கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள், மாகாண மட்ட அரசியல் தலைவர்களுக்கும் எதிர்வரும் 17ம் திகதி பயிற்சி செயலமர்வொன்றை நடத்த மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொழும்பு சுதந்திரசதுக்கத்தில் இடம்பெறவுள்ள இப்பயிற்சி செயலமர்வில் கழிவு முகாமைத்துவம், டெங்கு ஒழிப்பு என்பன தொடர்பில் மூன்று பிரிவுகளாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் எசி.டி. கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரைக்கும் நடைபெறவுள்ள இப்பயிற்சி செயலமர்வு நாடு தழுவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள மேற்கூறப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காணும் நோக்கில் நடத்தப்படுகிறது.
திண்மக் கழிவு தரம்பிரித்தல், டெங்கு கட்டுப்பாடு என்பன குறித்த காணொளி விளக்கம் வழங்கப்படவிருக்கிறது. அத்துடன் மாகாண ரீதியாக பிரிக்கப்பட்டு கழிவு முகாமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் பிரச்சினைக்கான கருத்திட்ட முன்மொழிவுகளை தெரிவிக்கவும் பங்குபற்றுநர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி செயலமர்வின் இறுதிக்கட்டமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், தேசிய, மாகாண, உள்ளூராட்சி மட்டத்தில் கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு கட்டுப்பாடு குறித்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பிலும் விளக்கமளிக்கப்படவுள்ளது.