வாக்குரிமையை பாதுகாக்கும் தேசத்தை கட்டியெழுப்புவது அவசியம் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் செயன் முறை மற்றும் வாக்களிப்பு சட்டம் என்ற தலைப்பில் அரச அதிகாரிகளுக்கான செயலமர்வு அநுராதபுர மாவட்டச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவே ஒரு நாட்டில் தேர்தல் நடத்தப்படுகிறது. நேர்மையான தேர்தலொன்றை நாட்டில் நடத்தவேண்டுமாயின் மனசாட்சிக்கமைய அதிகாரிகள் செயற்படவேண்டும். நிதிச்செலவிடல், நீதிமன்றில் சாட்சி கூறுதல் என்பன மிகப் பெரிய பிரச்சினையில்லை. எனினும் மனசாட்சிக்கு பயந்து செயற்படாவிடின் அது சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
நாட்டில் தேர்தல் நடத்தப்படும் போது வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் ஆதரவு ஆதரவு வழங்குகின்றனர். இது எமது நாட்டில் காணப்படும் விசேட விடயம் ஆகும். எனினும் அந்த வாக்காளர்கள் நேர்மையானதும் சுதந்திரமானதுமான வாக்களிப்பை மேற்கொள்வதற்கான பின்புலத்தை உருவாக்க வேண்டும் என்று அரசியல் கட்சி வேட்பாளர்களிடம் கோருகின்றனரா என்பதை கூற முடியாது. அவ்வாறு கேட்காத காரணத்தினால் வேட்பாளர் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்கு அவசியமான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவதில்லை என்றும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் ஆர்.எம். வன்னிநாயக்க, உதவி ஆணையாளர் நாயகம் அசங்க ரத்நாயக்க, இருநூறிற்கும் மேற்பட்ட மாவட்ட அரச நிறுவனங்களின் உயரதாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.