இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சாந்துவுக்கும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (29) யாழ் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை இந்திய நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதுடன் இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப அறிவை இலங்கைக்கும் பெற்றுக்கொடுப்பதாகவும் எதிர்காலத்தில் இலங்கைக்கே உரித்தான வர்த்தகத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் அதில் மீன்பிடித்துறை பிரதான இடத்தை வகிப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தீவிரமாக அவ்விருவரும் கலந்துரையாடினர். மேலும் வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு தெளிவான திட்டமொன்று அவசியம் என்றும் மத்திய அரசு மற்றும் மாகாணசபைகள் ஆகியன ஒன்றிணைந்து வடக்கின் அனைத்து பிரிவுகளையும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டமொன்றை வகுக்க வேண்டும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார்.
தீவு மனநிலையில் இருந்து வெளியேறி அபிவிருத்தியடைந்த உலகத்துடன் தொடர்புகொண்டு செயற்படவேண்டும் என்று தெரிவித்த உயர்ஸ்தானிகர் இந்திய சந்தையுடன் இணைந்து கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுமாறும் இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.
சூர்ய சக்தி, கால்நடை முகாமைத்துவம், நீர் முகாமைத்துவம், உணவு தயாரிப்பு, விவசாய செயற்பாடுகள் மற்றும் அதனுடன் அனைத்து துறைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் இரு நாடுகளுக்கிடையில் சிறந்த வர்த்தக சந்தை மேம்படுத்துவதனூடாக வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.