கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 3ம் திகதி வரையில் 67 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் கறுப்பு பட்டியலிடப்பட்டுள்ளன.
குறித்த முகவர் நிலையங்களுக்கெதிரான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் போது உரிய ஒத்துழைப்பு வழங்காமை, பணியகத்தில் பதிவு செய்யப்படாமல் நிறுவன முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புகின்றமை, போலியான ஆவணங்களை பணியகத்தில் சமர்ப்பித்தல், வெளிநாடு செல்லவுள்ளவர்களிடம் பண மோசடி செய்தல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்று ஊழியர்களை அனுப்பாமை போன்ற செயற்பாடுகள் காரணமாக குறித்த முகவர் நிலையங்கள் கறுப்பு பட்டியலிடப்பட்டுள்ள என்று பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இதுபோல் 61 முகவர் நிலையங்கள் கறுப்புப் பட்டியலிடப்பட்டன.
மேற்கூறப்பட்ட பிரச்சினைகளின் போது முகவர் நிலையங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரை தற்காலிகமாக குறித்த நிறுவனங்களை கறுப்புப்பட்டியலிடுதல், மோசடி செய்யப்பட்ட நிறுவனங்களினூடாக உரியவர்களுக்கு மீண்டும் பணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை வழங்குதல், வேலைவாய்ப்பு கோரிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தல் மற்றும் சட்டப் பிரிவினூடாக சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற நடவடிக்கைகளை பணியகம் மேற்கொள்கிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இதுவரை 702 முகவர் நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 355 முகவர் நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குருநாகலை மாவட்டத்தில் 130 முகவர் நிலையங்களும், கண்டி மாவட்டத்தில் 44 முகவர் நிலையங்களும், அநுராதபுரத்தில் 25 முகவர் நிலையங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், சில முகவர் நிலையங்கள் கைக்குழந்தைகள் இருக்கும் தாய்மாரை போலி ஆவணங்களை சமர்ப்பித்து வெளிநாடுகளுக்கு அனுப்ப முயற்சிக்கின்றன என்றும் அவ்வாறான மோசமான செயல் காரணமாக கடுந்தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகவர் நிலையங்களினூடாக வெளிநாடு செல்லும் புலம்பெயர் தொழிலாளர் தொடர்பில் தமது கடப்பாட்டை மீறி செயற்படுவார்களாயின் அதற்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சட்டத்தை மீறும் வகையில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகவர் நிலையங்களினால் நேர்மையாக பணியாற்றும் முகவர் நிலையங்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறைக்கு மதிப்பை பெற்றுக்கொடுப்பதற்கு தான் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்புக்காக தன்னால் இயன்றளவு பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.