இஸ்ராயேல் நாடு இலங்கைக்கு வழங்கியுள்ள விவசாயத்துறைசார் வேலைவாய்ப்பை பாதுகாக்கவேண்டி பொறுப்பு இலங்கையரிடம் உள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இஸ்ராயேலில் தொழில்வாய்ப்பை பெற்று செல்லவுள்ள 38 இலங்கையருக்கான விமான டிக்கட்டுக்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த 2015ம் ஆண்டு 85 தொழில்வாய்ப்புக்களை மாத்திரமே இஸ்ரேல் இலங்கைக்கு வழங்கியிருந்தது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தனையடுத்து அந்நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கலந்துரையாடல்களையடுத்து வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
2016ம் ஆண்டு இஸ்ரேல் 369 விவசாயத்துறைசார் வேலைவாய்ப்புக்களை இலங்கைக்கு வழங்கியது. எனினும் இவ்வாண்டு (2017) 239 தொழில்வாய்ப்புக்களை மாத்திரமே வழங்கியுள்ளது. தொழிற்காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக அந்நாட்டில் இலங்கையர்கள் தங்கியிருப்பதனால் இஸ்ரேலில் தொழில்வாய்ப்பை பெறும் வாய்ப்பை இழக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதுடன் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.
இஸ்ரேலில் விவசாயத்துறையில் வேலைவாய்ப்பை பெறும் இளைஞர்கள் அவர்களுடைய சேவைக்காலத்தில் தமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்குரிய அதிக தொகையான நிதியை ஈட்டுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. சேவைக்காலத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்து நாடு திரும்பும் இலங்கையருக்கு மீண்டும் அங்கு சென்று தொழில்புரிவதற்கான வாய்ப்பை பெறுவர். எனவே ஒப்பந்த காலம் நிறைவுற்றவுடன் நாடு திரும்புவது அவசியம் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் லஷ்மன் அபேகுணரத்ன, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் டப்ளியு.எம். வன்சேக்கர, பிரதி பொது முகாமையாளர் பீ.பீ வீரசேக்கர உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.