பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான ஹியுமன் பெப்பிலோமா வைரஸ் தடுப்பு மருந்தை தேசிய நோயெதிர்ப்பு திட்டத்திற்குள் அறிமுகப்படுத்துவதற்கு சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர ராஜித்த சேனாரத்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதற்கமைய, சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவினால் இத்தடுப்பு மருந்து தேசிய நோயெதிர்ப்பு திட்டத்திற்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
இலங்கையில் சுமார் ஆயிரம் மத்திம வயது பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர் என்று வைத்தியசாலை தரவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான இரு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. புற்றுநோயின் ஆரம்பக்கட்டத்தை கண்டறியும் பரிசோதனை மற்றும் நோய் ஏற்படுவதற்கு ஏதுவாக ஹியுமன் பெபிலோமா வைரஸ் தொற்றை தடுக்கும் எச்.பி.வீ தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தல் என்பன அவையாகும். இதில் புற்றுநோயை ஆரம்பக்கட்டத்தில் கண்டறியும் பெப் பரிசோதனை இலங்கையில் கடந்த 1996ம் அண்டு தொடக்கம் 35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு செய்துக்கொள்வதற்கான வசதிகள் காணப்படுகின்றன.
கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான எச்.பி.வீ தடுப்பு மருந்தை எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் இலங்கையில் தேசிய நோயெதிர்ப்புத் திட்டத்தினூடாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஆறாம் ஆண்டில் கற்கும் 10 வயது பூர்த்தியடைந்த பெண் பிள்ளைகளுக்கு பாடசாலை தடுப்பு மருத்து திட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தை தேசிய நோயெதிர்ப்புத் திட்டத்தினூடாக அறிமுகப்படுத்தப்படுவதனூடாக எதிர்காலத்தில் கர்ப்பப்பை புற்றுநோயை நாட்டில் முற்றாக ஒழிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.