சவால்களுக்கும் விமர்சனங்களுக்கும் பொறுப்பேற்க முடியாதென்றால் 2014 நவம்பர் மாதம் நான் வெளியேறியிருக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரிசி பொதி செய்யும் பைகளை உற்பத்தி செய்வதற்காக பொலநறுவை, வெலிக்கந்த, சிங்கபுர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொலிசெக் தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (09) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் வரவுள்ள சவால்களையும் விமர்சனங்களையும் துணிச்சலுடன் எதிர்நோக்கி நாட்டுக்கும் மக்களுக்குமாக அரசாங்கத்தின் பயணத்தை முன்னெடுப்பேன். மகாத்மா காந்தி எவ்வளவு அவமானங்களுக்கு உட்பட்ட போதிலும் இன்று அவரை முழு உலகமும் போற்றுகிறது. மிகவும் சிரமத்துடன் வாழ்ந்துவரும் சிங்கபுர விவசாயிகளின் வாழ்வாதார வழிகளைப் பலப்படுத்த இந்த தொழிற்சாலை உந்துசக்தியாகும்.
தேசிய பொருளாதாரத்தையும் மக்களது வாழ்க்கையையும் பலப்படுத்தும் இவ்வாறான தொழிற்சாலைகள் பல்வேறு துறையினராலும் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான பலத்தையும் தைரியத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் கைத்தொழிற்துறையினரை பலப்படுத்துவதற்காக பொலிசெக் உற்பத்திகளின் இறக்குமதியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுப்பேன்.
கடந்த அரசாங்கத்தினால் செய்யக்கூடியதாக இருந்தும் செய்யப்படாத பொலநறுவைக்கான வேலைகளை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருவதுடன் எதிர்காலத்தில் பொலநறுவை மாவட்டமும் இலங்கையின் அபிவிருத்தி அடைந்த மாவட்டங்களில் இணைந்து கொள்ளும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
திறந்து வைக்கப்பட்ட நியூ ரத்ன அரிசி தனியார் கம்பனியின் புதிய தொழிற்சாலை ஊடாக பொலநறுவை மாவட்டத்தின் 350 இளைஞர் யுவதிகளுக்கு நேரடியாகவும் 500 பேருக்கு மறைமுகமாகவும் தொழில்வாய்ப்பு கிடைக்கும்.
நினைவு பலகையை திரைநீக்கம் செய்து, தொழிற்சாலையை திறந்து வைத்த ஜனாதிபதி அங்கு கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார்.
அதன்பின்னர் ரத்ன பொலிசெக் நிறுவனத்தின் மாம்பழ பண்ணையிலும், அரிசி பொதியிடும் நிலையத்திலும் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார்.
நியூ ரத்ன நிறுவனத்தின் நீண்டகால பணியாளர்களுக்கான நினைவுப் பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கி கௌரவித்ததுடன் இந்நிகழ்வில் ஜனாதிபதிக்கு் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால கம்லத், சந்திரசிறி சூரியாராச்சி, மாகாண அமைச்சர் சம்பத் ஸ்ரீ நிலந்த, மாகாண சபை உறுப்பினர் என்.டி.சமந்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் நியூ ரத்ன குழும தலைவர் எல். மித்ரபால உள்ளிட்ட வர்த்தக கமூகத்தினரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
PMD