தேர்தல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாக்காளர் தின நிகழ்வு இன்று (03) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல்கள் அலுவலக ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உள்ள டேர்பா மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பிடத்தில் வீதி நாடகம், விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி விழிப்பூட்டும் ஊர்வலம் மட்டக்களப்பு நகர வீதி ஊடாக மணிக்கூட்டுக்கோபுரம், காந்திப்பூங்கா, வழியாக, மட்டக்களப்பு தேர்தல்கள் அலுவலகம் வரை சென்றது. அதன் பின்னர் மண்முனை வடக்கு பிரதேச செலயகத்தில் அமைந்துள்ள டேர்பா மண்டபத்தில் பிரதான நிகழ்வுகள் நடைபெற்றன.
மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையுரையை அடுத்து, நிகழ்வுகள் ஆரம்பமாகின. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எஸ்.ரத்னஜீவன் எச்.கூல் சிறப்புரையாற்றினார். கிராம உத்தியோகத்தர் என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புட்டும் நாடகம் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தினால் அரங்கேற்றப்பட்டது.
1983ஆம்ஆண்டு மட்டக்களப்பு தேர்தல்கள் அலுவலகத்திற்கு ஜுலைக்கலவரம் காரணமாக வரமுடியாமல் 1984ல் திருகோணமலைக்குச் செல்லாமல் மட்டக்களப்புக்கு வந்திருந்தால் நான் இப்போது தமிழில் பேசியிருப்பேன் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கவலை தெரிவித்தார்.
ஆண், பெண், இன, மத, மொழி, படித்த, படிக்காத, பணக்கார, வறியவர்கள் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் பொதுவானதே வாக்குரிமையாகும். 18 வயதான ஒவ்வொருவரும் தமது உரிமையை பெற்றுக் கொள்ளவேண்டும். கட்டாயமாகக்கிடைக்கின்ற மரணத்தினை நாம் விரும்புவதில்லை. ஆனால் வாக்கினை விரும்புகிறோம். வாக்கின் மூலம் சரியான தலைவர்களை உருவாக்கினால் நாம் வள்ளம் மூலம் அவுஸ்திரேலியாய செல்லத் தேவையில்லை.
வாக்குப் புத்தகத்தில் பெயரிரிருந்தால் வாக்குண்டு. பெயரில்லாவிட்டால் வாக்கில்லை. நல்ல அபிவிருத்தி, சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்குக்கூட வாக்கு முக்கியம் பெறுகிறது என்று இந்நிகழ்வில் உரையாற்றிய ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ்.ரத்னஜீவன் எச்.கூல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் வாக்காளர் தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியல் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் , மாற்றுத்திறனாளிகளின் அரசியல் உரிமை தொடர்பான ஆவணம் தேர்தல்கள் ஆணையாளரிடம் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்தினாளிகள் சம்மேளத்தினால் கையளிக்கப்பட்டன.
LDA_dmu_batti