நீண்ட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய 54 ஏக்கர் நிலப்பரப்பு இன்று (03) விடுவிக்கப்பட்டுள்ளது.
27 வருடங்களின் பின் தமது சொந்த இடத்துக்குத் திரும்பியுள்ள மக்கள் மயிலிட்டி துறை கண்ணகை அம்மன் கோவில் பகுதிகளில் மகிழ்ச்சியுடன் நடமாடி தமது சொந்த இடத்தை கண்டு மகிழ்ந்தனர்.
1990 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் நாள் பலாலியில் போர் வெடித்ததை அடுத்து, மயிலிட்டிப் பகுதியில் இருந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர். இடம்பெயர்ந்து 27 வருடங்கள் கடந்த நிலையிலேயே அம்மக்கள் தமது சொந்த மண்ணில் இன்று காலடியெடுத்து வைத்துள்ளனர்.
151 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட 54 ஏக்கர் காணியே இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதி மக்கள் அனைவரும் மயிலிட்டி துறைமுகத்திற்கு அருகில் காணி கையளிப்பு நிகழ்வு நடக்கும் இடத்திற்கு இராணுவ பஸ்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி தர்ஷன ஹெட்டியாரச்சியினால் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் குறித்த காணிக்கான உறுதிப்பத்திரங்களை உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தார்.
இதற்கான கையளிப்பு நிகழ்வின் பின்னர் மக்கள் தத்தமது சொந்த காணிகளை பார்வையிட சென்றனர்.
இதன் போது அங்குள்ள கோயில்களை முதலில் துப்பரவு செய்து வழிபட்டதுடன் உறவினர்களுடன் இணைந்து தங்களுக்கிடையே மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
வலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் உள்ள 54 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீள ஒப்படைக்க யாழ். படைகளின் தலைமையகம் சில தினங்களுக்கு முன்னர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.