மரபணு சிகிச்சைப் பிரிவொன்றை ஆரம்பித்து அதனூடாக புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று (29) இடம்பெற்ற 'சுவசேவா' நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
புற்றுநோயாளர்களுக்கு மரபணு தொழில்நுட்பத்தினூடாக சிகிச்சை வழங்குவதற்காக 'கைருடா' என்ற மருந்து அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதனூடாக புற்றுநோயை மரபணுவுக்கு எதிராக சிகிச்சை வழங்கு முடியும் என்றும் உயிரைப் பறிக்கும் தொற்றா நோய்களுக்குள் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் உள்ளது
மேலும், இன்னும் சில வருடங்களில் உயிரைக் கொல்லும் தொற்றா நோய்களில் புற்றுநோய் முதலிடத்திற்கு வரக்கூடும். மரபணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்குவதனூடாக நோயாளி குணமடைவதுடன் மருந்து உற்பத்தியும் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்கவேண்டியேற்படும். டெப்ஸிமாட் போன்ற புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் காணாமல் போகக்கூடும். மரபணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சை வழங்கக்கூடிய 7 மருத்துவர்களேயுள்ளனர். அவர்களை அழைத்து தனியான பிரிவொன்றை ஆரம்பித்து சிகிச்சை முறையை ஆரம்பிக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.