட்டத்தை வகுக்கப்பட்டு பொறுப்புக்கள் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு கையளிக்கப்பட்டன.
அதற்கமைய, கால எல்லை மற்றும் பொறுப்பளிக்கப்பட்ட நிறுவன விபரங்கள் வருமாறு...
1. நட்டஈடு வழங்குவது தொடர்பில் மாவட்டச் செயலகத்தினூடாக வழங்கப்படவுள்ளதுடன் அதற்காக 300 மில்லியன் ரூபா நிதி மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
காலஎல்லை - 30.07.2017ம் திகதிக்கு முன்னர்
2. உமா ஓயா அபிவிருத்தியினால் பாதிக்கப்பட்ட சிறிய குளங்களை எதிர்வரும் மழைக்காலத்தில் புனரமைப்புச் செய்வது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு மற்றும் அடிப்படை செலவாக நூறு மில்லியன் ரூபாவுக்குள் நிதியை வழங்கவும் உரிய கால எல்லைக்குள் அபிவிருத்திப் பணியை பூர்த்தி செய்தல்.
கால எல்லை- 20.07.2017ம் திகதிக்குள் நிதியொதுக்கப்படல்
30.10.2017ம் திகதிக்குள் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்தல்.
பொறுப்பு - பிரதம செயலாளர் - ஊவா மாகாணம்
3. எதிர்வரும் வறட்சியான காலநிலையினை எதிர்நோக்குவதற்கு தற்போது உள்ள நீர்நிலைகளுக்கு மேலதிகமாக புதிய நீர்நிலைகளை அடையாளங்காணப்பட்டு பாரிய அளவிலான 6 குழாய் கிணறுகளை அமைத்தல்.
கால எல்லை - 31.08.2017ம் திகதிக்கு முன்னர்
பொறுப்பு - நீர் வளச்சபை
4. இதுவரை நீர்தாங்கிகள் வழங்கப்படாத அனைத்து குடும்பங்களுக்கும் நீர்தாங்கிகள் வழங்குதல்
கால எல்லை - 30.07.2017ம் திகதிக்கு முன்னர்
பொறுப்பு - பணிப்பாளர், பொது நிவாரண செயலகம்
5. நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ள நீர் வழங்கல் முறைகளை பூர்த்தி செய்து இணைப்புக் கட்டணம் இல்லாமல் நீர் வழங்கல்
கால எல்லை - 15.08.2017ம் திகதிக்கு முன்னர்
பொறுப்பு - நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை
6. தற்போது பயன்பாட்டில் உள்ள தண்ணீர் பௌசர்களுக்கு மேலதிகமாக 10 டிரக்டர் பௌசர்கள் வழங்குதல்
கால எல்லை - 15.07.2017
பொறுப்பு - உள்விவகார அமைச்சு
7. மீள்குடியேற்றத்திற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள கிரேக் தோட்டக் காணியை விரைவில் விடுவித்தல்
கால எல்லை - 15.07.2017ம் திகதிக்கு முன்னர்
பொறுப்பு - செயலாளர் - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, மாவட்டச் செயலகம்- பதுளை
8. பாதிக்கப்பட்டுள்ள புதிய வீடுகளுக்கான நட்டஈட்டுப் பணம் மதிப்பிடப்படும் பணிகளை விரைவில் பூர்த்தி செய்தல்
கால எல்லை - 17.08.2017
பொறுப்பு - பிரதான மதிப்பீட்டாளர்
9. பாதிக்கப்பட்டுள்ள கிராமிய வீதிகளை புனரமைப்புச் செய்வதற்காக 100 மில்லியன் ரூபா விசேட நிதி ஊவா மாகாணசபையிடம் வழங்குதல் மற்றும் உரிய அனைத்து புனரமைப்புப் பணிகளும் எதிர்வரும் மழை காலத்திற்கு முன்னர் பூர்த்தி செய்தல்.
கால எல்லை - நிதியொதுக்கும் பணி எதிர்வரும் 20.07.2017ம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்படல், புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் 30.11.2017ம் திகதிக்குள் பூர்த்தி செய்தல்.
பொறுப்பு - நிதியொதுக்கல் - தேசி வரவுசெலவு திணைக்களம்
புனரமைப்புப் பணிகள் - பிரதான செயலாளர், ஊவா மாகாணம், மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை
10. பாதிக்கப்பட்ட 18 பாடசாலைகளை விரைவில் புனரமைப்புச் செய்தல்
கால எல்லை - 30.11.2017 முன்னர்
பொறுப்பு - பிரதான செயலாளர், ஊவா மாகாணம்/ மாகாண கல்விச் செயலாளர், ஊவா மாகாணம்
11. பண்டாரவெல நீர் விநியோகத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியொதுக்கீடு
கால எல்லை - 2018 நிதியாண்டில்
பொறுப்பு - தேசிய வரவுசெலவு திணைக்களம்/ நீர் வளம் மற்றும் விநியோகச்சபை
12. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்போதுள்ள வீட்டுக்கடன், விளைச்சல் கடன் என்பவற்றை செலுத்துவதற்கு இரண்டு வருட காலத்தை வழங்குதல்
கால எல்லை - விரைவில்
பொறுப்பு- நிதியமைச்சு
13. மீள்குடியேற்றத்திற்காக தற்போது அடையாளங்கண்டுள்ள கிரேக் தோட்டத்தில் நிரந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும் வரையில் தற்போது வழங்கப்படும் மாதாந்த வாடகைக்குப் பதிலாக குறித்த காணிக்கு அருகாமையிலேயே தற்காலிக இருப்பிடங்களை அமைத்துக்கொடுத்தல்- - அக்குடும்பங்களின் விருப்பத்திற்கமைய இத்திட்டம் செயற்படுத்தப்படும்.
கால எல்லை - விரைவில்
பொறுப்பு - பிரதேச செயலகம், பண்டாரவெல
14. பதுளை மாவட்டத்தைப் போன்றே மொனராகலை மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படும் நிவாரண செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவதற்கு தேவையான வலுவூட்டலை பொது நிவாரண செயலகத்திற்கு வழங்குதல்.
கால எல்லை - 30.08.3017ம் திகதிக்கு முன்னர்
பொறுப்பு - செயலாளர், மகாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு