வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக அறவிடப்படும் தண்டப் பணத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை நேற்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமரத்ன அவ்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
போக்குவரத்துச் சட்டங்களை மீறுவதைக் குறைக்கும் வகையிலும், வீதி விபத்துக்களைத் தவிர்க்கும் நோக்குடனும் வீதி போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக குறைந்தபட்ச தண்டப்பணமாக ரூபா 25,000 வரை அதிகரிக்கப்பட வேண்டுமென 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் முன்மொழியப்பட்டிருந்தது.
இந்த முன்மொழிவுகளுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக ஜனாதிபதியினால் இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டது.
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க , போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சட்ட ஆலோசகர் சோபித்த ராஜகருணா, மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே. ஜகத் சந்திரசிறி, சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் (போக்குவரத்து) நந்தன முனசிங்க ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கும் குழுவினால் ஆராயப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையே நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அறிக்கை கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால த சில்வா, மஹிந்த சமரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.