மல்வத்து ஓய நீர் திட்டப் பணிகளை இவ்வாண்டு இறுதியில் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன என்று வடிகாலமைப்பு மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இவ்வாண்டு அத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக 300 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மல்வத்து ஓய நீர்த்திட்டத்தை நிர்மாணிப்பதற்கான திட்டம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. எனவே இது தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதற்கு அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார மற்றும் வடிகாலமைப்பு அதிகாரிகள் எதிர்வரும் 10 மற்றும் 11ம் திகதிகளில் திட்டம் செயற்படுத்தப்படவுள்ள பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இத்திட்டமானது எதிர்வரும் 2020ம் ஆண்டு பூர்த்தி செய்யப்படவுள்ளதுடன் அதில் ஒரு இலட்சத்து அறுபதாயிரத்து நாநூறு கண அளவு நீரை சேகரிக்க முடியும். பெரும்போக, சிறுபோக காலப்பகுதியில் 36000 ஏக்கர் வயல் நிலத்திற்கும் மேலும் 2000 விளைச்சல் நிலத்திற்கு தேவையான நீரை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அநுராதபுரம், வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தினூடாக தொடர்ந்து வௌ்ளத்தினால் பாதிக்கப்படும் பிரதேசங்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதும் ஒரு நோக்கமாகும். மேலும் இத்திட்டத்தினூடாக நீர் மின்னுற்பத்தி நிலையம் ஒன்றும் செயற்படுத்தப்படவுள்ளதுடன் அதனூடாக 400 கிகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மல்வத்துஓய திட்டத்தினூடாக தூய்மையான குடிநீரை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதும் ஒரு நோக்கமாகும்.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ரஜரட்ட உட்பட பல பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க எதிர்பார்த்துள்ளதுடன் இத்திட்டத்தினூடாக குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக வடிகாலமைப்புத் திணைக்கள பொறியிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.