வீதி உணவு உற்பத்தியை ஒழுங்குப்படுத்தவதனூடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் சுகாதாரமான தேசிய உணவை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சு, தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை மற்றும் விவசாய பொறுப்பு நிதியம் என்பன பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளன.
இவ்வொப்பந்தத்தில் விவசாய அமைச்சின் செயலாளர் பி. விஜயரத்ன, விவசாய பொறுப்பு நிதியத்தின் தவிசாளராகவும் தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் தலைவர் தம்மிக்க பீரிஸ், பிரதேச அபிவிருத்தி வங்கிச் சார்பில் அதன் பொது முகாமையாளர் எ.டி. ஆரியபாலவும் கைச்சாத்திட்டுள்ளனர்.
தற்போது வீதி உணவை உண்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அத்தொழில் ஈடுபடுபவர் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. குறைந்த செலவில் கூடிய இலாபம் பெறுவதாலேயே பலர் இத்தொழிலில் ஆர்வம் காட்டுகின்றனர். எனினும் தூய்மை தொடர்பில் பிரச்சினை உள்ளது. எனவே இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை பெற்றுகொடுத்து தரமான உணவைத் தயாரிப்பதற்கும் கட்டண முறையில் தற்காலிக உணவு உற்பத்தி நிலையமொன்றை பெற்றுகொடுப்பதற்கும் வாய்ப்புக்களை வழங்குவதற்குமான திட்டமொன்றை இதனூடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் போஷாக்கான தேசிய உணவு உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இத்திட்டமானது முதற்கட்டமாக அநுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இங்கு தேசிய உணவு மட்டும் தயாரித்து விற்கப்படவுள்ளதுடன் ஆரம்பத்தில் இலவசமாக பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. மேலும் மாதாந்தம் கண்காணிப்பு செய்யப்படவுள்ளதுடன் அபிவிருத்திக்கு அவசியமான உதவிகள் வழங்குவதுடன் தரப்படுத்தலை மேற்கொண்டு முறையாக இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
இப்புதிய தேசிய உணவு உற்பத்திக்கு பிரதேச அபிவிருத்தி வங்கியினூடாக வட்டியற்ற கடன் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதுடன் மாதாந்தம் அல்லது வாராந்தம் கடனை செலுத்தும் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது. மேலதிகமாக விவசாய காப்புறுதிச் சபையினூடாக காப்புறுதித் திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டமானது அநுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டு நாடு முழுவதும் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.