ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றிய ஒஸ்டின் பெர்ணாண்டோவும் புதிய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கபில வைத்தியரத்னவும் கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் இன்று (04) நியமிக்கப்பட்டுள்ளனர்
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று காலை இந்நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கையின் சிரேஷ்ட நிருவாக சேவை உத்தியோகத்தரான ஒஸ்டின் பெர்ணான்டோ, ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் அரச நிர்வாகம் பற்றிய முதுநிலை பட்டதாரியாவார்.
பொலன்னறுவை மற்றும் நுவரெலிய மாவட்டங்களின் அரச அதிபராக கடமையாற்றியுள்ள அவர், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராகவும் செயற்பட்டுள்ளார். மேலும் புனர்வாழ்வு, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்களின் செயலாளராகவும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் பாதுகாப்பு செயலாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் கபில வைத்தியரத்ன ஜனாதிபதி அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
புதிய இராணுவ தளபதியாக பாதுகாப்புப்படை பிரதானி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவரும் இன்று ஜனாதிபதி அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
ஒஸ்டின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.